ஓபனா சொல்லாமல், நாசுக்காக சொன்ன எம்.எஸ்.தோனி; எப்படியாவது டிராபியை கைப்பற்ற போராடும் சிஎஸ்கே!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் தனக்கு விடை கொடுக்க வந்த ரசிகர்களுக்கு நன்றி என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
எம்.எஸ்.தோனி
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 32ஆவது ஐபிஎல் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் ஆடியது. ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். இதில், கெய்க்வாட் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கான்வே 56 ரன்களில் வெளியேறினார்.
சிஎஸ்கே
இதையடுத்து ஜோடி சேந்த அஜின்க்யா ரஹானே மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து கொல்கத்தா அணியினரின் பந்து வீச்சை தெறிக்கவிட்டனர். இதில் துபே 21 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
அடுத்து வந்த ஜடேஜா 18 ரன்களில் வெளியேற கடைசியாக தல தோனி களமிங்கினார். அவர், 2 ரன்கள் எடுக்க கடைசி வரை களத்தில் இருந்த ரஹானே 29 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.
எம்.எஸ்.தோனி ஓய்வு எப்போது?
இறுதியாக சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜேசன் ராய் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 53 ரன்கள் சேர்த்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
எம்.எஸ்.தோனி - பிரியாவிடை போட்டி
இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய எம்.எஸ்.தோனி கூறியிருப்பதாவது: ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. அதிக எண்ணிக்கையில் வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த முறை கேகேஆர் ஜெர்சியில் வருவார்கள். அவர்கள் எனக்கு பிரியாவிடை கொடுக்க முயற்சிக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆதலால், ஸ்பின்னர்கள் அவர்களது வேலையை சரியாக செய்ய முடிந்தது.
தோனி ஃபேர்வெல்
ஆரம்பத்திலேயே தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலமாக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதன்படியே நடந்தது. நாங்களும் வெற்றி பெற்றோம் என்று கூறியுள்ளார். இதுவரையில் 4 முறை சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், 5ஆவது முறையாக எப்படியாவது சாம்பியன் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. தோனியும் அதற்காக அணியை பக்குவப்படுத்தி விளையாட வைக்கிறார். எப்படியும் இந்த ஐபிஎல் இறுதிக்குள்ளாக தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.