- Home
- Politics
- எடப்பாடியை CM ஆக்கவா தவெகவை ஆரம்பித்தோம்..? அதிமுக கூட்டணிக்கு நோ..! விஜய் சொன்ன 6 காரணங்கள்..!
எடப்பாடியை CM ஆக்கவா தவெகவை ஆரம்பித்தோம்..? அதிமுக கூட்டணிக்கு நோ..! விஜய் சொன்ன 6 காரணங்கள்..!
அதிமுகவோடு கூட்டணியில் சேர்ந்தால் அவர்கள் ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறார்கள். பாஜகவை விட்டு அவர்கள் வரமாட்டார்கள். அப்படி இருக்க என்டிஏ கூட்டணியில் போய் சேர்ந்தால் மக்களுக்கு முதல் தேர்தலிலேயே நம் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து விடும்.

நாமக்கல், குமாரபாளையத்தில் அதிமுகவின் பரப்பரை கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்துகொண்டு இருந்தபோது திடீரென்று தவெக கொடிகள் பறந்ததால் உற்சாகமான அவர் பார்த்தீங்களா? கொடி பறக்குதா? பிள்ளையார் சுழி போட்டாச்சு என உற்சாகமாகப்பேசினார். அதன்பிறகு தவெக அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டது என்கிற ரீதியில் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களும் உற்சாகமாகி விட்டனர்.
இவை எல்லாவற்றுக்கும் சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஜய். அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் விஜய் தலைமையில் கூட்டணி, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் எங்களுடைய தலைவர் விஜய் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரி, விஜய் தரப்பு ஏன் இந்த முடிவுக்கு வந்தது? ‘‘நாம் ஒரு மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்றுதான் கட்சி தொடங்கி இருக்கிறோம். நமக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கவா நாம் தவெகவை தொடங்கினோம்?
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற முழக்கத்தை முன் வைத்தோம். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு வரக்கூடிய கட்சிகளுக்குத் தான் அது பொருந்தும். ஆனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பாரா? இல்லை நாம் தான் அவரை முதல்வர் ஆக்கி அழகு பார்க்க முடியுமா? தேர்தலுக்கு இன்னும் சில காலங்களே இருக்கிறது. முக்கியமாக பீகார் தேர்தல் முடிவுகள் வரட்டும். நமக்காக நிறைய கட்சிகளும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் காத்திருப்போம். அவசரம் வேண்டாம் என முடிவு எடுத்திருக்கிறது தவெக.
நாம் அரசியல் எதிரி திமுக எனச் சொல்லி இருக்கிறோம். கொள்கை எதிரி பாஜக எனக் கூறி வருகிறோம். இப்போது அதிமுகவோடு கூட்டணியின் சேர்ந்தோம் என்றால் அவர்கள் ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறார்கள். பாஜகவை விட்டு அவர்கள் வரமாட்டார்கள். அப்படி இருக்க என்டிஏ கூட்டணியில் போய் நாம் சேர்ந்தால் மக்களுக்கு முதல் தேர்தலிலேயே நம் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை குறைந்து விடும். அது மக்களை ஏமாற்றியது போல் ஆகிவிடும். அதற்கு நாமே வாய்ப்புக் கொடுக்கக்கூடாது என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வோம். திமுகவுக்கு போட்டி தவெக என்கிற களத்தைத்தான் நாம் கட்டமைக்க நம்ம விரும்புகிறோம். அது சம்பந்தமான பேச்சு மீண்டும் வர ஆரம்பித்து இருக்கிறது. அதை நாமே கெடுத்துகொள்ள வேண்டாம்.
முயற்சி செய்வோம். நமக்கு வலிமையான கட்சியோடு கூட்டணி என்பதைவிட, அதிமுகவுக்கு வேண்டுமானால் வலிமையான கட்சிகள் கூட்டணி சேர வேண்டும் என்கிற தேவை இருக்கலாம். நமக்கு அப்படி இல்லை. ஆகையால் பொறுமையாகப் பயணிப்போம் என விஜய் கூறிவிட்டார். இவை எல்லாவற்றையும் வைத்தும்தான் இப்படியான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் பல்ஸ் பார்க்க வேண்டும். அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்காவிட்டாலும் தவெக தலைமையில் தனி பெரும்பான்மையாக மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளில் தவெக வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
அப்போதுதான் கட்சியின் எதிர்கால அரசியலுக்கும், அது பெரிதாக உதவிகரமாக இருக்கும். ஆனால் பெரிய கட்சிகளுடன் கூட்டணிக்கு சென்றால் மிகக் குறைந்த தொகுதிகளோடு அடங்கிப்போனால் அது தவெகவின் எதிர்கால வளர்ச்சிக்கு ஆபத்தாக மாறிடலாம்’’ எனக் கணக்கிட்டுத்தான் நாம் சற்று காத்திருக்கலாம்’’ என விஜய் கூறியுள்ளதாக தவெகவில் உள்ள சில முக்கியமான நிர்வாகிகள் கூறுகின்றனர்.