2024க்கு கட்டையை போட்ட இபிஎஸ்.. அண்ணாமலை நடைப்பயணத்தில் முதல் நாளே இப்படியா.? அப்செட்டில் பாஜக
தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும், பாஜகவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்' என்ற பெயரில் 234 தொகுதிகளிலும் நேற்று முதல் நடைபயணம் மேற்கொள்கிறார். இதனை ராமேசுவரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கவும், ஊழலில் இருந்து தமிழகத்தை விடுவிக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும்தான் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான நலத் திட்டங்களை இந்த பயணம் மீண்டும் கொண்டுவரும். திமுகவும், காங்கிரஸ் கட்சியும் மக்களிடம் வாக்கு கேட்கப் போகும்போது 2ஜி, காமன்வெல்த், ஹெலிகாப்டர், இஸ்ரோவில் செய்த ஊழல்கள்தான் நினைவுக்கு வரும்.
இலங்கையில் தமிழர்களை அழிக்க காரணமாக இருந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி. உதயநிதியை முதல்வராக்க ஸ்டாலின் விரும்புகிறார். இக்கூட்டணி தலைவர்கள் தங்கள் மகன், மகள், மருமகனைத்தான் வளப்படுத்த நினைக்கின்றனர். உலகிலேயே ஊழல் மிகுந்த அரசாக இது உள்ளது. ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சரிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கினால், அவர்எல்லா ரகசியத்தையும் வெளியே சொல்லிவிடுவார்” என அதிரடியாக பேசினார்.
அண்ணாமலை நடத்தும் பேரணியின் தொடக்க விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தார். அண்ணாமலையின் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்து இருந்தார். அதேபோல தேமுதிகவும் புறக்கணித்துள்ளது.
ஆனால் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒருபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி கட்சியில் குழப்பம், மற்றொரு பக்கம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி என அரசியல் வட்டாரங்களே குழப்பமான மனநிலையில் இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த நடைபயணம் வெற்றி பெறுமா? அல்லது கூட்டணிக்குள் கலவரத்தை உண்டு பண்ணுமா? என்பதை போக போகத்தான் பார்க்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. சிலிண்டர் விலை முதல் வங்கி விடுமுறை வரை - முழு விபரம் இதோ !!