IPL 2023: மேட்ச்சுக்கு முன் ரஹானேவிடம் ஒரேயொரு விஷயம் தான் சொன்னேன்.. மனுஷன் பட்டைய கிளப்பிட்டான் - தோனி
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அஜிங்க்யா ரஹானேவின் அதிரடி அரைசதத்தால் சிஎஸ்கே அபார வெற்றி பெற்ற நிலையில், போட்டிக்கு முன் அஜிங்க்யா ரஹானேவை ஊக்கப்படுத்தியது குறித்து கேப்டன் தோனி கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதிய போட்டி மும்பை வான்கடேவில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 157 ரன்கள் மட்டுமே அடித்தது.
158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணி 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது. ருதுராஜ் கெய்க்வாட் நன்றாக ஆடி 40 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் அசத்தியது அஜிங்க்யா ரஹானே தான். இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஒதுக்கப்பட்ட ரஹானேவிற்கு கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடும் லெவனில் இடம் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய வேட்கையில் இருந்த ரஹானே, சிஎஸ்கேவிற்காக ஆட கிடைத்த முதல் வாய்ப்பிலேயே 19 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக அதிவேக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 16 பந்தில் அரைசதம் அடித்த ரெய்னா தான் சிஎஸ்கேவிற்காக அதிவேக அரைசதம் அடித்தவர். அவருக்கு அடுத்த இடத்தை பிடித்தார் ரஹானே. சிஎஸ்கேவிற்காக ஆடிய முதல் போட்டியிலேயே சாதனை அரைசதம் அடித்தார் ரஹானே. தனது அபாரமான பேட்டிங்கால் சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்து ஆடும் லெவனில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்தார்.
மற்ற அணிகளில் ஆடும்போது சரியாக ஆடாத வீரர்கள் கூட, தோனியின் கேப்டன்சியில் நன்றாக ஆடுவார்கள். ஒரு வீரரிடமிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர வல்லவர் தோனி. அந்தவகையில், ரஹானேவின் பேட்டிங் குறித்து பேசிய தோனி, போட்டிக்கு முன் ரஹானேவிடம் ஒரு விஷயம் தான் சொன்னேன்.. எந்த அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸாக ஜாலியாக பேட்டிங் ஆடுங்கள் என்று மட்டும்தான் ரஹானேவிடம் சொன்னதாக தோனி கூறியுள்ளார்.