விஜய்க்கு எப்படி கூட்டம் கூடுகிறது தெரியுமா..? அம்பலப்படுத்திய பொன்முடி..!
"சொன்னீர்களே செய்தீர்களா?" என்று திமுகவின் வாக்குறுதிகளை கேள்வி எழுப்பினார். இங்கும் பெரும் கூட்டம் தன்னெழுச்சியாக கூடியது திமுகவை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜயின் இந்தப் பயணம் தமிழக அரசியலை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்களை முன்வைத்து, விஜய் தமிழக அளவில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார். இது டிசம்பர் வரை தொடரும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை 16 மாவட்டங்களில் கூட்டங்கள் நடைபெற உள்ளன. "உங்க விஜய் நான் வரேன்" என்ற முழக்கத்துடன் இந்தப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். விஜய், திமுகவின் ஊழல், அதிமுகவின் பலவீனங்களை விமர்சித்தார். திருச்சியில் முதல் பொது கூட்டத்தில் "சொன்னீர்களே செய்தீர்களா?" என்று திமுகவின் வாக்குறுதிகளை கேள்வி எழுப்பினார். இங்கும் பெரும் கூட்டம் தன்னெழுச்சியாக கூடியது திமுகவை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜயின் இந்தப் பயணம் தமிழக அரசியலை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது ரசிகர்கள் கூட்டம். இது ஓட்டாக மாறாது என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய்க்கு எப்படி கூட்டம் கூடுகிறது என திமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான பொன்முடி விமர்சித்துள்ளார். அவர், ‘‘விஜய்க்கு கூடும் கூட்டம் குறித்து முதல்வரும், துணை முதல்வரும் தெளிவாகக் கூறி இருக்கிறார்கள். அவரைப் பொறுத்த வரையில் ஏதோ செய்ய வேண்டும் என நினைத்து செய்து கொண்டு இருக்கிறார். சனிக்கிழமை தோறும் பயணம் செய்கிறார். எங்கள் மாவட்டமான விக்கிரவாண்டியில்தான் அவரது முதல் மாநாடு நடந்தது. அந்த விக்கிரவாண்டி மாநாட்டில் யார் யார் கலந்து கொண்டார்களோ, அதே கும்பல், அதே ஆட்கள்தான் மதுரை மாநாட்டிலும் கலந்து கொண்டார்கள். அவர்கள்தான் திருச்சியிலும் கலந்து கொண்டார்கள். னென்றால் தமிழகம் முழுவதும் விஜய்க்கு இருக்கும் ஆட்கள் மொத்தமே அவ்வளவுதான்.
அதனால்தான் விஜய் சனிக்கிழமை, சனிக்கிழமை என்கிறார். ஏனென்றால் அதே கும்பல் வரவேண்டுமல்லவா? தினம் ஒவ்வொரு தொகுதிக்கும் விஜய் சென்றால் இவர்கள் எல்லாம் அங்கே செல்ல முடியாது. கூட்டம் இருக்காது என்கிற உணர்வோடு இதை செய்து கொண்டு இருக்கிறார். எப்படி இருந்தாலும் அடுத்த முறை மட்டுமல்ல. தொடர்ந்து தமிழகத்தை ஆளக்கூடிய முதல்வர் தளபதிதான் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. அதை அவரே சொன்னதுபோல் புதுசோ, பழசோ யார் வந்தாலும் திமுகவை ஆட்டிப்பார்க்க முடியாது.
அதிமுகவில் உட்கட்சி பிரச்சினை இல்லை. அது ஐந்து கட்சி. ஆகையால் ஐந்து கட்சியில் இருப்பவர்கள் மாறி மாறிப்போய் அமித் ஷாவை பார்த்துவிட்டு வருகிறார்கள். அதிமுக, பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது என துணைமுதல்வர் உதயநிதி முன்பே சொல்லிவிட்டார். அதுதான் உண்மை’’ எனத் தெரிவித்தார்.