- Home
- Politics
- ஒருவழியா வாய திறந்துட்டாரா விஜய்! யாரு எழுப்பி விட்டாங்கனு தெரியலயே - தவெக தலைவரை பங்கமாக கலாய்த்த தமிழிசை
ஒருவழியா வாய திறந்துட்டாரா விஜய்! யாரு எழுப்பி விட்டாங்கனு தெரியலயே - தவெக தலைவரை பங்கமாக கலாய்த்த தமிழிசை
திருச்செந்தூர் கோவில் சிரமங்கள் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசினார். விஜய் அரசியல் செய்முறை குறித்து கேள்வி எழுப்பினார், ராகுல் காந்திக்கு விஜய் ஆதரவு குறித்தும் கருத்து தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், அரசுக்கு எதிராக தினந்தோறும் போரட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பினார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று வந்தேன். மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அறநிலையத்துறை மக்களுக்கு அதிக ஏற்பாடுகளை செய்ய வேண்டும், பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, ஆனால் 7 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. மக்கள் அதிகம் கூடும் கோவில்களில் அறநிலைத்துறை உதவ வேண்டும் என தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் பதில் சொல்லி உள்ளது. மக்கள் யாரும் குற்றம் தெரிவிக்கவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளை ஜெயிக்க விடவில்லை என்றால் பிரியங்கா காந்தி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வயநாட்டில் எப்படி வெற்றி பெற்றார் என கேள்வி எழுப்பினார்.
உங்களுடன் ஸ்டாலின் என சொல்லும் முதல்வர் இன்று 11 நாட்களாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் இல்லாமல் தேவையில்லாத பிரச்சனையை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள், மருத்துவ செவிலியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் யாருடனும் இல்லாமல் உங்களுடன் ஸ்டாலின் என்றால் யாருடன் என கேள்வி எழுப்பினார். ஒரு துப்புரவு பணியாளி ஆயிரம் பேருக்கு சமம் அவர்கள் செய்யும் வேலையை யாராலும் செய்ய முடியாது என கூறினார்.
தூய்மை பணியாளர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய் நேரில் வந்தால் கூட்டம் வந்து விடும் என்றால் எதற்காக அரசியல் கட்சி, இது என்ன pattern என புரியவில்லை. சினிமாவை வீட்டில் பார்த்தால் கோபம் வருகிறது, ஆனால் இவர்களை வீட்டில் போய் பார்க்க வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜனிடம், வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக ஜனநாயகத்தை காப்போம் என ராகுல் காந்திக்கு ஆதரவாக தவெக தலைவர் விஜய் குரல் கொடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பரவாயில்லையே, வாயைத் திறந்து விட்டாரா.! வாயை திறந்து விட்டாரா தம்பி, எவ்வளவு நாட்களாக ஓடிக் கொண்டுள்ளது. பாவம் அவர் தூங்கி தூங்கிக் கொண்டிருந்தாரா என தெரியவில்லை. திடீரென யார் எழுப்பியது அவரை என தெரியவில்லை. திடீரென ராகுல் காந்தி விஷயத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக பல பிரச்சினைகள் நடைபெற்றுள்ளது.
கொஞ்சம் கொஞ்சம் தூக்கத்தில் இருந்து எழுந்து ஏதாவது சொல்லட்டும், பெரிதாக, வலிமையாக சொல்லட்டும் அதன் பிறகு பார்க்கலாம். அன்றாடம் பிரச்சினை எவ்வளவு ஓடிக் கொண்டுள்ளது அதனையும் விஜய் பார்த்தால் பரவாயில்லை. அரசியல் கட்சித் தலைவராக இருந்து அவர் கொஞ்சம் பார்க்க வேண்டும். சினிமாவில் எப்போது வேண்டுமானாலும் நடிக்கலாம்,
மக்கள் பிரச்சனையே தினம் தினம் பேச வேண்டும். ஆணவக் கொலை நடந்தது வாய் திறந்தாரா.? திருமாவளவன் உள்ளிட்ட அனைவரும் ஆணவக்கொலைக்கு கடந்த ஆட்சியில் ஆட்சியாளர்கள் காரணம் என கூறினார். தற்போது மாற்றி பேசி வருகிறார். திமுக கூட்டணி கட்சிகள் சீட்டுக்காக திமுகவிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என தமிழிசை விமர்சித்தார்.