திமுக கூட்டணியில் டிடிவி.தினகரன்..? செந்தில் பாலாஜி கொடுத்த மெகா ஆஃபர்..!
ஸ்டாலினுடைய வாக்குறுதியான திமுக கூட்டணியில் 15 இடங்களா? அல்லது செங்கோட்டையன் சொன்ன விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் 40 இடங்களா என்ற ஆலோசனையில் டிடிவி.தினகரன் இருக்கிறார்.

மீண்டும் டிடிவி.தினகரனும், ஓ.பி.எஸும் தமிழகத்தில் எடப்பாடி தலைமை தாங்கும் அதிமுக என்.டி.ஏ கூட்டணிக்குள் வருவார்களா? என்பதே இப்போது மிகப்பெரிய ஒரு கேள்வியாக இருக்கிறது.
உண்மையில் டிடிவி.தினகரனுடைய பத்திரிகையாளர் சந்திப்புகளை தொடர்ந்து கவனித்தால் அவர் ஒரு விஷயத்தில்ல மிகவும் தெளிவாக இருக்கிறார். ‘‘கூட்டணிக்கு தலைமை தாங்கும் இரண்டு கட்சிகள் எங்களோடு தொடர்ந்து பேசி வருகின்றனர். அதனால் நாங்கள் எங்களுக்கு எந்த கூட்டணி வசதி, எங்களுக்கு எந்த கூட்டணி உகந்தது என்பதை நாங்கள் ஜனவரிக்கு பிறகு முடிவு எடுப்போம்’’ என்று டிடிவி.தினகரன் சொல்லி இருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் இது மூன்று மாத ஏற்பாடுகள் கிடையாது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகும் எங்களுடைய கட்சி எப்படி இருக்க வேண்டும்? எங்களுடைய அரசியல் பயணம் எப்படி செல்ல வேண்டும்? என்பதையெல்லாம் உள்ளடக்கித்தான் நாங்கள் கூட்டணி பற்றி முடிவெடுப்போம் என்று தெள்ளத் தெளிவாக சொல்லி வருகிறார்.
தவெக சார்பில் செங்கோட்டையன், டிடிவி. தினகரனோடு தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார். இருவருக்கும் அண்ணன்- தம்பி நட்பு இருக்கிறது. அதிமுகவில் இருந்தபோது இருவருக்குமான நட்பின் அடிப்படையில் டிடிவி.தினகரனோடு, செங்கோட்டையன் தொடர்ந்து பேசி வருகிறார். 40 சீட்டுகள் உங்களுக்கு நாங்கள் விஜய் தலைமையிலான கூட்டணியில் ஒதுக்குகிறோம். நீங்க வந்துவிடுங்கள் என்று செங்கோட்டையன், டிடிவி. தினகரனுடன் இரண்டு, மூன்று முறை இந்த ஒரு வாரத்தில் மட்டும் விரிவாக பேச்சை நடத்திவிட்டார் என்று சொல்கிறார்கள்.
இது இப்படி இருக்க, திமுக எப்படியாவது நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டணி சார்பாக டிடி.வி தினகரனிடம் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. திமுக சார்பாக டிடிவி.தினகரனிடம் பேசுபவர் முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதாவது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டிடிவி.தினகரனின் சட்டமன்ற உறுப்பினர்கள் அணியில் மிக முக்கியமானவராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போதைய அதிமுக ஆட்சியால் அப்போதைய சபாநாயகர் தனபாலால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களில் செந்தில் பாலாஜி ஒருவர். செந்தில் பாலாஜி, டிடிவி. தினகரனுக்கு அவ்வளவு நெருக்கமாக இருந்தும் ஒரு கட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது திமுக பக்கம் சென்று விட்டார். நன்றாக கவனிக்க வேண்டும். அவர் டிடிவி.தினகரன் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி திமுகவில் சேரும்போது டிடிவி தினகரனை விமர்சிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அப்போது செந்தில் பாலாஜி, ‘‘டிடிவி.தினகரன் சார்புடன் இருந்தேன். அவரோடு மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவருடைய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தேன். என்னுடைய நிலைப்பாட்டை நான் மாற்றிக்கொண்டு இப்போது திமுகவுக்கு வந்துட்டேன். அவரைப் பற்றி விமர்சிக்க என்னிடம் எதுவுமில்லை. நான் டிடிவி.தினகரனை பற்றி விமர்சிப்பேன் என்றெல்லாம் நீங்கள் எதிர்பாக்காதீர்கள்’’ என்று திமுகவில் சேர்ந்தபோதே டிடிவி.தினகரன் பற்றி எந்த ஒரு கடுமையான விமர்சனத்தையோ அல்லது மிதமான விமர்சனத்தையோ செந்தில் பாலாஜி வைக்கவில்லை.
