இந்திய அணியில் இடம் இல்ல.. வர்ணனையில் வேணா எனக்கு அருகில் ஒரு இடம் இருக்கு! தினேஷ் கார்த்திக்கை ஜடேஜா நக்கல்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் இல்லை; ஆனால் அவர் ஒரு நல்ல வர்ணனையாளர் என்ற முறையில் எனக்கு அருகில் அவருக்கு ஒரு இடம் இருக்கிறது என்று முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான அஜய் ஜடேஜா கருத்து கூறியிருக்கிறார்.
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், அண்மைக்காலமாக இந்திய டி20 அணியில் ஃபினிஷராக தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
ஆனால் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் சிலர் அவரை ஃபினிஷராக ஏற்றுக்கொள்ளவில்லை. கடைசி 5 ஓவர்களில் அடித்து ஆடுபவர் ஃபினிஷர் இல்லை. ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்று முடித்து கொடுப்பவரே ஃபினிஷர். எனவே தினேஷ் கார்த்திக் ஃபினிஷரே இல்லை. அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். எனவே ஆடும் லெவனில் இடம் கிடைக்காத ஒரு வீரரை அணியில் எடுப்பதற்கு எடுக்காமலேயே இருக்கலாம் என்பதே ஸ்ரீகாந்த் போன்றோரது கருத்து.
ஆனால் ஆசிய கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருக்கிறார். எனவே டி20 உலக கோப்பைக்கான அணியிலும் அவர் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் ஆசிய கோப்பையில் ஆடுவதை பொறுத்தே அது உறுதியாகும்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி குறித்து பேசியுள்ள அஜய் ஜடேஜா, எனது அணியில் ரோஹித், கோலி, ராகுல், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் கண்டிப்பாக இருக்கும் வீரர்கள். தினேஷ் கார்த்திக்கிற்கு எனது அணியில் இடம் இல்லை.
ஜடேஜா - அக்ஸர் படேல் ஆகிய இருவரில் யாரை ஆடவைக்கப்போகிறார்கள் என்பது மட்டுமே கேள்வி. நவீன கால கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திகிற்கு இடம் இல்லை. கோலியே ஃபார்மில் இருப்பதை பொறுத்துத்தான் அவரது இடம் உறுதியாகும் என்று அஜய் ஜடேஜா கருத்து கூறியுள்ளார்.