கந்த சஷ்டி: முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் சுற்றுலா அழைத்து செல்லும் தமிழக அரசு - உடனே புக் பண்ணுங்க
தமிழகம் முழுவதும் கந்த சஷ்டிக்கான விரதம் நடைபெற்று வரும் நிலையில், முருகனின் ஆறு படை வீடுகளையும் பார்க்கும் வகையில் தமிழக அரசு அசத்தலான ஆன்மீக சுற்றுல பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது.
Aarupadai Veedu
தமிழ் கடவுளாம் முருகனின் திருவருளைப் பெற கந்த சஷ்டி விரதம் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கடைபிடிக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. சஷ்டி விரதத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் வளர்க்கப்பட்டு பக்தர்கள் வெள்ளத்தில் கோவில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. குறிப்பாக முருகனின் ஆறு படை வீடுகளிலும் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
Aarupadai Veedu
தொடர்ந்து 7 நாட்கள் விரதம் கடைபிடிக்கப்பட்டு 7ம் நாள் இறுதியில் கந்தன் சூரனை வதம் செய்த பின்னர் பக்தர்கள் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம். தொடர்ந்து 7 நாட்களும் விரதம் கடைபிடிக்கப்படும் பட்சத்தில் முருகனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 7 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி தினத்தில் மட்டும் விரதம் இருந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்
Aarupadai Veedu
ஆறு படை வீடு சுற்றுலா
இந்நிலையில், கந்த சஷ்டியை முன்னிட்டு முருகனின் ஆறுபடைவீடுகளுக்கும் சென்று வரும் வகையில் தமிழக அரசு அசத்தலான 4 நாள் ஆன்மீக சுற்றுலா பேக்கேஜை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற வியாழன் கிழமை காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து சுற்றுலா பயணம் தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மாலை 6.30 மணிக்கு சுவாமி மலை முருகன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். பின்னர் இரவு உணவை முடித்துக் கொண்டு தஞ்சையில் தங்கவைக்கப்படுவீர்கள்.
Aarupadai Veedu
பழனி
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு காலை உணவை முடித்துக் கொண்டு தஞ்சையில் இருந்து புறப்பட்டு பழனிக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். பழனியில் சுவாமி தரிசனம், மதிய உணவை முடித்துக் கொண்டு அனைவரும் மதுரைக்கு அழைத்துவரப்படுவீர்கள். பின்னர் அங்கு இரவு உணவை முடித்துக் கொண்டு மதுரையில் தங்க வைக்கப்படுவீர்கள்.
Aarupadai Veedu
திருச்செந்தூர்
சனிக்கிழமை காலை 7 மணி அளவில் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். தரிசனத்திற்கு பின்னர் அனைவரும் திருச்செந்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சுவாமி தரிசனம் மேற்கொள்ளப்படும். திருச்செந்தூர் சுவாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மதுரைக்கு அழைத்து வரப்பட்டு மதுரையில் தங்க வைக்கப்படுவீர்கள்.
சுற்றுலாவின் இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை மதுரையில் இருந்து புறப்பட்டு அனைவரும் பழமுதிர் சோலைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் அனைவரும் சென்னை அழைத்து வரப்படுவீர்கள். இந்த சுற்றுலா பேக்கேஜில் நபர் ஒருவருக்கு ரூ.9000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சஷ்டி விழா கொண்டாடப்படும் நிலையில் அனைவரும் அரசின் ஆறுபடை வீடு சுற்றுலா பேக்கேஜில் முன்பதிவு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது.