- Home
- Cinema
- கருத்து
- Gandhi Talks Review : விஜய் சேதுபதியின் சைலண்ட் படம் சம்பவம் செய்ததா? காந்தி டாக்ஸ் விமர்சனம் இதோ
Gandhi Talks Review : விஜய் சேதுபதியின் சைலண்ட் படம் சம்பவம் செய்ததா? காந்தி டாக்ஸ் விமர்சனம் இதோ
கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஆகியோர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள மெளனப் படமான காந்தி டாக்ஸ் விமர்சனத்தை இங்கே காணலாம்.

Gandhi Talks Movie Review
பெருநகர வாழ்வில் பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை மையமாக வைத்து, மும்பை நகரத்தின் இரண்டு எதிர் துருவ வாழ்க்கைகளை ‘காந்தி டாக்ஸ்’ படம் நுட்பமாக முன்வைக்கிறது. ஒரு நேர உணவுக்கே போராடும் ஏழையாக விஜய் சேதுபதியும், எல்லாம் நிறைந்த பெரும் பணக்காரரான அரவிந்த் சாமியும் சந்திக்கும் சிக்கல்கள், அவர்கள் கையில் சுழலும் ரூ.100 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வழியே சொல்லப்படுகின்றன. அந்த நோட்டுகளில் சிரித்துக் கொண்டிருக்கும் காந்தியின் முகம், மனிதன் பேசாவிட்டாலும் பணமே இந்த உலகத்தில் எப்போதும் பேசிக் கொண்டிருப்பதை நினைவூட்டுகிறது. இறுதியில் அவரவர் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு விடை கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காந்தி டாக்ஸ் விமர்சனம்
வசனங்கள் இன்றி நகரும் கதை, “பணம் இருந்தால்தான் வாழ்க்கை நகரும்” என்ற நிஜத்தை காட்சிகளின் மூலமாகவே பதிவு செய்கிறது. அரசு அதிகாரங்கள் முன் ஏழையும் பணக்காரனும் ஒன்றே என்ற கருத்தை இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் கதாபாத்திரங்களின் வழியாக அழுத்தமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்.
உடல்நலமற்ற தாயை கவனிக்க வேண்டிய மகனாகவும், காதலியின் கையைப் பிடிக்க ஆசைப்படும் இளைஞனாகவும் விஜய் சேதுபதி மீண்டும் தன் இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார். வசனங்களே இல்லாவிட்டாலும், அவர் முகபாவனைகள் வறுமையின் வலியை நமக்குள் கொண்டு வந்து சேர்க்கின்றன. மௌனம், இயலாமை, ஏக்கம் என அனைத்தையும் அவர் கண்களால் பேசவைக்கிறார்.
நடிப்பு தூள்
மறுபுறம், எல்லாம் இருந்தும் அனைத்தையும் இழக்கும் சூழலில் சிக்கித் தவிக்கும் மனிதராக அரவிந்த் சாமி கவனம் ஈர்க்கிறார். அதிகாரமும் பணமும் தப்பிச் செல்லும் தருணத்தில் ஏற்படும் கையறுநிலையை அவர் வெளிப்படுத்தும் விதம் கதைக்கு ஒரு கூடுதல் பலம் தருகிறது.
அதிதி ராவ் குறைந்த வசனங்களிலேயே உணர்வுகளை கடத்தும் திறமையான நடிப்பை வழங்கி இருக்கிறார். குறிப்பாக, தாயுடன் இருக்கும் காட்சிகளில் அவரது கண்களில் தெரியும் உணர்ச்சிகள் பார்வையாளர்களை ஃபீல் பண்ண வைக்கின்றன. ஒரு திறமையான நடிகையாக அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
உயிர்கொடுத்த இசை
வசனங்கள் இல்லாத குறையை பல இடங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிரப்புகிறது. விஜய் சேதுபதி – அதிதி இடையேயான காதல் பாடல் அழகான காட்சிகளும் கவிதைத் தன்மையுள்ள வரிகளும் சேர்ந்து மனதை கவர்கிறது. கரண் ராவத்தின் ஒளிப்பதிவு, கதையின் மனநிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது.
சஸ்பென்ஸ் திரில்லர் என்ற அடையாளம் இருந்தாலும், சில காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நீதிமன்றக் காட்சிகள் போன்ற இடங்களில் இன்னும் கூர்மையான திரைக்கதை இருந்திருந்தால், படம் கூடுதல் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். இன்றைய ரீல்ஸ் காலத்திலும், நல்ல கதை சொல்வதற்கு வசனங்கள் அவசியமில்லை என்பதைக் காட்டும் முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், அதே நேரத்தில் ‘காந்தி டாக்ஸ்’ அனைவரையும் கவரும் முழுமையான சினிமா அனுபவமாக மாறவில்லை என்பதே உண்மை.

