- Home
- Spiritual
- Vinayagar Chaturthi: விநாயகர் சிலை வாங்க உகந்த நேரம் இதுதான்.! சிலை வாங்குவதற்கு முன் இந்த 5 விஷயங்களை கவனியுங்க
Vinayagar Chaturthi: விநாயகர் சிலை வாங்க உகந்த நேரம் இதுதான்.! சிலை வாங்குவதற்கு முன் இந்த 5 விஷயங்களை கவனியுங்க
விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலைகள் வாங்க உகந்த நேரம் மற்றும் விநாயகர் சிலைகள் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி 2025
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் விநாயகர் அவதரித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27்ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் பல விதங்களில் விநாயகர் சிலையை வாங்கி வந்து, வீட்டில் வைத்து பூஜை செய்து, அவருக்கு பிடித்தமான பலகாரங்களை படைத்து வழிபடுகின்றனர். விநாயகர் சிலைகளை ஒன்று, மூன்று, ஐந்து என்கிற ஒற்றைப்படையில் வீட்டில் பூஜித்து பின்னர் அதை நீர் நிலைகளில் கரைக்கின்றனர். கோவில்களிலும் மிகப்பெரிய அளவில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு முன்னர் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் மற்றும் சிலைகள் வாங்க உகந்த நேரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிலைகள் வாங்க உகந்த நேரம்
சதுர்த்தி திதியானது ஆகஸ்ட் 26 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:22 மணிக்கு துவங்குகிறது. இந்த திதி 27 ஆகஸ்ட் மாலை 3:52 மணி வரை உள்ளது. காலையில் சதுர்த்தி திதியை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதால் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அனுசரிக்கப்படுகிறது. விநாயகர் சிலை வாங்குவதற்கு 26 ஆகஸ்ட் மாலை 4:50 முதல் 5:50 வரை உகந்த நேரம் ஆகும். அல்லது மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை வாங்கலாம். 27 ஆம் தேதி வாங்க நினைப்பவர்கள் காலை 9:10 மணி முதல் 10:20 மணி வரை வாங்கலாம். விநாயகர் சிலையை வாங்குவதற்கு முன்பு பின்வரும் ஐந்து விஷயங்களை கவனிக்காமல் வாங்குதல் கூடாது.
1.இடம்புரி தும்பிக்கை இருப்பது நல்லது
விநாயகர் சிலைகளை வாங்கும் பொழுது அவரின் தும்பிக்கை எந்த திசையில் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். நாம் வீட்டில் வைத்து வழிபடுவதாக இருந்தால் இடப்பக்கம் தும்பிக்கை கொண்ட விநாயகரை வாங்க வேண்டும். இந்த விநாயகரை வழிபடும் பொழுது மகிழ்ச்சியும், வெற்றியும் நமக்கு வந்து சேரும். குடும்பத்தில் செழிப்பு, அமைதி போன்றவற்றை இந்த விநாயகர் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. வலப்பக்க தும்பிக்கை கொண்ட விநாயகர் சிலைகளை தவிர்ப்பது நல்லது. வலம்புரி விநாயகர்களை இந்து மத மரபுகளின் படி முறையாக வணங்க வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம் அதிகரிக்கும். அதனால்தான் வலம்புரி துதிக்கை கொண்ட விநாயகர் சிலைகள் கோவில்களில் மட்டுமே வைத்து வழிபடப்படுகிறது.
2. எலியுடன் இருக்கும் சிலைகளை வாங்குங்கள்
விநாயகர் சிலைகளை வாங்கும் போது அந்த சிலைகள் எலி மற்றும் அவருக்கு பிடித்த மோதகம் கையில் இருக்கும்படியான சிலைகளை பார்த்து வாங்க வேண்டும். இது போன்ற சிலைகளை வீட்டிற்குள் கொண்டு வருவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
3.அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகளை வாங்க வேண்டும்
விநாயகர் சிலைகள் அமர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அமர்ந்த நிலையில் இருக்கும் கோலமானது விநாயகரின் தியானம், நிலைத்தன்மை, அமைதியை குறிக்கிறது. நிற்கும்படியாக இருக்கும் விநாயகர் வணிக இடங்களுக்கு பொருத்தமாக இருக்கும். விநாயகரின் முகம் அமைதியாகவும், மென்மையாகவும் இருக்கும் படி வாங்க வேண்டும். கோபமான அல்லது சோகமான முக அமைப்புகளைக் கொண்ட விநாயகர் சிலைகள் எதிர்மறை ஆற்றல்களை கொண்டு வரலாம்.
4.களிமண் விநாயகரை வாங்குங்கள்
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்குவது சிறந்தது. பூஜைக்கு பின்னர் விநாயகர் சிலைகளை தண்ணீரில் கரைக்க வேண்டும் என்கிற நியதி இருப்பதால் களிமண் விநாயகர் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எளிதாகவும் கரைக்கலாம். வீட்டிற்காக விநாயகர் சிலைகள் வாங்குபவராக இருந்தால் மிகப்பெரிய சிலைகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அளவில் சிறிய விநாயகர் சிலைகளை மட்டுமே வீட்டில் வைத்து வழிபட வேண்டும். ரசாயனங்கள் மற்றும் அதிக நிறம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தவிர்த்து விடுவது நல்லது.
5.எந்த திசையில் வைக்க வேண்டும்?
சிலைகளை வாங்கி வந்த பின்னர் அதை வடக்கு திசை நோக்கி பார்த்தவாறு பிரதிஷ்டை செய்ய வேண்டும். இது சிவபெருமான் மற்றும் லட்சுமி தேவியின் திசையாக கருதப்படுகிறது. இந்த திசையை நோக்கி விநாயகரின் முகம் இருக்குமானால் விநாயகரின் ஆசியோடு சிவபெருமான் மற்றும் லட்சுமி தேவியின் ஆசியும் நமக்கு கிடைக்கும்.