- Home
- Politics
- 200 தொகுதிகளில் திமுக போட்டி..! கூட்டணி கட்சிகளுக்கு சம்பட்டி அடி..! ஜெ., பாணியில் மு.க.ஸ்டாலின் அதிரடி..!
200 தொகுதிகளில் திமுக போட்டி..! கூட்டணி கட்சிகளுக்கு சம்பட்டி அடி..! ஜெ., பாணியில் மு.க.ஸ்டாலின் அதிரடி..!
இவர்கள் எல்லாம் வெளியேறினால் திமுக ஒரு புது கூட்டணியை உருவாக்க நினைக்கிறது. யார் யார் தன் பக்கம் வருவார்களோ அவர்களை சேர்த்துக் கொள்ள நினைக்கிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் 200 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது திமுக.

வரும் சட்டமன்ற தேர்தலில் கடந்த முறையைவிட அதிக தொகுதிகளை கேட்கலாம் என காய் நகர்தி வருகின்றன திமுக கூட்டணி கட்சிகள். சில கூட்டணி கட்சிகளோ ஆட்சியில் பங்கு என்கிற கோஷத்தையும் எழுப்பி திமுகவை திணறடித்து வருகின்றன. ஆனால், திமுகவோ கூட்டணி கட்சிகளின் எண்ணத்தில் மண்ணைத் தூவும் வகையில் அதிரடியாக கிட்டத்தட்ட 200 தொகுதிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முடிவில் இருப்பதாக கூறுகிறது அறிவாலய வட்டாரம்.
அந்த முடிவைஎப்படி திமுக எடுக்கும்? அவ்வளவு எளிதாக கூட்டணி கட்சிகளை விட்டுக் கொடுக்குமா? கடந்த முறை போட்டிட்டது போல் 176 தொகுதிகளில் தான் போட்டியிடும் எனக்கூறலாம். ஆனால், இந்த கூட்டணி கட்சிகள் உடன் இருக்குமா? என்கிற சந்தேகம் திமுக தலைமைக்கே எழுந்துள்ளது. சில கூட்டணி கட்சிகளை நம்ப முடியாது என்கிற நிலைமையை திமுக உணர்ந்துள்ளது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியினர் மீது எழுந்துள்ளது. அவர்கள் திமுக கூட்டணியில் தொடரலாமா? விஜய் பக்கம் போகலாமா? என்கிற குழப்பமான மனநிலையில் இருக்கிறார்கள். காங்கிஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், எம்பி.,க்கள் பலரும் கூட்டணி குறித்து இரு தரப்பு கருத்துக்களை வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.
கூட்டணியில் தொடர்ந்தால் நிறைய தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இதையெல்லாம் திமுக தலைமை அறவே ரசிக்கவில்லை. திமுக தலைமையை விட்டுப் பிடிப்பதாக நினைத்த காங்கிரஸுக்கு இப்போது ஒரு முக்கிய நெருக்கடியாக பிகார் சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த படுதோல்வி வந்து நிற்கிறது. கிட்டத்தட்ட காங்கிரஸ் டெல்லி தலைமையின் கையை விட்டு எல்லாமே போய் விட்டது. ஒருவேளை வெற்றி பெற்று இருந்தால், இருந்தால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தங்களுக்கு 40 சீட்களுக்கு மேல் கேட்பதோடு, ஆட்சியில் பங்கு கேட்டு டிமாண்ட் செய்யலாம். திமுகவும் பணிந்து போய்விடும் என திமுகவும் நெருடலுடன் இருந்தது.
இப்போது காங்கிரஸுக்கு தேர்தல் கேரள மாநில தேர்தலும் மிக முக்கியம். கேரளாவில் பத்து ஆண்டுகளாக சிபிஎம்தான் ஆட்சியில் இருந்து வருகிறது. மீண்டும் அங்கு காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும் என நினைக்கிறது. ஏன்றால், சிபிஎம் அங்கு சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறது.
ஆகையால் 2026 தேர்தலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியை பிடிக்க வாய்ப்புகள் குறைவு. அங்கே காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றால் காங்கிரஸுக்கு மிகப்பெரிய அவமானம். அங்கு சிபிஎம்- காங்கிரஸ் வெற்றி பெற இரண்டு சதவிகித வாக்குகள்தான் வித்தியாசம். அதில் ஆட்சியே மாறிப் போகும் சூழல். அதன்படி சிபிஎம் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்றால் விஜயின் செல்வாக்கு அங்கு கைகொடுக்கும். தவெகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கணக்குப்போடுகிறார்கள். முக்கியமாக வருங்காலத்தில் கேரள முதலமைச்சர் ஆகியே தீர வேண்டும் என கேரள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திட்டமிட்டுள்ளார். ஆகவே விஜயுடன் எப்படியாவது கூட்டணி வைத்து விட வேண்டும் என அவர் காய் நகர்த்துகிறார் கே.சி.வேணுகோபால்.
