வைகாசி விசாகப் பெருவிழா; கந்தனை காண திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருநாளில் முருகனை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
Tiruchendur Murugan Temple
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Vaikasi Visakam
திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோர்ச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
Tiruchendur
திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் திரளான பக்தர்கள் வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவ முகாம், கோவில், கடற்கரை பகுதியில் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்திருப்பதால் போதிய வாகன நிருத்தும் இடம் இல்லாததால் நகர் பகுதியில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் உள்ளூர் மக்கள் அவசர தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த நிலையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வைகாசி விசாகத்தில் விரதம் இருந்த பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்ய கோவில் வளாகத்தில் அசைவ உணவுகள் சமைத்து உண்பது வழக்கம் இந்த நிலையில் கோவில் வளாகத்தில் அசைவ உணவுகள் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.