- Home
- Politics
- தீராத அக்கப்போர்..! இந்த 16 தொகுதிகள்தான் முக்கியம்.. இது அமித் ஷாவோட ஆர்டர்..! அதிமுகவை ரணகளமாக்கும் லிஸ்ட்..!
தீராத அக்கப்போர்..! இந்த 16 தொகுதிகள்தான் முக்கியம்.. இது அமித் ஷாவோட ஆர்டர்..! அதிமுகவை ரணகளமாக்கும் லிஸ்ட்..!
தொகுதி லிஸ்ட்டை கொடுத்து பாஜகவின் தொகுதிகளை உறுதி செய்து முன்கூட்டியே தேர்தல் வேலைகளை தொடங்கச் சொல்லி இருக்கிறார் அமித் ஷா என அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள்

அதிமுக- பாஜக என இரு கட்சிகளும் பல சர்ச்சைகளோடுதான் கூட்டணியையே அமைத்தன. அமித் ஷா கூட்டணியை அறிவித்த விதமும்கூட பல்வேறு விவாதங்களை கிளப்பியது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர், கூட்டணி ஆட்சி என்பதில் அதிமுக- பாஜக இடையே பல்வேறு முரண்பாடுகள்.
சில மாதங்களுக்கு முன்பு கூட்டணி ஆட்சியா? என்று கேட்டதற்கு, ‘‘அமித்ஷா சொல்லாததை நான் சொல்ல முடியாது’’ என்ற அண்ணாமலை இப்போது திடீரென உல்டாவாக மாறி எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக்கும் வரை நாம் ஓயக்கூடாது என்கிறார். அதைச் சொல்ல வேண்டிய அமித்ஷா மௌனமாக இருக்கிறார். கடுமையாக விமர்சித்த அண்ணாமலை இப்படி சொல்கிறார் என்றால் ஏதோ நம்ப வைத்து கழுத்தை அறுக்கப் போகிறார்களோ? என அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
‘இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே ஜி, என் பெயரை ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? என்று அமித் ஷாவிடம் நேரடியாகவோ, தனது தூதர் மூலமாகவோ எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருக்க வேண்டும். இனிமேலாவது கேட்க வேண்டிய நேரம் அவருக்கு வந்துவிட்டது’’ எனக் கொதிக்கிறார்கள் அதிமுக விசுவாசிகள்.
இந்நிலையில் அதிமுகவிடம் முதல் கட்ட தொகுதி பட்டியலை பாஜக கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அமித்ஷாவே தேர்வு செய்த 16 தொகுதிகளை பார்த்து அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகிறார்கள். திருநெல்வேலியில் நடந்த பாஜக பூத் கமிட்டி மாநாட்டுக்கு வந்த அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் 2026 தேர்தலை பற்றி விரிவாக விவாதித்ததாகவும், அப்போது அதிமுகவிடம் பாஜக போட்டியிடும் தொகுதி பற்றி முக்கியமான ஆலோசனை நடந்தாகவும் தகவல். இதில், தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான கோவில் நகரங்களை உள்ளடக்கிய தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து கேட்டு பெற வேண்டும் என அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
அமித்ஷா ஆலோசனைப்படி பிரபலமான கோயில்கள் அடங்கிய 16 தொகுதிகளுடன் பட்டியலை அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடவே இந்த தொகுதியில் எல்லாம் அமித் ஷாவின் விருப்பம் என்று பாஜக நிர்வாகிகள் குறிப்பாக சொல்லி இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தனி, ஸ்ரீவில்லிபுத்தூர், கும்பகோணம், ஸ்ரீரங்கம் என்று நீள்வதாகவும், பெரும்பாலும் இவையெல்லாம் அதிமுகவுக்கு செல்வாக்கு இருக்கக்கூடிய தொகுதிகள் என்பதால் அமித் ஷாவுக்கு என்ன பதில் சொல்வது என்று புலம்பிப்போய் இருக்கிறது அதிமுக தலைமை என்கிறார்கள்.
இதே போல அடுத்தடுத்து தொகுதி லிஸ்ட்டை கொடுத்து பாஜகவின் தொகுதிகளை உறுதி செய்து முன்கூட்டியே தேர்தல் வேலைகளை தொடங்கச் சொல்லி இருக்கிறார் அமித் ஷா என அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் தமிழக பாஜக நிர்வாகிகள் என விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.