- Home
- Spiritual
- Vinayagar Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை செய்ய நல்ல நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்
Vinayagar Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி அன்று பூஜை செய்ய நல்ல நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்
விநாயகர் சதுர்த்தி என்பது இந்துக்கள் கொண்டாடும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் நேரம், வழிபாட்டு முறைகள் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி 2025 வழிபாட்டு முறைகள்
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு 26, 2025 பிற்பகல் 2:22 மணிக்கு சதுர்த்தி திதி தொடங்குகிறது. இந்த திதி ஆகஸ்ட் 27 2025 பிற்பகல் 3:52 மணிக்கு நிறைவடைகிறது. விநாயகர் பிரதிஷ்டை மற்றும் பூஜை செய்வதற்கான சுபமுகூர்த்தம் ஆகஸ்ட் 27, 2025 காலை 11:06 முதல் பிற்பகல் 1:40 வரை உள்ளது. மாலை வணங்கும் வழக்கம் உள்ளவர்கள் 6 மணிக்கு மேல் பூஜையைத் தொடங்கலாம். இந்த சுப நேரத்தில் பூஜை செய்வது மிகவும் விசேஷமானது. விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை மனமுருகி வழிபடுபவர்களுக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும் அதை விக்னேஸ்வரர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை.
விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யும் முறை
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வாங்கி வர வேண்டும். வீட்டை சுத்தம் செய்து பூஜை அறை அல்லது வீட்டின் ஹாலில் குறிப்பிட்ட இடத்தை அலங்கரிக்க வேண்டும். ஒரு மணப்பலகை போட்டு அதில் மாக்கோலம் வரைய வேண்டும். மணப்பலகைக்கு கீழேயும் கோலமிட வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டி, வாழைக்கன்றுகளை இருபுறமும் கட்ட வேண்டும். மணப்பலகையில் விநாயகர் சிலையை வைத்த பின்னர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து அருகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை, சிவப்பு செவ்வந்தி பூக்கள், மல்லிகை பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
படையல் மற்றும் பூஜை முறைகள்
விநாயகர் சிலைக்கு முன்பாக வாழை இலை விரித்து அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், அவல், பொரி, இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றை படைக்க வேண்டும். குறைந்தது 21 கொழுக்கட்டைகளை படைப்பது விசேஷமானது. பித்தளையில் விநாயகர் சிலைகள் வைத்திருப்பவர்கள் அந்த சிலைக்கு பஞ்சாமிர்தம், பால், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யலாம். களிமண் சிலை என்றால் அந்த சிலை மீது அபிஷேகம் செய்யாமல், அருகில் உள்ள ஒரு சிறிய பாத்திரத்தில் அபிஷேகம் செய்து அந்த நீரை மட்டும் சிலையின் மீது தெளிக்கலாம். விநாயகரை மனதார நினைத்துக் கொண்டு, விநாயகர் துதியை சொல்லி பூஜையை தொடங்க வேண்டும். “ஓம் கணேஷாய நமஹ” அல்லது “ஓம் கணபதையே நமஹ” போன்ற மந்திரங்களை 108 முறை உச்சரிப்பது நல்லது. அருகம்புல் மற்றும் பூக்களால் விநாயகரின் நாமத்தை சொல்லிக்கொண்டே விநாயகர் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும்.
விநாயகரை விசர்ஜனம் செய்யும் முறை
அனைத்து பூஜைகளும் முடிந்த பின்னர் கற்பூரம் ஏற்றி விநாயகரை முழு மனதுடன் ஆராதனை செய்ய வேண்டும். குடும்பத்தினர் அனைவரும் விநாயகர் முன் ஒன்றாக அமர்ந்து தங்கள் சங்கடங்கள் நீங்கவும், காரியங்கள் தடையின்றி நடக்கவும் மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். விநாயகர் சிலையை வீட்டில் 1,3,5,7,10 அல்லது 11 நாட்கள் வரை வைத்து வழிபடலாம். இது அவரவர் குடும்ப வழக்கத்தை பொறுத்தது. வட மாநிலங்களில் 10 நாட்கள் வரை விநாயகரை வீட்டில் வைத்து வழிபடுவார்கள். பூஜை முடிந்த பிறகு சிலைகளை நீர் நிலைகளில் முழுமையாக கரைக்க வேண்டும். சிலர் விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாளே கரைப்பது வழக்கம். சில ஊர்களில் மூன்றாவது நாள் கரைப்பார்கள். சிலர் ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் கரைப்பார்கள். இதை உங்கள் குடும்ப வழக்கத்தைப் பின்பற்றி செய்து கொள்ளுங்கள்.
விநாயகப் பெருமானின் அருளைப் பெறுங்கள்
சுற்றுச்சூழலை காக்கும் வகையில் ரசாயனங்கள் பூசப்பட்ட சிலைகளை தவிர்த்து, இயற்கையான களிமண் சிலைகளை பயன்படுத்துங்கள். நீர் நிலைகளை மாசுபடுத்தாமல், மாவட்ட நிர்வாகம் கூறும் இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரையுங்கள். விநாயகர் சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அரிசி உணவுகளை தவிர்த்து பழங்கள் மற்றும் எளிய உணவுகளை உண்ணுங்கள். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குகள். கோயில்களில் இருக்கும் யானைகளுக்கு பழங்கள் கொடுத்து வழிபடுங்கள். இந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடானது தடைகளை நீக்கி கல்வி, செல்வம், ஞானம் மற்றும் அனைத்து நன்மைகளையும் வழங்கும் என்பது ஆழமான நம்பிக்கை. மேற்குறிப்பிட்ட முறையில் விநாயகரை பூஜித்து அவரின் அருளை முழுமையாகப் பெறுங்கள்.