- Home
- Spiritual
- Nilai Vasal Pooja: வீட்டிற்குள் குலதெய்வம் வர நிலை வாசலில் இந்த பூஜையை செய்யுங்க.! தேசமங்கையர்கரசி கொடுத்த விளக்கம்
Nilai Vasal Pooja: வீட்டிற்குள் குலதெய்வம் வர நிலை வாசலில் இந்த பூஜையை செய்யுங்க.! தேசமங்கையர்கரசி கொடுத்த விளக்கம்
குலதெய்வம் வீட்டிற்க்குள் வர நிலைவாசலில் செய்யப்பட வேண்டிய பூஜை முறைகள் குறித்தும், அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் ஆன்மீக சொற்பொழிவாளர் தேசமங்கையர்கரசி அளித்துள்ள விரிவான விளக்கங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நிலை வாசல் பூஜை
வீடு கட்டும் பொழுது பூமி பூஜைக்குப் பிறகு அனைவரும் செய்யும் ஒரு பூஜை தான் நிலை வாசல். நிலை வாசல் என்பது நிலைத்த தெய்வீக சக்திகள் இருக்கும் இடம் என்பதை குறிக்கிறது. நிலை வாசலில் தெய்வங்கள் அந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்கு காவல் தெய்வங்களாக நின்று கொண்டிருக்குமாம். ஆனால் தற்போதைய காலத்தில் பலரும் நிலை வாசலை முறையாக பராமரிப்பது இல்லை. நிலை வாசலை எப்படி முறையாக பராமரிக்க வேண்டும்? நிலை வாசலுக்கு செய்ய வேண்டிய பூஜை முறைகள் என்ன? என்பது குறித்து தேசமங்கையர்கரசியின் கொடுத்த விளக்கங்களை இங்கு காணலாம்.
குலதெய்வம் நின்று அருள் புரியும் இடம்
வீடு என்பது சாதாரண இடம் கிடையாது. சிறிய வீடாக இருந்தாலும் அமைதி, தெய்வீக அம்சம், மகாலட்சுமி கடாக்ஷம் நிறைந்திருக்க வேண்டும். சில வீடுகள் பிரம்மாண்டமாக மியூசியம் போல இருக்கும். ஆனால் அந்த வீட்டிற்குள் தெய்வீக அம்சமோ, எந்த ஒரு உணர்வோ இருக்காது. வீடு என்பது அதில் குடியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியையும், வீட்டிற்கு வந்து செல்பவர்களுக்கு இன்பத்தையும், அருளையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதனால் தான் நிலை வாசல் வைக்கும் பொழுது ஆதர்சன சக்தி உடைய நவதானியங்கள், செப்பு, தங்கம், நவரத்தின கற்கள், நாணயங்கள் வெண் சங்கு ஆகியவற்றை வைத்து வாசலை கட்டுகின்றனர். மேலும் குலதெய்வம் நின்று அருள் புரியும் இடமாக நிலை வாசல் விளங்குகிறது.
நிலை வாசலில் செய்யக்கூடாதவை
நிலை வாசல் தெய்வீக சக்தி உடையது என்பதனால் தான் அதில் உட்காரக் கூடாது, நிற்கக்கூடாது, குறுக்கே நின்று பொருட்களை வாங்கக்கூடாது, நிலைப்படி தட்டினால் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் திரும்பி தண்ணீர் அருந்திவிட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்ல வேண்டும் போன்ற விஷயங்களை முன்னோர்கள் நமக்கு கூறியுள்ளனர். அதே சமயம் இன்பம், துன்பம், நல்ல சக்தி, கெட்ட சக்தி என எதுவாக இருந்தாலும் நிலைப்படியை தாண்டித்தான் உள்ளே வரவேண்டும். தீய சக்திகள் வரும்பொழுது அதை வெளியே நிறுத்தி வைக்கும் ஆற்றல் நிலைப்படிகளுக்கு உண்டு. ஆனால் நாகரிகம் வளர்ந்த காரணத்தினால் நிலை வாசலை பலரும் முறையாக பராமரிப்பது இல்லை. ஆனால் அது தவறாகும். தெய்வத்தை வழிபடும் அளவிற்கு நிலை வாசலையும் வழிபட வேண்டும்.
