- Home
- Sports
- Sports Cricket
- IND vs PAK: பீல்டிங்கில் பாகிஸ்தானாக மாறிய இந்திய வீரர்கள்! 4 கேட்ச்கள் டிராப்! இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
IND vs PAK: பீல்டிங்கில் பாகிஸ்தானாக மாறிய இந்திய வீரர்கள்! 4 கேட்ச்கள் டிராப்! இந்தியாவுக்கு சவாலான இலக்கு!
Asia Cup 2025: India vs Pakistan: ஆசிய கோப்பை தொடரின் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 171 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் பீல்டிங்கும், பும்ராவின் பந்துவீச்சும் மிக மோசமாக இருந்தது.

Asia Cup 2025: India vs Pakistan Super 4
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் ஃபக்கர் ஜமான் ஹர்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் அவுட்டாகி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த எளிதான கேட்சை அபிஷேக் சர்மா தவற விட்டார்.
பாகிஸ்தான் தொடக்கத்தில் அதிரடி
ஆனாலும் ஃபக்கர் ஜமானுக்கு அதிர்ஷ்டம் நிலைக்கவில்லை. அவர் 9 பந்தில் 15 ரன் எடுத்து பாண்ட்யா பந்தில் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனார். அதே வேளையில் மற்றொரு தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிரடியில் வெளுத்துக் கட்டினார். பும்ரா பந்தில் பவுண்டரிகளாக ஓட விட்டார். அவருக்கு சைம் அயூப் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் ரன் ரேட் ஜெட் வேகத்தில் சென்றது.
சாஹிப்சாதா ஃபர்ஹான் அரை சதம்
அணியின் ஸ்கோர் 10 ஓவரில் 93 ஆக உயர்ந்தபோது ஓரளவு நன்றாக விளையாடிய சைம் அயூப் (17 பந்தில் 21 ரன்) துபே பந்தில் அபிஷேக் சர்மாவிடம் கேட்ச் ஆனார். இதன் பிறகு ஹுசைன் தலாத்தும் (10) குல்தீப் யாதவ் பந்தில் நடையை கட்டினார். ஆனால் மறுபக்கம் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசிய சாஹிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்து அசத்தினார். 45 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன் அடித்த அவர் துபே பந்தில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் 171 ரன்கள்
இதன்பிறகு குல்தீப், வருண் சக்கரவர்த்தி நெருக்கடி கொடுத்ததால் பாகிஸ்தான் ரன் வேகம் குறைந்தது. முகமது நவாஸ், கேப்டன் சல்மான் ஆகா அதிரடியாக ஆட முயன்றும் முடியவில்லை. தடுமாற்றத்துடன் ஆடிய முகமது நவாஸ் (19 பந்தில் 21 ரன்) தனது மெத்தனத்தால் ரன் அவுட் ஆனார்.
கடைசியில் ஃபஹீம் அஷ்ரஃப் சில அதிரடி ஷாட்களை ஆடி அணி 170 ரன்களை கடக்க வைத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 171 ரன்கள் எடுத்தது. ஃபஹீம் அஷ்ரஃப் (8 பந்தில் 2 சிக்சர், 1 பவுண்டரியுடன் 20 ரன்), சல்மான் ஆகா (17) களத்தில் இருந்தனர், இந்திய அணி தரப்பில் ஷிவம் துபே 2 விக்கெட்டும், குல்தீப், வருண் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணியின் பீல்டிங் மோசம்
இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. அபிஷேக் சர்மா 2 கேட்ச்களையும், குல்தீப், சுப்மன் கில் 1 கேட்ச்சையும் தவற விட்டனர். மேலும் சில ஒன்றிரண்டு ரன்களையும் தவற விட்டனர். வழக்கமாக பாகிஸ்தான் அணி தான் பீல்டிங்கில் மிக மோசமாக செயல்படும்.
ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தானை போன்று மோசமாக பீல்டிங் செய்தனர். இதேபோல் பும்ராவின் பந்துவீச்சும் மோசமாக இருந்தது. 4 ஓவர் வீசிய பும்ரா 45 ரன்கள் விட்டுக்கொடுத்தாரே தவிர, ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை.