- Home
- Spiritual
- Kandha Sashti Viratham: கந்தசஷ்டி 2025! முதல் நாள் விரதத்தை துவங்குவது எப்படி தெரியுமா ?
Kandha Sashti Viratham: கந்தசஷ்டி 2025! முதல் நாள் விரதத்தை துவங்குவது எப்படி தெரியுமா ?
Kandha Sashti Viratham 2025: கந்த சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானுக்குரிய புனிதமான விரதமாகும். முதல் நாள் விரதத்தை தொடங்கும் முறைகளை இக்கட்டுரை விவரிக்கிறது.

சந்தோஷத்தை அள்ளித்தரும் கந்த சஷ்டி விரதம்
கந்த சஷ்டி விரதம் முருகப் பெருமானுக்குரிய மிகப் புனிதமான விரதமாகும். ஆண்டுதோறும் ஐப்பசி மாத சுக்ல பக்ஷ சஷ்டி திதியிலிருந்து தொடங்கி, திருக்கல்யாணம் நடைபெறும் ஏழாம் நாள்வரை இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதல் நாள் விரதம்
முதல் நாளில் காலையில் சீக்கிரம் எழுந்து நீராடி, வீடு முழுவதும் சுத்தம் செய்த பின், மனதில் “ஓம் சரவண பவ” என மந்திரம் சொல்லி விரதம் துவங்க வேண்டும். விரதம் சிறப்பாக நிறைவேற காப்பு கட்டுவது ஒரு நல்ல வழக்கம். மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் கட்டி, சுவாமி படத்தின் முன் வைத்து வழிபட்டு கையில் கட்டலாம்.
நாம் துவங்கும் விரதம் எந்த விதமான தங்கு தடையும் இன்றி, நல்ல விதமாக நிறைவு பெறுவதற்காகவே காப்பு அல்லது கங்கணம் கட்டப்படுகிறது. கந்தசஷ்டி விரதத்தை வீட்டிலேயே காப்பு காட்டி இருப்பதாக இருந்தால், விரளி மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் கட்டி அதை சுவாமி படத்திற்கு முன் வைத்து, கையில் கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கலாம். காப்பு கட்டாமலும் கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம்.
கேட்டதை கொடுக்கும் தந்தை நம்மவர் முருக பெருமான்
விரதத்தில் கலசம் வைப்பவர்களுக்கு, தண்ணீருடன் எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு, தேங்காய், தர்ப்பை ஆகியவற்றை வைத்து கலசம் அமைத்து வாழை இலையில் வைக்கலாம். அதன் முன் பச்சரிசி மாவால் சட்கோண கோலம் வரைந்து, நடுவில் “ஓம்” என்றும் அதன் சுற்றிலும் “சரவண பவ” என்றும் எழுத வேண்டும். பிறகு 108 முறை “ஓம் சரவண பவ” என ஜபம் செய்து முருகனை ஆவாஹனம் செய்து வீட்டில் எழுந்தருளச் செய்ய வேண்டும்.
பிறகு “ச” என்ற எழுத்தின் மீது ஒரு நெய் விளக்கை ஏற்றி வழிபாடு செய்யலாம். ஒவ்வொரு நாளும் சரவண பவ எழுத்துகளின் மீது விளக்கேற்றி ஆறு நாட்கள் வழிபாடு தொடரலாம். நைவேத்யமாக இனிப்பு பொங்கல், பாயசம் போன்றவற்றை சுவாமிக்கு படைக்கலாம்.
கந்த சஷ்டி வழிபாட்டிற்கும் விரதத்திற்கும் எந்தகட்டுப்பாடும் கிடையாது என்றும் தூய்மையான மனநிலையில் எப்போதும் முருக பெருமானை நினைத்துக்கொண்டு இருந்தாலே போதும் என்கின்றனர் ஆன்மிக பெருமக்கள்.