- Home
- Politics
- தமிழகத்தின் 'பவர் சென்டர்' எது? 2026-ல் ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் 10 'மெகா' தொகுதிகள்.! லிஸ்டில் உங்கள் தொகுதி இருக்கா?
தமிழகத்தின் 'பவர் சென்டர்' எது? 2026-ல் ஆட்சியைத் தீர்மானிக்கப்போகும் 10 'மெகா' தொகுதிகள்.! லிஸ்டில் உங்கள் தொகுதி இருக்கா?
2026 Election in Tamilnadu : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் 10 சட்டமன்ற தொகுதிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் 10 சட்டமன்ற தொகுதிகள்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் பம்பரமாய் சுழன்று வருகின்றன. ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக பல கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் 10 முக்கிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அந்த தொகுதிகள் என்ன? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொளத்தூர்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அவர் இந்த தொகுதியில் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளார். எனவே அனைவராலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் தொகுதியாக இது உள்ளது. இந்த தொகுதியில் திமுகவை எதிர்த்து அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. மேலும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் பக்கத்து தொகுதியான பெரம்பூரில் நடிகர் விஜய் போட்டியிடுவதால் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி அரசியல் களத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பெரம்பூர்
புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் பெரம்பூர் தொகுதியில் களமிறங்குகிறார். பெரம்பூர் தொகுதி பாரம்பரியமாக திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. திமுகவின் ஆர் .டி சேகர் இந்த தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இந்த தொகுதியில் பாமகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நகர்ப்புற தொகுதியாகவும், உழைக்கும் வர்க்கத்தினரை அதிகம் கொண்ட தொகுதியாகவும் விளங்குகிறது. வலிமை மிக்க திமுக வேட்பாளர், புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் விஜய் போன்றவர்கள் களமிறங்கி இருப்பதால் இந்த தொகுதி அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். 1989, 1991,1996, 2006, 2011, 2016, 2021, 2026 ஆகிய தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் 1996, 2006 ஆகிய இரு தேர்தல்களில் மட்டுமே அவர் தோல்வியை தழுவி இருக்கிறார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, பாஜகவுடனான கூட்டணி ஆகியவை எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. திமுகவும் வலிமையான வேட்பாளரை அறிவித்துள்ளதால் எடப்பாடி தொகுதி தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதியாகும். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் 2023 ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். திமுகவின் அடுத்த முகமாக கருதப்படும் இவர் மீண்டும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் போட்டியிடுவது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி முதலமைச்சர் ஆக்கப்படுவார் என்கிற பேச்சு அடிபடும் நிலையில், இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றி என்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் ஆனதாகவும், தமிழக அரசியலில் புது மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
மயிலாப்பூர்
சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளில் மயிலாப்பூர் தொகுதியும் ஒன்றாகும். இந்த தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் பாஜக அதிக வாக்குகளை பெற்ற தொகுதியாக இந்த தொகுதி விளங்கி வருகிறது. கடந்த தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற மயிலை வேலு மீண்டும் இந்த முறையும் களமிறங்கி இருக்கிறார். இதனால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியும் தமிழக 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறி உள்ளது.
கோவை தெற்கு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது சொந்த தொகுதியான கரூர் தொகுதியில் இருந்து மாறி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட இருக்கிறார். திமுகவின் இந்த நடவடிக்கை அரசியலில் துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோவையின் முக்கிய தொகுதியான கோவை தெற்கில் திமுக மற்றும் அதிமுகவிற்கு நேரடி போட்டி உருவாகியுள்ளது
மன்னார்குடி
டெல்டா மாவட்டங்கள் பொதுவாக திமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி தஞ்சை போன்ற இடங்களில் திமுக பெருவாரியான எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. அந்த வகையில் மன்னார்குடி தொகுதியில் கடந்த மூன்று முறை வெற்றி பெற்ற டிஆர்பி ராஜா மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குறார். அதிமுக கூட்டணி சார்பில் அமமுக போட்டியிடுகிறது. அமமுகவிற்கு இந்த தொகுதியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதால் மன்னார்குடி தொகுதியின் தேர்தல் முடிவுகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. மீண்டும் டிஆர்பி ராஜா வெல்வாரா அல்லது அமமுக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
போடிநாயக்கனூர்
போடிநாயக்கனூர் தொகுதி முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த தொகுதியாகும். 2001, 2006 ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் அவர் போட்டியிடுவது தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாற்றமாகும். அவருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்த போதிலும் உதயசூரியன் சின்னத்தில் அவர் நிற்கும் பொழுது அதன் முடிவு எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு தமிழ்நாடு ஆவலுடன் காத்திருக்கிறது.
காரைக்குடி
தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் டிடிவி தினகரனின் அமமுக கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளது. குறிப்பாக காரைக்குடி போன்ற தொகுதிகளில் அமமுகவிற்கு கணிசமான ஆதரவு உள்ளது. இந்த நிலையில் காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானும் களம் இறங்குகிறார். மேலும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு ஏற்கனவே வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருக்கும் மாங்குடி மீண்டும் களம் இறக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ மாங்குடி, அமமுக தேர் போகி பாண்டி, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகிய அனைவருமே செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் காரைக்குடி தொகுதி மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
காட்டுமன்னார் கோவில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஆக இருக்கும் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசியலுக்கு திருமாவளவன் திரும்புவது என்பது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொங்கு சட்ட சபை அமையும் பட்சத்தில் திருமாவளவன் அமைச்சரவையிலும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

