richest temples: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார கோவில்கள் எவை தெரியுமா?
தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான கோவில்கள் இருந்தாலும் சில கோவில்களில் அனைத்து நாட்களும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும். உண்டியல் வருமானம் மட்டுமல்ல, சொத்து மதிப்பிலும் அதிக செல்வத்தை வைத்திருக்கும் தமிழகத்தின் டாப் 10 கோவில்கள் இவைகள் தானாம்.

பழனி முருகன் கோவில், திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை முருகன் கோயில் தமிழ்நாட்டின் மிக அதிக வருவாய் ஈட்டும் கோயில்களில் ஒன்றாகும். மூலவர் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டவர் என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.50 முதல் 60 கோடி வரை வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கோயில்களில் அதிக வருவாய் ஈட்டுவதில் முதலிடத்தில் உள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில், திருச்சி:
திருச்சியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திவ்ய தேசங்களில் "பூலோக வைகுண்டம்" என்று போற்றப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்து கோயில்களில் இதுவும் ஒன்று. ஏழு பிரகாரங்கள், 21 கோபுரங்கள் மற்றும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இங்கு பள்ளி கொண்ட நிலையில் மகாவிஷ்ணு காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ரூ.70 கோடி வரை வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது. இங்கு ஸ்ரீ ராமானுஜரின் உடல் பல நூறு ஆண்டுகளாக பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்:
தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரான மதுரையில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் உலகப் புகழ் பெற்றது. அதன் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் 14 பல அடுக்கு கோபுரங்களுக்காக அறியப்படுகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் 20,000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.60 கோடி முதல் ரூ.100 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆண்டுக்கு 274 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவதும், தங்கம், வைரம், வெள்ளி, பணம் ஆகியவை காணிக்கையாகக் கிடைப்பதும் இதன் செல்வ வளத்திற்குக் காரணம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்:
முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே தலம் திருச்செந்தூர். சூரசம்ஹாரம் நடைபெற்ற இடமாக இந்த திருத்தலம் கருதப்படுகிறது. இங்கு உள்ள சிற்பங்களும் கடற்கரை காட்சிகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த கோயிலின் ஆண்டு வருமானம் ரூ.50 முதல் 60 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயில்:
தமிழகத்தில் சக்தி வாய்ந்த அம்மன் கோயில்களில் சமயபுரம் மாரியம்மன் கோயிலும் ஒன்று. முடி காணிக்கையாக மட்டும் ஆண்டுதோறும் சுமார் ரூ. 2 கோடி வருவாய் கிடைக்கிறது. மொத்தமாக சுமார் ரூ.50 கோடி வரை வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்:
இந்தியா முழுவதிலுமிருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் திகழ்கிறது. இதன் உண்டியல் வசூலாக மட்டும் ஆண்டுதோறும் ரூ.7 கோடி வருவதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்:
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகத் திகழும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினமும் பலர் வருகிறார்கள். இக்கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
திருத்தணி முருகன் கோவில், திருவள்ளூர் மாவட்டம்
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயில், திருத்தணி மலையின் மீது அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தலம், ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டுள்ளது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, மாநிலத்திலிருந்தும் தினமும் பலர் வருகிறார்கள். இக்கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 1.74 கோடிக்கு மேல் காணிக்கையாக வந்துள்ளது.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், முதலாம் ராஜராஜ சோழனால் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இக்கோயிலின் 216 அடி உயர கோபுரம் மற்றும் 20 டன் எடையுள்ள நந்தி சிலை ஆகியவை சிறப்பம்சமாகும். இக்கோயிலுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். இந்த கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 1 கோடி முதல் ரூ. 2 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், சென்னை:
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில், தமிழகத்தின் பழமையான மற்றும் முக்கியமான கோயில்களில் ஒன்று. ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.கோயிலுக்கு முன்புள்ள திருக்குளம் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் கபாலீஸ்வரர் என்றும், தாயார் கற்பகாம்பாள் என்றும் தனித்தனி சன்னதிகளில் அருள் புரிகிறார்கள். இந்த கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.