- Home
- Cinema
- கருத்து
- துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ காந்தம் போல் கவர்ந்திழுத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ காந்தம் போல் கவர்ந்திழுத்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள படம் காந்தா, பாக்யஸ்ரீ போர்சே நாயகியாக நடித்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பதையும், அதன் விமர்சனத்தையும் இங்கே விரிவாக காணலாம்.

Kaantha Movie Review
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ போர்சே, ராணா டகுபதி, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் காந்தா. இப்படம் நவம்பர் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. “காந்தா” (Kaantha) திரைப்படம் தமிழ் சினிமாவின் பொற்காலத்தை நினைவூட்டும் வண்ணம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கதை, ஒரு பிரபல இயக்குநரையும், அவர் அறிமுகப்படுத்திய முன்னணி நடிகரையும் மையமாகக் கொண்டது. ஒருகாலத்தில் இருவரும் கலைக்காக ஒன்றாக உழைத்தவர்கள். ஆனால், காலப்போக்கில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, ஆளுமை மோதல் - அதுவே “காந்தா”வின் கதைச்சுருக்கம்.
இந்த மோதலின் நடுவில் வருகிறார் ஒரு புதிய முகம் - ஒரு இளம் நடிகை. அவள் அவர்களின் வாழ்க்கையையும், கலை உலகத்தையும் முழுவதும் மாற்றி விடுகிறார்.
காந்தா படத்தின் விமர்சனம்
அந்த பெண்ணின் வருகை, அந்த காலத்திலிருந்த பெண்களின் கனவுகள், அச்சங்கள், போராட்டங்களை வெளிக்கொணர்கிறது. “காந்தா” படம் ஒரு சாதாரண காதல் கதை அல்ல. இது கலைஞர்களின் மனப்போராட்டம். ஒரு இயக்குநர் தனது சினிமாவை உயிரோடு புனைகிறார்; ஒரு நடிகர் தனது புகழை காத்துக்கொள்கிறார்; ஒரு பெண் தனது அடையாளத்தை தேடுகிறார். இந்த மூன்று வாழ்க்கைகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் தருணங்களில் தான் கதை தீவிரமடைகிறது.
காந்தா படத்தின் ப்ளஸ் என்ன?
படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் கதாபாத்திர தேர்வு தான். நாயகன் துல்கர் சல்மான், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் அய்யா கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார் சமுத்திரக்கனி. நாயகி பாக்யஸ்ரீ போர்சே தன்னுடைய அழகால் ஆளுமை செய்துள்ளார். இதர கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்தோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது. டேனியின் ஒளிப்பதிவு நம்மை அந்த காலகட்டத்திற்கே அழைத்து செல்கிறது. கலை இயக்குனர் ராமலிங்கத்தின் பங்களிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. 1950ம் ஆண்டு மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். இயக்குனர் செல்வமணி செல்வராஜ், திரைக்கதையை மெதுவாக நகர்த்தி சென்றாலும், அதை தொய்வில்லாமல் கொண்டு சென்று கவனம் ஈர்த்துள்ளார்.
காந்தா படம் எப்படி இருக்கு?
சினிமா உலகம் புதிய பரிமாணத்துக்குள் நுழைந்த காலம். பழைய மதராஸின் கலை உலகம், ஸ்டூடியோ கலாசாரம், பிளாக் & வைட் காட்சிகள் - அனைத்தும் அற்புதமான திரைபட அனுபவமாக வரவிருக்கின்றன. “காந்தா” என்பது ஒரு கலைஞனின் பெருமை, ஒரு மனிதனின் பொறாமை, ஒரு பெண்மணியின் கனவு - இம்மூன்றையும் இணைக்கும் உணர்ச்சி மிக்க கதை. சினிமா மீது கொண்ட பற்று, போட்டி, பேராசை, பிரிவு - எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தும் ஒரு பீரியட் டிராமா தான் இந்த காந்தா.