மண்டபம் தேடும் தவெக..! கரூர் செல்வதற்கு டிஜிபி-யிடம் விஜய் வைத்த 5 கோரிக்கைகள்..!
விஜய் வீடு வீடாக செல்லாமல், பாதிக்கப்பட்டவர்களை ஒரு மண்டபத்தில் சந்திக்கலாம். அக்டோபர் 13 அல்லது 14 அன்று செல்லலாம் என தேதி தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் இழப்பீட்டை விஜய் தனிப்பட்ட முறையில் வழங்குவார் என்று அறிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததன் பிறகு, தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்க அனுமதி கோரி, சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு ஈமெயில் மூலம் அக்டோபர் 7 அன்று அனுப்பப்பட்டு, அக்டோபர் 8 அன்று தவெக வழக்கறிஞர் அறிவழகன் தனியாக சமர்ப்பித்தார். மனுவில், விஜயின் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட நெரிசலை தவிர்க்க நான்கு நிபந்தனைகளுடன் ஐந்து முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
திருச்சி விமான நிலையம் முதல் கரூர் வரை பயணத்திற்கு உரிய பாதுகாப்பு.
விஜயின் வாகனத்திற்கு அருகில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத வாகனமும் இருசக்கர வாகனங்களும் உட்பட வர முடியாத அளவிற்கு போலீஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் மொபைல் ரோந்து அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.
விமான நிலையத்தில் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு
திருச்சி விமான நிலையத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களைப் பாதுகாக்க ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கரூர் நிகழ்வு இடம் சுற்றி பாதுகாப்பு
கரூரில் விஜய் பங்கேற்று நிதியுதவி வழங்கும் இடத்தைச் சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், ஏற்பாட்டாளர்களும், பாதுகாப்பு குழுவும் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
நிகழ்வுக்கு கட்டுப்படுத்தப்பட்ட ஒருவழி நுழைவு
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒரே நுழைவு மற்றும் வெளியேறும் வழி இருக்க வேண்டும். உள்ளே வரும் நபர்கள் முன்பே பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களிடம் அனுமதி சீட்டு இருப்பது கட்டாயமாக்கப்படவேண்டும்.
ஊடகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை
விஜய் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அணுக அனுமதி வழங்க கூடாது என கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு விஜய் தரப்பிலிருந்து டிஜிபியிடம் மனு அளித்துள்ளனர்.
இவை அனைத்தும், சம்பவத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விஜயின் பயணத்தை பாதுகாப்பாக நடத்தவும் வைக்கப்பட்டவை. த.வெ.க கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கூறுகையில், "அனுமதி கிடைத்தவுடன் விஜய் கரூர் சென்று குடும்பங்களை சந்திப்பார்" என்றார். ஏற்கனவே விஜய் 33 குடும்பங்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேசியுள்ளார். டிஜிபி அலுவலகம், கரூர் மாவட்ட எஸ்.பி.யை அணுகி நிகழ்ச்சி விவரங்களைத் தருமாறு அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்படும்.
விஜய் வீடு வீடாக செல்லாமல், பாதிக்கப்பட்டவர்களை ஒரு மண்டபத்தில் சந்திக்கலாம் என்று கூறியுள்ளது. அக்டோபர் 13 அல்லது 14 அன்று செல்லலாம் என தேதி தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் இழப்பீட்டை விஜய் தனிப்பட்ட முறையில் வழங்குவார் என்று அறிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, விஜயின் மாநில சுற்றுப்பயணம் நிறுத்தப்பட்டு, அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் த.வெ.க-வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.