- Home
- Politics
- ஜெ.,வின் நிழலை அசைத்துப் பார்க்கும் விஜய்..! தவெகவுக்கு செல்ல தயங்கும் மனசாட்சி..! விசுவாசத்தால் தவிக்கும் பூங்குன்றன்..!
ஜெ.,வின் நிழலை அசைத்துப் பார்க்கும் விஜய்..! தவெகவுக்கு செல்ல தயங்கும் மனசாட்சி..! விசுவாசத்தால் தவிக்கும் பூங்குன்றன்..!
விசுவாசம் அரசியல்வாதிகளுக்குத்தான் இருக்கவேண்டும். சேவகனுக்கு இருக்கக் கூடாது. கட்சியில் பயன்பெற்றவர்களே வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள். நீ என்னப்பா இவ்வளவு யோசிக்கிற..!

19 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் ஜெ.பூன்குன்றன். ஜெயலலிதாவின் அன்றாட வாழ்க்கை, அரசியல் முடிவுகள் என பல விஷயங்களையும் கவனித்து கொண்டவர். ஜெயலலிதாவிக்கு பிள்ளை போல விசுவாசமாக, இருந்து வந்த போதும் அதிமுகவில் அதிகாரப் பதவிகளை ஏற்கவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தற்போது விவசாயம், ஆன்மிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
அவர் அடிக்கடி ஜெயலலிதாவின் நினைவுகளை, கட்சியின் நிலவரங்கள் குறித்து பகிர்ந்து வருகிறார். தற்போதைய அவரது முகநூல் பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ‘‘ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த ஓர் உரையாடல்! இன்று என் மனதை மீண்டும் மீண்டும் எரித்து, எண்ணங்களை எண்ணற்ற திசைகளில் தள்ளுகிறது. நமது இயக்கத்தில் இன்று நிர்வாகியாக வலம் வரும் எனது நண்பருடன் அப்போது நான் பகிர்ந்த பேச்சுகள் இன்று நினைத்து பார்க்கும்போது வியப்பையும், வேதனையையும் ஒருசேர அளிக்கிறது.
அப்போது அவர் நடிகர் விஜய் பற்றி மிகத் தெளிவாக ஒரு கருத்து சொன்னார், “அவருக்கு அரசியல் தெரியாது… எதுவுமே தெரியாமல் ஒருவர் எப்படி வெற்றி பெற முடியும்?” அவரின் பேசும் பாணி, நம்பிக்கை, யாரோ தெரிந்த ஒருவரைப் பற்றி பேசுவது போல இருந்தது.
நான் அமைதியாக கேட்டேன். பின்னர் சொன்னேன். “இல்லை… வெளியில் அவருக்கு செல்வாக்கு பிரம்மாண்டம். தமிழகத்தை பொறுத்தவரை கலைத்துறையின்மீது மக்களுக்கு கொள்ளை காதல். ஒரு நடிகர் மக்கள் மனதை எட்டிப்பார்ப்பது எளிது. குறிப்பாக சிறுவயது பிள்ளைகள் அவரைப் பிடித்த கதாநாயகனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர் தன்னை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் அவரை தெரியாதவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு சென்று சேர்ந்திருக்கிறார். அதுவே அரசியலுக்கான முதல் படி.”
உடனே அவர் மீண்டும், அதெல்லாம் அவருக்கு ஒத்து வராதுங்க..! நடிப்பு வேறு அரசியல் வேறு என்றார். நீங்கள் சொல்வது சரி. ஆனால் அவர் தன்னை நாளுக்கு நாள் வளர்த்துக் கொள்ளலாமே! நீங்கள் பார்த்த போது விஜய் அப்படி இருந்திருக்கலாம். நாளை அவர் தன்னை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா! வரும்போது எல்லோரும் அரசியல் ஞானியாகவா வருகிறார்கள்? எதிலும் பின் வாங்காமல், தைரியமாக மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக மாறினால் கட்டாயம் வெற்றி பெற முடியும் என்றேன்.
அவரோ உடனே மறுத்து, “அவருக்கு பூத் தெரியுமா? பூத் கமிட்டி போட தெரியுமா?” என்றார். அவரின் நம்பிக்கையைக் கேட்ட நான் எதிரே பார்த்து கேட்டேன். “சரி… உங்களுக்கு பூத் தெரியுமா? தெரியும் என்றார். வாக்குச்சாவடி முகவர்களை எப்படி நியமிக்க வேண்டும் என்பது குறித்து தெரியுமா? நல்லா தெரியுமென்றார். உங்கள் மாவட்ட அரசியல் நிலைமை என்ன? மற்ற கட்சிகளில் யார் செல்வாக்கானவர்? நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் யார் நல்லவர், கெட்டவர் என்பதெல்லாம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
அவர் ஆர்வம் நிறைந்த நம்பிக்கையோடு, “எனக்கு எல்லாம் தெரியும். நான் பார்த்து படித்துத்தான் இங்கு வந்திருக்கிறேன்! எனது தந்தை காலத்திலிருந்து நான் அரசியல் செய்து வருகிறேன்” என்று பெருமையாகச் சொன்னார்.
அதைத்தான் நான் அமைதியாக ஒரு கேள்வியாக மாற்றினேன். “சரி, உங்களுக்கு இவை எல்லாம் தெரியும். அந்த அறிவும், அனுபவமும் கொண்ட நீங்களே விஜயின் பக்கம் சென்றால் என்ன ஆகும்? அவர் இன்னும் வலிமையானவராக மாற மாட்டாரா? உங்களைப் போன்ற விவரம் தெரிந்தவர்கள் நம் இயக்கத்தில் இருந்து அங்கு சென்றால் நிலைமை மாறாதா? சிறிது நேரம் அமைதி தான் பதிலாகக் கிடைத்தது. பிறகு சமாளிக்கத் தொடங்கினார்.
