- Home
- Politics
- தவெக கொடிக் கம்பம் விழுந்ததால் அடித்த பம்பர் பரிசு..! காயலான் கடைக்குக்கூட தேறாத கார்..!
தவெக கொடிக் கம்பம் விழுந்ததால் அடித்த பம்பர் பரிசு..! காயலான் கடைக்குக்கூட தேறாத கார்..!
விபத்தில் சிக்கிய அந்த காரின் இன்சூரன்ஸ் 2026 வரை உள்ளது. 15 வருடம் 4 மாதங்கள் பழைய கார் அது. 15 ஆண்டுகள் ஆனால் வண்டியை புதுப்பித்து ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று எஃப்சி எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இன்ஷுரன்ஸே இருந்தாலும் எந்த கிளைமும் செய்ய முடியாது.

சாய்ந்த 100 அடி கொடிக்கம்பம்
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு நாளை மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாளை பிற்பகல் 3.15மணிக்கு தொடங்கி இரவு 7.25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாட்டில் பங்கேற்க, விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா மதுரைக்கு வந்துந்துள்ளனர்.
“வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டு வாயில் பகுதியில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தை ராட்சத கிரேன் மூலம் நிறுத்தும் பணி இன்று நடைபெற்றது. கொடிக்கம்பம் நடப்பட்டு சில நிமிடத்திற்குள் எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்தது. இதில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தவெக நிர்வாகியின் கார் மீது கொடிக்கம்பம் சரிந்தது. கார் முழுவதும் சேதமடைந்தது. 100 அடி கொடிக்கம்பமும் சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக அப்பகுதியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்துக்கு காரணம் இதுதான்
தரைமட்டத்திலிருந்த பில்லருக்கும், அதன் மேல் நிறுத்தப்பட்ட கம்பத்துக்கும் முதலில் இரண்டு போல்டுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து போல்டுகள் போடுவதற்குள் பேலன்ஸ் தாங்காமல் கம்பம் சாய்ந்துள்ளது. சிறிய ரக கிரேன் பயன்படுத்தப்பட்டதும் விபத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கம்பம் நிறுவ பயன்படுத்தப்பட்ட கயிறும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து விபத்தில் சல்லி சல்லியான கார் உரிமையாளர் தினேஷ்குமார் கூறுகையில், ‘‘விபத்து நிகழும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை காரில் தான் இருந்தேன். தண்ணீர் குடிக்க சென்ற நேரத்தில் காரின் மீது கொடி கம்பம் விழுந்துள்ளது’’ எனக்கூறினார்.
கார் உரிமையாளருக்கு அடித்த பம்பர் பரிசு
விபத்தில் சிக்கிய TN 64 D 0005 என்கிற பதிவு எண் கொண்ட அந்த காரின் இன்சூரன்ஸ் 2026 வரை உள்ளது. 15 வருடம் 4 மாதங்கள் பழைய கார் அது. 15 ஆண்டுகள் ஆனால் வண்டியை புதுப்பித்து ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று எஃப்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்ஷுரன்ஸே இருந்தாலும் எந்த கிளைமும் செய்ய முடியாது. காயலான் கடையில் எடைக்கு மட்டுமே போடப்படும் நிலையில் இருந்துள்ளது. சல்லி பைசாவுக்குக் கூட தேறாத அந்தக் கார் விபத்தில் சிக்கியதால் அதன் உரிமையாளருக்கு பம்பர் பரிசு அடித்துள்ளது. அப்பளம் போல நொறுங்கிய இன்னோவா காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளது.