ஒரே போன் கால்.. முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்குள் அலறியடித்துக்கொண்டு திபு திபுவென நுழைந்த போலீஸ்! நடந்தது என்ன?
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் பேசிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு போன் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.