இதையே சாக்காக வைத்து தமிழகத்திலும் திமுகவுக்கு ஒரு செக் வைப்போம். 40 சீட் கேட்டுப் பார்க்கலாம். கொடுக்கவில்லை என்றால் விஜய் கட்சிக்கு தாவி விடலாம் என்கிற எண்ணமும் காங்கிரசுக்கு இருக்கிறது. இந்தியா கூட்டணி உருவாக திமுகதான் முக்கிய பங்கு வகித்தது. ராகுல் இதற்குய் எப்படி சம்பதிப்பார் எனக் கேள்வி எழலாம். அது அந்த காலம். அடுத்த வருஷம் என்ன நடக்கும் எனக் கூற முடியாது. அதுதானே அரசியல். இந்தியா கூட்டணி எல்லாம் இப்போது பெரிய விஷயம் இல்லை. அடுத்த தேர்தலில் பலன் பெறுவதுதான் முக்கியம். ஆகையால் விஜய் கட்சி பக்கம் போகலாம். 40, 45 சீட்டு வாங்கலாம். அதற்கு மேலும் 50, 60 சீட்டு வாங்கலாம். ஆட்சியில் பங்கு பெறலாம் என நினைக்கிறது காங்கிரஸ்.
ஒருவேளை 40 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு, ஏழு சீட்டுகளில் வெற்றி பெற்றால் வாக்கு சதவீதம் காங்கிரஸுக்கு அதிகமாகும். இது அடுத்து வருகிற தேர்தலில் தமக்கு உதவும் என நினைக்கிறது. திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் கூட்டணி விட்டு சென்றால், விடுதலை சிறுத்தைகளும் அடுத்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அடுத்தடுத்து சில கட்சிகளும் வெளியேறலாம். கூட்டணியை விட்டு தற்போதைய நிலவரப்படி கட்சிகள் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் குறைவு எனக் கருதப்பட்டாலும் எதையும் கணிக்க முடியாது என்பதை எல்லாம் திமுக உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இவர்கள் எல்லாம் வெளியேறினால் திமுக போட்டி போடாமல் இருக்க முடியுமா? ஒரு புது விதமான கூட்டணியை உருவாக்க நினைக்கிறது. யார் யார் தன் பக்கம் வருவார்களோ அவர்களை சேர்த்துக் கொள்ள நினைக்கிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் 200 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது திமுக. ஏனென்றால் அதிமுக, பாஜக கூட்டணி மிகவும் பலமாக இல்லை என்று திமுக நினைக்கிறது. அதிமுகவுக்கு கடந்த மக்களுக்கு தேர்தலில் 20 முதல் 22 சதவீத வாக்குகள் கிடைத்தது. பாஜகவுக்கு 18 சதவிகித வாக்குகள் கிடைத்தது. ஆனாலும், பாஜக- அதிமுக கூட்டணிக்கு அந்த பலம் கூட இப்போது இல்லை. விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்திக்க இருக்கிறார். அப்படியே இருந்தாலும் விஜய் 45 சதவீத வாக்குகள் பெற்று ஜெயிக்கப் போவதில்லை. குறைந்தபட்சம் ஓட்டுகளை பிரிக்கலாம். பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறப்போவதில்லை.
திமுக ஆட்சியில் பல நலத்திட்ட உதவிகள் மக்களை போய் சேர்ந்து இருக்கிறது. மக்கள் அனுசரணையாக இருக்கிறார்கள என்று திமுக நம்புகிறது. மறுபுறம் சட்டம், ஒழுங்கு பிரச்சினை இருக்கிறது. ஏற்கனவே அறிவித்த திட்டங்களை அமல்படுத்தவில்லை என்கிற குறை இருக்கிறது. அதிமுக ஆட்சியில் செய்த பல திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நிர்வாக சீர்கேடு இருக்கிறது. இருந்தாலும் திமுக தனக்கு வெற்றி சாதகமாக இருப்பதாக நினைக்கிறது. ஆகையால் உதயசூரியன் சின்னத்திலேயே 200 தொகுதிகளில் நிற்பது என்கிற முடிவுக்கு வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து வெற்றி பெற்றும் காண்பித்தார். அது ஏன் திமுகவால் முடியாதா என நினைக்கிறது தலைமை.
உதயசூரியன் சின்னத்தை மனதில் வைத்து மக்கள் வாக்களிப்பார்கள். விஜய் கட்சிக்கு புதிய சின்னம்தான் ஒதுக்கப்படும். மக்கள் அதை விரைவில் மனதில் கொண்டு வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படலாம். அதிமுக பிரிந்து தான் கிடைக்கிறது. ஒன்றிணைப்பதற்கு வாய்ப்பில்லை. ஆகையால் 200 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட்டு உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம் என அதற்கு இப்போதே சில திட்டங்களை திமுக தலைமை திட்டி வருவதாகக கூறப்படுகிறது.
ஓராண்டுகளுக்கு முன்பே திமுக தேர்தல் பணிகளை துவங்கி விட்டதால் களத்தில் வலுவாக இருக்கிறது. இந்த முடிவு கூட்டணி கட்சிகளுக்கு இப்போதே செக் வைப்பதாக அமைந்துள்ளது. கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கும் முடிவில் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக அறிவாலயத்து நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