இப்போதும் டிடிவி.தினகரனுக்கும், செந்தில் பாலாஜிக்கும் இருக்கக்கூடிய அந்த நட்பு, அந்த உறவு அப்படியேதான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த நிலையில், செந்தில் பாலாஜி, டிடிவி. தினகரனை தொடர்பு கொண்டு ‘‘இனிமேல் நீங்கள் வந்த வழியே நீங்க திரும்பிப் பார்க்காதீர்கள். அதிமுக பக்கம் உங்கள் பார்வை போக வேண்டாம். நீங்கள் முன்னோக்கி வாருங்கள். நீங்கள் திமுக கூட்டணிக்கு வாருங்கள். நீங்கள் இந்த ஐந்து வருட ஆட்சியை விமர்சித்து இருக்கிறீர்கள். விமர்சித்த கட்சியே திமுக கூட்டணிக்கு வருகிறது என மக்களிடம் நல்ல எண்ணம் ஏற்படும். இனி உங்களுடைய அரசியல் பயணம் வெற்றிகரமாக இருக்க வேண்டும். எங்களோடு வந்துவிடுங்கள். நான் முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்லி அதிகபட்சம் 15 சட்டமன்ற தொகுதிகளை உங்களுக்கு பெற்று தருகிறேன்.
அதுமட்டுமல்ல, டெல்டா, தென்மாவட்டங்களில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்களைப் பற்றி ஸ்டாலின் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என டிடிவி. தினகரன் உடனான பழைய நட்பில் செந்தில் பாலாஜி திமுக கூட்டணிக்கு வருமாறு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்’’ என்கிறார்கள்.
இதனை மையப்படுத்தியே டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘எங்கள் கட்சி அவர்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று எங்களோடு இரண்டு கட்சிகள் பேசுவது உண்மைதான்’’ என்று பேசி வருகிறார். தவெக சார்பில் செங்கோட்டையன் பேசுகிறார். திமுக சார்பில் செந்தில் பாலாஜி, டிடிவி. தினகரனோடு பேசுகிறார். குறிப்பாக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அடுத்து வருகிற சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக ஆகக்கூடாது. அவர் 2021-ல் பெற்ற வெற்றியைக்கூட பெற்று விடக்கூடாது என்பதில் இந்த மூவரும் முனைப்பாக இருக்கிறார்கள்.
டிடிவி.தினகரன், செங்கோட்டையன். செந்தில் பாலாஜி இந்த மூவருமே ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர்கள் தான். அதிமுகவிலே செல்வாக்கு செலுத்தியவர்கள். அப்படிப்பட்ட இந்த மூன்று பேரும் சேர்ந்து தான் இன்றைக்கு அதிமுக 2026 -ல் 2021 பெற்ற வெற்றியை கூட பெற்றுவிடக்கூடாது என்ற முனைப்போடு செயல்படுகிறார்கள். டிடிவி.தினகரன் இப்போது செந்தில் பாலாஜி சொன்ன ஸ்டாலினுடைய வாக்குறுதியான திமுக கூட்டணியில் 15 இடங்களா? அல்லது செங்கோட்டையன் சொன்ன விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் 40 இடங்களா என்ற ஆலோசனையில் டிடிவி.தினகரன் இருக்கிறார்.