அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை.. பங்களா வீட்டை முடக்கி அதிரடி..!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதியதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்திய நிலையில் அந்த வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
senthil balaji
அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் சோதனை நடத்திய பிறகு கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதியதாக கட்டி வரும் பங்களா வீட்டில் 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனையின் இடையே அசோக்குமாரின் மனைவி நிர்மலா சொத்து ஆவணங்களுடன் சோதனை நடைபெறும் பங்களாவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அசோக் வீட்டில் சம்மன் ஒட்டினர். அதனைத் தொடர்ந்து கரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை வழங்கினர்.
அந்த கடிதத்தில் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் இருக்கும் பங்களா வீட்டின் சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும், அமலாக்கத்துறை சென்னை இணை இயக்குனரிடம் முன் அனுமதி பெறாமல் சொத்துக்களை மாற்றவோ, விற்பனை செய்யவோ வேறுவிதமாக கையாளவோ கூடாது என குறிப்பிட்டுள்ளனர். இந்த வீட்டில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.