அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு! பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளதை அடுத்து விரைவில் பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
சுமார் 18 மணிநேரம் வரை நடைபெற்ற சோதனையின் முடிவில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையை சி.ஆர்.பி.எஃப் போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும், இசிஜி-யில் மாறுபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், ரத்த குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக பரிசோதனை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக ஓமந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி(47) அவர்களுக்கு இருதய இரத்த நாள் பரிசோதனை இன்று காலை 10.30 மணியளவில் செய்யப்பட்டது. அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.