- Home
- Politics
- விஜய் மீது கை வைத்தால் செந்தில் பாலாஜிக்கு செக்..! அமித் ஷா ஸ்கெட்ச்..! சமாதானத்தில் இறங்கிய திமுக..!
விஜய் மீது கை வைத்தால் செந்தில் பாலாஜிக்கு செக்..! அமித் ஷா ஸ்கெட்ச்..! சமாதானத்தில் இறங்கிய திமுக..!
இந்த விஷயத்தை சாதுர்யமாக எதிர்கொள்வதே தமக்கு நல்லது என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்புகிறார். வேகமாக செல்ல வேண்டாம் என அமித் ஷாவை இருதரப்புக்கும் நெருக்கமானவர்களைக் கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியிலும் திமுக களம் இறங்கி உள்ளதாகச் சொல்கிறார்கள்

தவெகவை துவங்கி முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரியாக திமுகவையும், கொள்கை எதிரியாக பாஜகவையும் விஜய் அறிவித்தார். ஆனாலும் கடந்த ஜூன் மாதம் வரை விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று தமிழக பாஜக தீவிரமாக முயன்று பார்த்தது. நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உட்பட பலரும் நேரடியாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்து பார்த்தனர். ஆனால், விஜய் கடைசி வரை பிடி கொடுக்கவே இல்லை. அதன் பிறகே விஜயையும், தவெகவையும் பாஜகவினர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பதால், விஜய்க்கான ஆதரவு அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் நடுநிலை வாக்காளர்களை விஜய் கவரத் தொடங்கியதை அனைத்து கட்சிகளும் உணர்ந்தனர். இந்நிலையில் கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் தவெகவுக்கு சிக்கல் எழுந்தது. டெல்லியின் உதவியை நாட சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா இருவரும் முயன்றனர். அதன்பின் ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு கமாண்டோ பாதுகாப்புடன் தனி விமானத்தில் பயணித்தார்.
மீனுக்கு தவமிருந்து காத்திருந்த கொக்கும் போல இந்த சம்பவத்தை பயன்படுத்தி தவெகவை தங்களின் கூட்டணிக்கு கொண்டுவர பாஜக சகல வழிகளையும் கையாண்டு வருகிறது. அதற்கு காரணம், தமிழ்நாட்டில் பாஜக எடுத்த கருத்துக்கணிப்பே என்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் விஜய்க்கு சுமார் 15 சதவிகிதம் வரை மக்களின் ஆதரவு இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. இதனை தேர்தல் ஆலோசகர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் அமித் ஷாவும் ஆச்சரியமடைந்து, கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வர முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தை பெரிதாக்கி அரசியல் செய்வதன் மூலம் திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை கட்டமைக்க முடியும் என அதிமுகவும், பாஜகவும் நம்புகின்றன.
அதனால், கரூர் சம்பவத்தின் பின்னணியில், திமுக தரப்பு தான் இருக்கிறது என்று சொல்லும் தவெகவினர் கருத்தை, அதிமுகவினரும், பாஜகவினரும் வழி மொழிகின்றனர். நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் ஒரு நபர் கமிஷனின் விசாரணை நியாயமாக இருக்காது. விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரே குரலில், பாஜகவும், அதிமுகவும் சொல்வதன் பின்னணியில் கூட்டணி கணக்குகளே உள்ளன.
இந்நிலையில், கரூர் சம்பவத்துக்கு ஆறுதல் சொல்லும் விதமாக விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணியில் விஜயும் இணையலாம்' என்று கூறப்படுகிறது.
விஜயுடனான தனது பேச்சில் அதை உணர்த்திய அமித் ஷா, 'கரூர் சம்பவத்துக்குப் பின், உங்களுக்கு அச்சுறுத்தல் கூடுதலாகி உள்ளது. அதனால், ஏற்கனவே வழங்கும் மத்திய அரசு பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்தில், திமுகவை முழுமையாக குற்றம் சாட்டுவதால், அக்கட்சியினர் விஜய் மீது கோபத்தில் இருப்பபார்கள். அதனால், தவெக தரப்பில் அடுத்தடுத்து நடக்கக்கூடிய பிரசார கூட்டங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என்றும் விஜயிடம் எச்சரித்துள்ளார் அமித் ஷா. இதன்தொடர்ச்சியாக தற்போது விஜய்க்கு மத்திய அரசு வழங்கி வரும் சிஆர்பிஎப் பாதுகாப்பை இரண்டு மடங்காக்கும் வேலைகளை மத்திய உள்துறை அமைச்சகம் துவக்கி இருக்கிறது.
நெருக்கடியான சூழலில் ஆதரவாக இருப்பதன் மூலம் தவெக தலைவர்களும், தொண்டர்களும் அதிமுக - பாஜக - தவெக கூட்டணிக்கு தலைமையை வலியுறுத்துவார்கள் என திட்டமிட்டே அதற்கேற்ப காய்களை நகர்த்துகிறார் அமித் ஷா எனக் கூறப்படுகிறது. ஒருவேளை எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுப்பது போல கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டால், சிபிஐ அதிகாரிகளை வைத்து திமுகவினருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளையும் செய்ய அமித் ஷா தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த விஷயத்தில் அமித் ஷா நினைப்பது போல எதுவும் நடந்து விடக்கூடாது என்ற பதற்றத்தில் திமுக தரப்பு அச்சத்தில் உள்ளது. கரூர் வழக்கை சிபிஐ கையில் எடுத்தால், நிச்சயம் அது திமுகவுக்கு பாதகமாக அமையலாம். தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து மொத்த திமுகவையும் தேர்தல் வேலை பார்க்க விடாமல் பாஜக செய்து விடும் என அமித் ஷாவின் திட்டங்களை அறிந்த திமுக தலைவர்கள் தலைமையிடம் எடுத்துக் கூறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
ஆகவே, இந்த விஷயத்தை சாதுர்யமாக எதிர்கொள்வதே தமக்கு நல்லது என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்புகிறார். அதனால், இந்த விஷயத்தில், வேகமாக செல்ல வேண்டாம் என பாஜக தரப்பையும், அமித் ஷாவையும் இருதரப்புக்கும் நெருக்கமானவர்களைக் கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியிலும் திமுக தரப்பு களம் இறங்கி உள்ளதாகச் சொல்கிறார்கள் அறிவாலயத்துக்கு நெருக்கமானவர்கள்.