டிடிவி. தினகரன் உடன் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் அதிமுக..!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் உடன் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான வைத்திலிங்கம் சந்தித்தது பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கமே உள்ளனர். ஆனால், ஓபிஎஸ் பக்கம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் இபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட போவதாக ஓ.பன்னீசெல்வம் அறிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் திடீரென அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இல்லத்திற்கு சென்று சந்தித்தனர். அந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளான வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இதனால், இவர்கள் ஓபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன. இதுதொடர்பாக இபிஎஸ் தரப்பிலும் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வருகை தந்தார்.
அப்போது, ஜூன் 7ம் தேதி தஞ்சாவூரில் வைத்தியலிங்கத்தின் மகனுடைய திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை வழங்கினார். வைத்திலிங்கத்தின் இல்லத்திருமண விழா ஓபிஎஸ் தலைமையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.