வங்கியில் பணமில்லை..! G-pay பண்ணுங்க..! வீடியோ போட்டு கேட்ட திருமா..!
உங்களுடைய நிதி வந்து சேராத நிலையில் நாம் வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கையில் காசோலைகளை வழங்கி இருக்கிறோம். எந்த காசோலையும் பணம் இல்லை என்று திரும்பிப் போய் விடக்கூடாது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான நிலையில் அதில் 40 பேரில் குடும்பத்தினருக்கு திருமண மண்டபம் ஒன்றில் வைத்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார் விசிக தலைவர் திருமாவளவன். முன்கூட்டியே அதற்காக ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் பத்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், முகநூல் மூலம் மீண்டும் வீடியோ வெளியிட்டு இருக்கும் திருமாவளவன், நிகழ்ச்சி முடிந்து விட்டது என்று நிர்வாகிகள் அப்படியே இருந்து விடக்கூடாது என்றும் நிவாரணமாக வழங்கிய காசுகள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துவிடாமல் இருக்க கட்சியின் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அந்த வீடியோவில், ‘‘கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரில் 40 குடும்பத்தினர் அந்த அரங்கத்திற்கே வந்திருந்தார்கள். நமது கட்சியின் சார்பில் வழங்கப்பட்ட காசோலைகளை கண்ணீர் சிந்த, மிகுந்த கவலையோடு பெற்றுக் கொண்டதோடு சில கோரிக்கைகளையும் முன் வைத்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் அரசு வேலை வாய்ப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அந்த கோரிக்கையை காசோலை பெற்ற போதும் நம்மோடு அந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் தெரிவித்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று உறுதி அளித்தோம். அந்த நிகழ்வில் இழப்பீடு வழங்குவதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலா பத்தாயிரம் ரூபாய் கொடை அளிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் எடுத்து இருந்தேன். இன்னும் ஏராளமானவர்கள் அந்த பணத்தை வங்கி கணக்கில் செலுத்த முடியாத நிலையில் இருப்பதை அறிந்தேன்.
ஜிபே மூலமாக செலுத்தும் படி நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால் அதிலே சில குளறுபடிகள் அல்லது கோளாறுகள் இருந்த காரணத்தினால் வங்கியில் பணம் செலுத்த இயலவில்லை என்று பலரும் தொலைபேசி மூலமாக தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். தற்போது அது சரி செய்யப்பட்டு இருக்கிறது. எனவே மாவட்ட செயலாளர்கள் முன்னணி பொறுப்பாளர் பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களின் பங்களிப்பை பங்களிப்பை வங்கியின் கணக்கில் கட்சி கணக்கில் ஜிபே மூலம் தலா 10,000 செலுத்த வேண்டும். வசதி உள்ளவர்கள் கூடுதலாக நிதியை கொடுக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்து விட்டது என எண்ணி கடந்து போய்விட வேண்டாம்.
உங்களுடைய நிதி வந்து சேராத நிலையில் நாம் வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கையில் காசோலைகளை வழங்கி இருக்கிறோம். எந்த காசோலையும் பணம் இல்லை என்று திரும்பிப் போய் விடக்கூடாது. எனவே இந்த ஓரிரு நாட்களில் தோழர்கள் உடனடியாக பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட செயலாளர்கள் மட்டும்தான் என்று இல்லை. கட்சியை முன்னணி தோழர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் அந்த கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்’’ எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.