- Home
- Politics
- விஜய்க்கு நோ.. அதிமுகவுக்கும் நோ..! திமுகவுக்கும் சாட்டையடி..! பேரத்தை ஏற்றும் பிரேமலதா..!
விஜய்க்கு நோ.. அதிமுகவுக்கும் நோ..! திமுகவுக்கும் சாட்டையடி..! பேரத்தை ஏற்றும் பிரேமலதா..!
பிரேமலதாவின் கூட்டணி கணக்கு என்னவாக இருக்கும் என தமிழக கட்சிகள் குழப்பத்தில் உள்ளன. இது கூட்டணிக்கான பேரத்தை உயர்த்தும் பிரேமலாதவின் அரசியல் கணக்கு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கேப்டன் உருவாக்கிய ஆல விருட்சம்
‘‘நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டுவோம். யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது. நேற்று முளைத்த காளான்களெல்லாம் இங்கே எடுபடாது. ஒரு நாள் மழைக்கே தாங்காது. தேமுதிக என்பது கேப்டன் உருவாக்கிய ஆல விருட்சம்’’ என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விமர்சித்துள்ளது கூட்டணி முடிவில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் நடக்க இருக்கிறது. நமது தலைவர் புரட்சி கலைஞர் கேப்டன் இந்த கழகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஆரம்பித்தார். கேப்டன் கட்சியை ஆரம்பித்தபோது, மதுரையில் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று 28 லட்சத்திற்கும் மேல் நமது நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களின் பேராதரவோடு மிகப் பிரமாண்ட வெற்றி மாநாடு நடத்தி சரித்திர சாதனை படைத்திருக்கிறோம்.
தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை
நம் தலைவர் இல்லாமல் நாம் நடத்த இருக்கின்ற முதல் மாநாடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தும் இந்த மாநாட்டின் வெற்றி உங்கள் ஒவ்வொருவரின் வெற்றி. வரவிருக்கும் 2026 தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்த மாநாடு அமைய இருப்பதோடு இந்த வெற்றி ஒவ்வொருவரின் வெற்றி என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும், கிளையிலும் பேனர்கள், கொடிகள் அமைத்து தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கடலூர் மாநாட்டில் பெருவாரியாக கலந்து கொள்ள வேண்டும்.
தற்பொழுது தமிழகத்தில் டாஸ்மாக், கஞ்சா, போதை கலாச்சாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை, விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் சட்டம், ஒழுங்கு சீர்க்கேடு பிரச்சினை விவசயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கொள்முதல் நிலையங்கள், நெசவாளர்கள் நூல் விலையற்றம், இலங்கை கடற்படையால் மீனவர்கள் பிரச்சனைகள், மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பத்திரப் பதிவு கட்டண உயர்வு, அனைத்து மருத்துவமனையிலும் சுகாதாரச் சீர்கேடு, குண்டும், குழியுமாக உள்ள சாலைகள், அனைத்து அரசு மன்னிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை, நலிவுற்றுள்ள சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மற்றும் விசைத்தறிகள், போதிய போக்குவரத்து வாடு இல்லாத கிராமங்களுக்கும், போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் பிரச்சனை, தூய்மை பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் பிரச்சனைகள் மற்றும் லஞ்சம், ஊழல் என எந்த வகையிலும் தமிழகத்தில் மக்கள் நிம்மதியாக வாழ இயலாத சூழல் உள்ளது. தமிழக மக்களின் அனைத்து உரிமைகளையும் மக்கள் இழந்து வாடுகிறார்கள்.
மக்கள் நலனில் கவலையில்லை
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்கின்றது. ஆனால் அவை அனைத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு சென்றடைவது இல்லை. ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பார்கள். அதுபோல் அரசினுடைய திட்டங்கள் எல்லாம் சொல்லலவிலும், ஏட்டளவிலும் அறிவிப்புகளாகவே இருக்கின்றது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கொடுத்த அதிகாரத்தை சரியான முறையில் மக்களுக்கு பயன்படுத்தாமல், மக்கள் நலனை பற்றி கவலைப்படாமல் இருக்கும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்திய நாட்டில் லஞ்சத்தையும், ஊழலையும், வறுமையையும், விலைவாசி உயர்வையும், வேளையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிப்போம் என்ற சூளுரையோடு ஜாதி, மதம், இனம் என எந்தவித வேறுபாடும் பார்க்காமல் நாம் அனைவரும் ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே இனம் என்ற கோட்பாட்டுடனும் தமிழ்நாட்டிற்கு நன்மைகள் நடந்திட வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்குடனும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கடலூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாசார் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடத்திட கழக பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
பேர வலிமையை அதிகரிக்கும் பிரேமலதா
நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டும் வகையில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெறவுள்ளது. நன்றியை மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கும் பாடம் புகட்டுவோம். யாரும் இங்கே எடுத்த உடனே வந்துவிட முடியாது. நேற்று முளைத்த காளான்களெல்லாம் இங்கே எடுபடாது. ஒரு நாள் மழைக்கே தாங்காது. தேமுதிக என்பது கேப்டன் உருவாக்கிய ஆல விருட்சம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தேமுதிகவுடன் மீண்டும் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. உறுதியளித்தபடி அதிமுகவினர் ராஜ்யசபா சீட் கொடுக்கவில்லை என்கிற வருத்தம் பிரேமலதாவிற்கு இருந்து வருகிறது. கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதற்கு அதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் மீண்டும் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் இடம்பெறவும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சித்துள்ளார் பிரேமலதா. அடுத்துள்ள ஒரே வாய்ப்பு தவெக. ஆனல் நேற்று முளைத்த காளான் என விஜய் கட்சியையும் ஒருசேர விமர்சித்துள்ளார். இந்நிலையில் பிரேமலதாவின் கூட்டணி கணக்கு என்னவாக இருக்கும் என தமிழக கட்சிகள் குழப்பத்தில் உள்ளன. இது கூட்டணிக்கான பேரத்தை உயர்த்தும் பிரேமலாதவின் அரசியல் கணக்கு என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