மஞ்சள் குங்குமம் இட வேண்டும்
நிலை வாசலில் நம்முடைய குலதெய்வம் காவலுக்கு நின்று காவல் காக்கும். அதே சமயம் பூஜை அறையில் இருந்தும் அருள் புரியும். எனவே குலதெய்வம் நின்று அருள் புரியக்கூடிய அந்த நிலை வாசலை பயபக்தியுடன் வழிபட வேண்டும். நிலை வாசல் படிகளை வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கழுவி ஒரு அடி அங்குலத்திற்கு மஞ்சள் தேய்க்க வேண்டும். முழுவதும் தேய்க்க கூடாது. ஒரு அடி அளவிற்கு தேய்க்கலாம். சிலருக்கு பட்டை போடும் வழக்கமும் அல்லது வட்டமிட்டு அதில் நாமும் இடும் வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் இருப்பவர்கள் அந்த முறைகளை பின்பற்றலாம். வழக்கம் இல்லாதவர்கள் மஞ்சளை தடவி அதில் ஒற்றை எண்ணிக்கையில் பொட்டுக்கள் இடவேண்டும். நிலைப்படியின் முன் பக்கம், பின் பக்கம், கதவுகளிலும் தடவலாம். நிலைப்படியின் மேல் மாவிலை தோரணம் கட்டாயம் கட்ட வேண்டும்.
நிலை வாசலுக்கு பூஜை செய்யும் முறை
அலங்காரத்திற்காக பிளாஸ்டிக்கில் விற்கப்படும் மாவிலைகளை வாங்கி கட்டுதல் கூடாது. மாவிலைக்கு காய காய சக்தி உண்டு. அது எவ்வளவு காய்ந்தாலும் பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் தற்போது மாவிலை எளிதில் கிடைக்கிறது. எனவே அவர்களும் மாவிலை தோரணங்கள் கட்டிக் கொள்ளலாம். பின்னர் தினமும் நிலைப்படிக்கு ஊதுபத்தி, சூடம் காட்ட வேண்டும். அன்றாடம் பூஜை அறையில் பூஜையை செய்து முடித்த பின்னர் நிலைப்படிக்கு வந்து தீபாராதனை காட்ட வேண்டும். பின்னர் குலதெய்வத்தை நினைத்து சாம்பிராணி தூபம் காட்டி சிறிதளவு பூவை எடுத்து நிலைப்படியின் மேற்பகுதியிலும் கீழ் பகுதிகளும் துவ வேண்டும். குலதெய்வம், மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்கள் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் புரிய வேண்டும் என்று மனதார பூஜித்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த முறையை பூஜை அறை, கொல்லைப்புறம், அலுவலகம் உள்ளிட்ட நிலைப்படிகளிலும் செய்யலாம்.
பெயிண்ட் அடிக்கக்கூடாது
தினமும் மஞ்சள் தடவ வேண்டும் என்கிற அவசியம் இல்லை. செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மஞ்சள் தடவலாம். பின்னர் அடுத்த வாரம் அதே கிழமையில் அதை துடைத்துவிட்டு புதிதாக தடவ வேண்டும். காலை, மாலை என இரு வேலைகளிலும் நிலைப்படிகளில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த வழிபாடை பெண்கள் அல்லது ஆண்கள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம். சிலர் மஞ்சள் பூசுவதற்கு பதிலாக மஞ்சள் நிற பெயிண்டை அடித்து வைப்பர். ஆனால் பூஜை என்பது அழகுக்கானது அல்ல. மஞ்சள் என்பது கிருமி நாசினியாகும். மஞ்சள் தடவும் பொழுது கரையான் உள்ளிட்ட எந்த கிருமியும் வீட்டிற்குள் வராது. மேலும் மஞ்சள் என்பது மகாலட்சுமியின் அம்சம் என்பதால் இதை நிலைப்படியில் தடவுவது அவசியமானது.
வீட்டில் மகிழ்ச்சி பெருகும்
சிலர் திருஷ்டி நீங்க வேண்டும் என்பதற்காக நிலை வாசலில் பல பொருட்களை கட்டி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவ்வளவு பொருட்களை கட்ட வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. குலதெய்வம் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட எலுமிச்சை பழத்தை மஞ்சள் துணியில் கட்டி சந்தனம், குங்குமம் வைத்து அதை நிலை வாசலில் கட்டினால் போதுமானது. வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மஞ்சள் தடவுவதற்கு யோசிக்க வேண்டாம். ஏனெனில் மஞ்சள் துடைக்கும் பொழுது எளிமையாக நீங்கிவிடும். குலதெய்வம் நிலை வாசலில் நின்று அருள் புரியவும், வீட்டில் மன நிம்மதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி நிரந்தரமாக குடியேறுவதற்கு இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்று தேச மங்கையர்க்கரசி கூறியுள்ளார்.