மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்.. திரும்ப பெறுகிறதா தமிழக அரசு? இதுதான் காரணமா?
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு திரும்ப பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினாவில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திட்டத்தை தொடர தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், இந்த திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்கள் ஆட்சி அமைந்ததும் பேனா நினைவு சின்னம் இடிக்கப்படும் என கூறிவந்தார். கடும் எதிர்ப்புகள் மத்தியில் நினைவுச் சின்னத்திற்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித் துறையானது கடிதம் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் கலைஞர் நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு மற்றும் மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் 15 நிபந்தனைகளும் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, பேனா நினைவு சின்னம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. இதனிடையே, கடலுக்குள் பேனா அமைக்கும் இத்திட்டத்திற்கு தடை விதிக்க கோரி மீனவர்கள் அமைப்பும், அதிமுகவும் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடம் மற்றும் இனப்பெருக்கம் பாதிக்கும் என்பதனை கருத்தில் கொண்டு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதை தமிழக அரசு திரும்பப்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.