#AUSvsIND வெற்றி கோப்பையை தூக்கும் முன் நேதன் லயனை கௌரவப்படுத்திய ரஹானே.! பண்பால் பல கோடி இதயங்களை வென்ற ரஹானே
ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, வெற்றி கோப்பையை பெறுவதற்கு முன், எதிரணி வீரராக இருந்தாலும் கூட, நேதன் லயனின் சாதனையை கருத்தில்கொண்டு அவரை கௌரவப்படுத்திய செயல், ஆஸி., வீரர்கள், ரசிகர்கள் என அனைவரது இதயங்களையும் வென்றது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. அந்த போட்டியில் 328 ரன்கள் என்ற இலக்கை ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட்டின் அபாரமான பேட்டிங்கின் உதவியுடன் எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய டெஸ்ட் தொடரை வென்றது.
இந்த பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி ஆஸி., ஸ்பின்னர் நேதன் லயனுக்கு 100வது டெஸ்ட் போட்டி. சமகாலத்தின் லெஜண்ட் ஸ்பின்னரான லயனுக்கு 100வது டெஸ்ட் சரியாக அமையவில்லை. ஆனாலும், 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டிய நேதன் லயனை ரஹானே கௌரவப்படுத்திய செயல், ரஹானே மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது.
தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டனான ரஹானே, வெற்றி கோப்பையை வாங்குவதற்கு முன்பாக, நேதன் லயனை அழைத்து, இந்திய அணியின் சார்பாக கேப்டன் என்ற முறையில் கையெழுத்திட்ட இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியை நேதன் லயனுக்கு வழங்கி கௌரவித்தார். அதன்பின்னர் தான் வெற்றி கோப்பையையே வாங்கினார்.