- Home
- Spiritual
- Maavilai: வீட்டில் தீராத பணக்கஷ்டமா? திருமணத்தில் தொடர் தடையா? இந்த எளிய மாவிலை பரிகாரங்களை செய்யுங்கள்.!
Maavilai: வீட்டில் தீராத பணக்கஷ்டமா? திருமணத்தில் தொடர் தடையா? இந்த எளிய மாவிலை பரிகாரங்களை செய்யுங்கள்.!
Maavilai Pariharam : இந்து மதத்தில் மா இலைகள் மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. மா இலைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கும், வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

மா இலைகளில் முக்கியத்துவம்
இந்து மதத்தில் மரங்கள், செடிகள் இயற்கையின் பகுதியாக மட்டுமல்லாமல் தெய்வங்களின் வடிவமாகவும் கருதப்படுகின்றன. ஒவ்வொரு மரத்திற்கும் மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் உள்ளது. அந்த வகையில் மா மரம் இந்து மதத்தில் புனித மரமாக கருதப்படுகிறது. மா இலைகள் பூஜைகள், ஹோமங்கள், பண்டிகைகள் மற்றும் சுப விழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன.
வாஸ்து சாஸ்திரத்தில் மா இலைகள் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் நேர்மையின் அடையாளமாக கருதப்படுகின்றன. மா இலைகள் கொண்டு வாழ்வில் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று ஜோதிடம் கூறுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பணப் பிரச்சனைகள் சரியாக
வீட்டில் தொடர்ந்து நிதிப் பற்றாக்குறை இருந்தாலோ அல்லது சிக்கிய பணம் கைக்கு வந்து சேரவில்லை என்றாலோ ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம். 11 மா இலைகளை எடுத்து அதை பச்சை நூலால் 11 முறை சுற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதை தேனில் நனைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து நைவேத்யம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது நிதி நெருக்கடியை போக்கி, வீட்டில் செல்வத்தையும், செழிப்பையும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
தீய கண்ணிலிருந்து விடுபட
மா இலைகளை வீட்டின் வாயிலில் தோரணமாக கட்டுவது வீட்டில், மகிழ்ச்சியும், செழிப்பையும் அதிகரிக்க உதவும். 7 அல்லது 9 பச்சை மா இலைகளை எடுத்து நூலில் கோர்த்து வாசலில் தோரணமாக தொங்க விடவும். இதை செய்யும்பொழுது “ஓம் ஐம் ஹ்ரீம் க்ரீம் சாமுண்டாயை விச்சே:’ என்கிற மந்திரத்தை 21 முறை சொல்லவும். இவ்வாறு செய்வது வீட்டில் உள்ள தீய ஆற்றல்களை விலக்கி, நேர்மறை ஆற்றல்களை பரப்புவதோடு குடும்ப உறுப்பினர்களுக்கு மன அமைதியையும், செழிப்பையும் தரும்.
பொருளாதார செழிப்பு பெற
தொடர்ந்து கடன் பிரச்சனைகள் அல்லது பணப் பிரச்சனைகள் இருப்பவர்கள் ஐந்து மா இலைகளை எடுத்து சிகப்புத் துணியில் மடித்து பணப்பை அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். இதை செய்யும் பொழுது “ஓம் ஸ்ரீம் லட்சுமியை நமஹ:” என்கிற மந்திரத்தை 11 முறை உச்சரிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும்.
கிரக தோஷங்கள் நீங்க
சனி, செவ்வாய் அல்லது ராகு கேது ஆகிய கிரகங்களின் தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் எளிய பரிகாரத்தை செய்யலாம். ஒரு சுத்தமான பாத்திரத்தில் நல்ல தண்ணீரை எடுத்து அதில் 7 மா இலைகளை போட்டு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரை உடலில் தெளித்து, “ஓம் நமோ நாராயணாய:” மந்திரத்தை 21 முறை உச்சரிக்கவும். இதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கும். மன அழுத்தம் குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
திருமணத் தடைகள் நீங்க
திருமண தடைகள் இருப்பவர்கள் மா இலைகளை பயன்படுத்தி எளிய பரிகாரத்தை செய்யலாம். ஐந்து மா இலைகளை எடுத்து பச்சை நூலில் கோர்த்து, பூஜை அறையில் வைத்து “ஓம் கம் கணபதயே நமஹ:” மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். பின்னர் இந்த இலைகளை ஆற்றில் விட்டு விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும். விரைவில் திருமண யோகம் கிடைக்கும்.
வியாபாரத்தில் வெற்றி பெற
வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்படுபவர்களுக்கு மா இலை பரிகாரம் நல்ல நன்மைகளைத் தரும். ஏழு மா இலைகளை ஒரு மஞ்சள் துணியில் மடித்து உங்கள் கடையின் பணப்பெட்டியில் வைக்க வேண்டும். இதை செய்யும் பொழுது “ஓம் குபேராய நமஹ:” மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும். இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த பரிகாரம் வாடிக்கையாளர்களை ஈர்க்க உதவும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- இந்த பரிகாரங்களை செய்யும் பொழுது பச்சை மற்றும் புதிய மா இலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பரிகாரங்கள் செய்யும் பொழுது கவனச் சிதறல்கள் இல்லாமல், மனதை ஒருமுகப்படுத்தி முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
- மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது தெளிவாகவும், சரியான உச்சரிப்புடனும் உச்சரிக்கவும்.
- பரிகாரம் செய்வதற்கு முன்னர் குளித்து சுத்தமான ஆடைகள் அணிந்து உடல் மனம் மற்றும் மனதை சுத்தமாக வைக்கவும்.
மா இலைகள் இந்து மரபில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த பரிகாரங்கள் எளிமையானவை என்றாலும், இவை வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியைத் தரும். மேற்குறிப்பிட்ட பரிகாரங்களை செய்து உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைப் பெறுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)