உடைந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி..! பின்னணியில் பாஜக..! இறுதி முடிவெடுத்த ஸ்டாலின்..?
காங்கிரஸ் கட்சி வெளியேறினால் அவர்களுக்கு கடந்த முறை கொடுத்த 25 தொகுதிகள் மிச்சப்படும். அதை கூட்டணியில் புதிதாக சேரும் கட்சிகளுக்கும், கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கும் கட்சிகளுக்கும் பிரித்துக் கொடுக்கலாம்’’ என திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

கூட்டணி விவகாரத்தால் திமுக தேர்தல் பணிகள் சுணக்கம்
தமிழகத்தில் நம்மை வைத்து தான் திமுக ஆட்சிக்கு வருகிறது என நினைக்கும் காங்கிரஸ், நமது கட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லையே என்று வருத்தப்படுகிறதாம். தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பே சட்டசபை தேர்தல் நடத்தி ஆகவேண்டும். தமிழகத்தை போல் கேரளா, அஸ்ஸாம் மேற்கு வங்காளம் மாநிலங்களிலும் ஆட்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒன்றாக சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஏப்ரல் மாதம் பல்வேறு கட்டங்களாக 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இரண்டாவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும். அப்படி தேதி அறிவிக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் வந்து விடும். ஆகையால் அதற்கு முன்னதாகவே தமிழ்நாட்டில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற தொடர் பணிகள் இருப்பதால் ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பணிகளை எப்போதோ தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு, இரண்டு ராஜ்யசபா சீட்டு என அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.
காங்கிரஸை விட பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகம்
இதனால் அதிர்ச்சியடைந்த திமுக இன்னும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைகளுக்கு முழுமையாக காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் டெல்லியில் இருந்து வரத் திட்டமிட்டு இருந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகையும் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. அதிகமான தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கேட்பதற்கு கட்சியின் வளர்ச்சி ஒன்றே காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வாங்கிய வாக்கு சதவீதத்தை விட, மற்றொரு தேசிய கட்சியான பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகம். இதனைப் பார்த்து காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை அதிர்ந்து போயுள்ளது.
தமிழகத்தில் நம்மை வைத்துத்தான் திமுக ஆட்சிக்கு வருகிறது என்று நினைக்கும் காங்கிரஸ் கட்சி நமது வளர்ச்சிக்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று வருத்தப்படுகிறதாம். அதனால்தான் இந்த முறை ஆட்சியில் பங்கு என்ற கோஷத்த முதலிலேயே ஓங்கி ஒழித்து வருகிறது. ஆனால், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையோடு பயணித்து வரும் திமுக, காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று முதலிலேயே மறுத்துவிட்டது. இதனால் தொகுதிகள் எண்ணிக்கையாவது அதிகம் பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கங்கணம் கட்டுகிறது. குறைந்தது 30 தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
ஆனால், தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்தி தர முடியாது என கறார் காட்டுகிறது திமுக. காங்கிரஸ் கட்சி இப்படி குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இரட்டை இலக்க தொகுதிகள் வேண்டும் என்று ஒருமித்த குரலில் கோஷங்களை எழுப்பி வருகின்றன. அது மற்றொரு பக்கம் திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் எப்படியாவது தேமுதிக, பாமகவை கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவர திமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து ஆட திமுக திட்டம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸால் பாஜக கொடுக்கும் குடைச்சல்
சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று முன் தினம் நடந்த அமைச்சரவை கூட்டம் முடிவடைந்ததும் மூத்த அமைச்சர்கள் சிலர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். அப்போது, ‘‘காங்கிரஸ் கட்சியை நாம் கூட்டணியில் வைத்திருப்பதால் தான் மத்தியில் ஆளும் பாஜக அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மூலமாக நமக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். காங்கிரஸ் இல்லையென்றால் நம் மீதான அழுத்தம் குறையும்’’ எனச் சொல்லி இருக்கிறார்கள்.
அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினும், ‘‘நாமாக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியே அனுப்பக்கூடாது. அவர்களாகவே சென்றால் விட்டுவிடலாம். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் அவர்களுக்கு கடந்த முறை கொடுத்த 25 தொகுதிகள் மிச்சப்படும். அதை கூட்டணியில் புதிதாக சேரும் கட்சிகளுக்கும், கூடுதல் தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கும் கட்சிகளுக்கும் பிரித்துக் கொடுத்தால் எல்லா பிரச்சனைகளுமே முடிவுக்கு வந்து விடும்’’ என திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட முடியும் என திமுக தலைமை நம்புவதாக கூறுகிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.
