ஓபிஎஸ் கூடாரம் காலி..! திமுகவில் இணையும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ..!
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மனோஜ் பாண்டியன் இணைவது திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் தலைவிரித்தாடும் சூழலில் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் நின்றவர் மனோஜ் பாண்டியன். ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏவான மனோஜ் பாண்டியன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஓ.பன்னீர் செல்வம் கடந்த ஆட்சியில் தர்மயுத்தம் நடத்தியபோதும் மனோஜ் பாண்டியன், அவரது தந்தை மறைந்த பி.எச்.பாண்டியன் ஆகியோர் ஓ.பி.எஸ் பக்கமே நின்றனர். இப்போதும் அதிமுகவில் 60க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கும்போது, ஓ.பன்னீர் செல்வத்துடன் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.
கடந்த சிலவாரங்களாகவே தனது ஆதரவாளர்களோடு தொடர்ந்து ஆலோசனையும் நடத்தி வந்தார். அப்போது அவரிடம் தொண்டர்கள் பலரும் உங்களின் எதிர்காலத்திற்கு கட்சியில் பெரும்பான்மையினோர் இருக்கும் பக்கம் செல்வதே நல்லது என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மனோஜ் பாண்டியன், ‘விசுவாசத்தின் பக்கமே தான் நிற்பேன்’ என உறுதியாகச் சொல்லி வந்தார். இந்நிலையில், திமுகவில் இன்று இணையவுள்ளார்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மனோஜ் பாண்டியன் இணைவது திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கை வலுப்படுத்தும்.
பி.எச்.பால் மனோஜ் பாண்டியனுக்கு வழக்கறிஞர், அரசியல்வாதி, முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி என பல்வேறு முகங்கள் உண்டு. 2001 தேர்தலில் சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2010 முதல் 2016 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.
மனோஜ் பாண்டியன் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று சென்னையில் பிறந்தார். இவர் ஒய்.எம்.சி.ஏவின் முதல் பொதுச் செயலாளர் ராவ் சாஹிப் ஜி.சாலமனின் பேரனும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் (1984-89) சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனும் ஆவார். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் சட்டப் படிப்பை முடித்தார். வழக்கறிஞராக தொழில் செய்து வந்த இவர் அரசியல் பணியிலும் களமிறங்கினார்.