அப்போது நான் கூறியது ஒரு எளிய உண்மை, “நீங்கள் கற்றுக் கொண்ட அனைத்தும் அவரிடம் சென்றால், அவரின் அரசியல் நிலைமை இன்னும் உறுதியானதாகிவிடும்.” இன்று காலம் தாண்டி பார்த்தால்… அந்த வார்த்தைகளே என் காதில் எதிரொலியாக ஒலிக்கின்றன. இப்போது வெளியில் நடப்பதைக் கேட்டு நான் மகிழ்வதா? அழுவதா? என்று கூட தெரியவில்லை.
ஏனென்றால்… என் மனதை முழுமையாக பிடித்திருக்கும் இரும்பு பெண்மணி மீது நான் கொண்ட மதிப்பு; அவருடைய இயக்கத்திற்காக நான் இரவு பகலாக துடித்தபடி ஓடிய நாட்கள்; இயக்கத்தின் உப்பை தின்ற பற்று..! ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டு இன்னும் அமைதியாக இருக்கும் நான் என் நலம் விரும்பிகளுக்கு முட்டாளாகவே காட்சி கொடுக்கிறேன். நீங்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்தால், நாங்கள் எல்லாம் நன்றாக இருப்போம் என்று அவர்கள் சொல்லும் போதெல்லாம் மனம் சற்று கலக்கம் அடைகிறது.
பிரிந்து செல்லும் அரசியல்வாதிகள் பலரிடம் நான் கேட்டதுண்டு. அதற்கு அவர்கள் சொல்லும் பதில், நான் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பது நியாயம் தான். ஆனால் என்னை நம்பி பயணிக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்காக இந்த முடிவை கசப்போடு எடுக்க வேண்டியிருக்கிறது. என் ஒருவனுக்காக அவர்கள் கஷ்டப்படக்கூடாதல்லவா..! ஓ.. இதுவும் நியாயம் தானோ!
ஊர் மக்கள், சுற்றத்தார், நண்பர்கள் எல்லோரும் ஒரே வாக்கில் சொல்கிறார்கள், “எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு சென்று உன்னை வளர்த்துக் கொள்! 19 ஆண்டுகள் அம்மாவுடன் பணியாற்றிய நீ அந்த அனுபவத்தை கண்டிப்பாக மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்!
விசுவாசம் அரசியல்வாதிகளுக்குத்தான் இருக்கவேண்டும். சேவகனுக்கு இருக்கக் கூடாது. கட்சியில் பயன்பெற்றவர்களே வெளியே சென்று கொண்டிருக்கிறார்கள். நீ என்னப்பா இவ்வளவு யோசிக்கிற..! அம்மாவுக்குத்தான் நீ விசுவாசமாக இருக்க வேண்டும். இப்போது அவர் இல்லை. அதனால் மற்றவர்களுக்கு நீ விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உன் குடும்பத்தைப் பார்”
அவர்களின் வார்த்தைகள் உண்மையா? என் மனதின் துன்பமா? இயக்கத்தின் மீதான என் பற்றா? விசுவாசமா? வரும் வாய்ப்புகளை எல்லாம் தவிர்ப்பது முறையா? தெய்வமாக வாழும் அம்மா தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்களா? எது சரி, எது தவறு என என் உள்ளம் எனும் கடலில் அலைகளாய் ஓயாமல் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கின்றன.
ஆனால் நான்… இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். கழகம் வலிமை பெற வேண்டும் என்ற தீப்பற்றி இன்னும் என் உள்ளத்தில் எரிகிறது. ஒதுக்கி வைத்தாலும் இப்படி ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருக்கும் நீ ஒரு முட்டாள்தான் என்று என் மனசாட்சி கூட என்னை ஏளனம் செய்கிறது. சில சமயம் சோர்வாகி விடுகிறேன்… ஆனால் விடுவதில்லை.
ஏனென்றால் நான் ஒரு சாதாரண ஆதரவாளர் அல்ல. புரட்சித்தலைவி அவர்கள் பூங்குன்றனை ஒரு பிள்ளையாகப் பார்த்தார் என்று கழகத்தினர் சொல்லும் அளவிற்கு வளர்ந்தவன்.
என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்த அந்த விசுவாசம் இன்னும் என் உள்ளத்தில் தீபமாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. மனதில் காற்றடித்தாலும், புயல் வீசினாலும், விமர்சன மழை பொழிந்தாலும் இன்னும் தீபம் அணையாமல் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. தீபம் ஆடுகிறதே தவிர அணையவில்லை. பிரகாசம் குறைகிறதே தவிர இருள் அடையவில்லை. என்னுள் இருக்கும் இதே மனநிலை தான் எதிர்பார்ப்பில்லாத தொண்டர்களுக்கும் இருக்கும். பிரிந்து கிடக்கும் எந்த பிரிவில் இருந்தாலும் தொண்டனின் ஏக்கம் "இரட்டை இலை ஜெயிக்க வேண்டும். ஜெயிக்க வேண்டும்..!" அது வெறும் எண்ணங்கள் அல்ல உணர்வு..! உண்மை வெல்லும் என்ற நம்பிக்கை இன்னும் என் ரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப்பதிவின் மூலம் அவர் விஜய் கட்சிக்கு செல்லலாம் என்கிற மனநிலையில் இருந்தாலும் ஜெ., மீதான விசுவாசம் தடுத்து வருவதாகவும் அவர் கூற வருகிறார் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
