மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும் ரோஹித், கோலி..! பிசிசிஐ கள்ள மௌனம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. டி20 உலக கோப்பைக்கு பின் வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிரான டி20 தொடர்களில் ஆடாத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது, அவர்களது டி20 கெரியர் முடிந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது.
2021 டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை, 2022 டி20 உலக கோப்பை என கடந்த 2 ஆண்டுகளில் 3 ஐசிசி தொடர்களில் தோற்று இந்திய அணி ஏமாற்றமளித்தது. சரியான அணி தேர்வின்மை, பவர்ப்ளேயில் இந்திய அணி ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாளாதது, ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாதது ஆகியவைதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன.
எனவே சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி ஆகிய அதிரடி இளம் வீரர்களை அணியில் எடுத்து, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் வலுவான அணியை கட்டமைத்து, ஆக்ரோஷமான அணுகுமுறையை கையாள வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி, 2022 டி20 உலக கோப்பைக்கு பின் அதைத்தான் செய்துவருகிறது. 2024 டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே வலுவான அணியை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
டி20 உலக கோப்பைக்கு பின் நடந்த வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆடவில்லை. கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் ரோஹித் சர்மா மற்றும் கோலி இடம்பெறவில்லை. கேஎல் ராகுல் அணியில் இடம்பெறாததற்கான காரணத்தை தெரிவித்த பிசிசிஐ, ரோஹித் மற்றும் கோலி இடம்பெறாததற்கான காரணத்தை கூறவில்லை. எனவே அவர்கள் இருவரது டி20 கெரியர் முடிந்துவிட்டது என்பதை மறைமுகமாக உணர்த்தும் விதமாகவே பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்தின் செயல்பாடுகளும் சூழலும் உணர்த்துகிறது.
இந்திய டி20 அணி:
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்.