- Home
- Spiritual
- நவராத்திரி 2ம் நாள்: வழிபட வேண்டிய அம்மன், பூஜை முறைகள், நைவேத்தியம் மற்றும் மந்திரங்கள்
நவராத்திரி 2ம் நாள்: வழிபட வேண்டிய அம்மன், பூஜை முறைகள், நைவேத்தியம் மற்றும் மந்திரங்கள்
Navratri 2nd day: இன்று (செப்டம்பர் 23) நவராத்திரியின் இரண்டாவது நாளாகும். இன்று வழிபட வேண்டிய அன்னையின் வடிவம், பூஜை முறைகள் மற்றும் நெய்வேத்யம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நவராத்திரி இரண்டாம் நாள்
அன்னை துர்கையின் 9 வடிவங்களை வழிபடும் ஒன்பது இரவுகள் நவராத்திரி என்று கொண்டாடப்படுகின்றன. நவராத்திரியின் இரண்டாவது நாள் துர்கையின் பிரம்மசாரிணி வடிவம் வழிபடப்படுகிறது. வாழ்க்கையில் வெற்றி ஞானம் மற்றும் மன அமைதியை கொண்டு வரும் பிரம்மசாரிணியின் வடிவம் மிகவும் எளிமையானது மற்றும் தெய்வீகமானது. அவர் அறிவு மற்றும் கற்றலின் தெய்வம் என்று அழைக்கப்படுகிறார். ‘பிரம்ம’ என்கிற சொல்லுக்கு ஞானம் அல்லது தவம் பொருளாகும். ‘சாரிணி’ என்றால் ‘பயிற்சி செய்பவர்’ இவர் தவத்தையும், ஞானத்தையும் பயிற்சி செய்பவர் ஆவார். பிரம்மசாரணி தவம், ஒருமுகமான பக்தி, சுயக்கட்டுப்பாடு மற்றும் ஆன்மீக உயர்வை குறிக்கிறார்.
பிரம்மசாரிணியின் தோற்றம்
பிரம்மசாரிணி வெள்ளை அல்லது மஞ்சள் நிற ஆடை அணிந்து இருப்பார். இது தூய்மையையும் எளிமையையும் குறிக்கிறது. வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் கமண்டலமும் ஏந்தியவளாக காட்சி தருகிறார். இவை தவத்தையும், ஆன்மீக ஒழுக்கத்தையும் குறிக்கின்றன. அமைதியான முகத்துடன், எளிமையான தோற்றத்தில் ஆனால் ஆழ்ந்த ஞானத்தையும், ஆன்மீக சக்தியையும் பிரதிபலிக்கும் வண்ணம் அருள் பாலிக்கிறார். பிரம்மசாரணி பொதுவாக வாகனமின்றி நடந்து செல்லும் வகையில் சித்தரிக்கப்படுகிறார். பிரம்மசாரிணியை வழிபடுவதன் மூலம் மாணவர்கள் கல்வி படிப்பு ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்க முடியும். தொழிலதிபர்கள் தொழிலிலும் சிறந்து விளங்க முடியும்.
வழிபடும் முறை மற்றும் நெய்வேத்யம்
பிரம்மசாரிணியை வழிபடுவதற்கு நவராத்திரியின் இரண்டாவது நாள் மிகவும் உகந்த நாளாகும். அதிகாலையிலேயே எழுந்து குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து அம்மனின் படம் அல்லது சிலையை மலர்களால் அலங்கரிக்கவும். அம்மனுக்கு வெள்ளை நிற மலர்கள் மிகவும் உகந்தவை. வெள்ளை மல்லிகை, வெள்ளை அரளி போன்ற பூக்களை பயன்படுத்தலாம். சந்தனம் பயன்படுத்துவது மிகவும் சிறப்பு. பிரம்மசாரிணிக்கு உகந்த நெய்வேத்யமாக சர்க்கரை பொங்கல், பால் பொருட்கள் ஆகியவற்றைப் படைக்கலாம். பின்னர் தூபம் காட்டி பிரம்மசாரணி தேவியை மனதார நினைத்து வழிபட வேண்டும். “ஓம் தேவி பிரம்மசாரிணியை நமஹ:” என்கிற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம்.
பிரம்மசாரிணியின் புராண கதை
துர்க்கையின் பிற மந்திரங்களான துர்கா அஷ்டகம் அல்லது தேவி மஹாத்மியம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். புராணங்களின்படி பிரம்மசாரிணி பார்வதி தேவியின் ஒரு வடிவமாகும். சிவபெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்கிற ஆசையுடன் பிரம்மசாரிணி கடும் தவம் செய்தார். இந்த தவத்தின் பொழுது அவர் எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்து, பல ஆண்டுகள் உணவு தண்ணீர் இல்லாமல் தவம் செய்தார். இந்த தவத்தின் காரணமாகவே அவர் ‘பிரம்மசாரணி’ என்று அழைக்கப்பட்டார். இந்த தவத்தின் பலனாக சிவபெருமான் அவரை ஏற்றுக் கொண்டு அவரை மணந்தார். இந்த கதை பக்தர்களுக்கு உறுதியான மனதுடன் தவம் செய்தால் விரும்பிய பலனை பெறலாம் என்பதை உணர்த்துகிறது.
பிரம்மசாரிணி வழிபாட்டின் பலன்கள்
பிரம்மசாரிணி வழிபாடு என்பது மனதை ஒருமுகப்படுத்தி தீய எண்ணங்களை அகற்றும். மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஞானத்தை வழங்கும். கல்வியில் முன்னேற்றமளிக்கும். ஆன்மீகப் பயணத்தில் உள்ளவர்களுக்கு தெளிவான பாதையை வழங்கும். பொறுமை, தன்னடக்கம், ஒழுக்கம் போன்ற குணங்களை வளர்க்கும். நவராத்திரியின் இரண்டாவது நாளில் பிரம்மசாரிணியை உண்மையான பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு அன்னை அமைதி, ஞானம், முன்னேற்றம், செல்வம், ஒழுக்கம், தன்னடக்கம், பொறுமை ஆகியவற்றை வழங்குவாள். இந்த வழிபாடு நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முக்கிய படியாக கருதப்படுகிறது.