ஒன்றிணைந்த அதிமுக... ஒரே பேனரில் ஓபிஎஸ், இபிஎஸ். டிடிவி, சசிகலா- பரபரப்பை கிளப்பிய தேனி
AIADMK unity : அதிமுக பல பிரிவுகளாக சிதறியுள்ளது. இந்த நிலையில், தேனி பெரியகுளத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இணைய வேண்டும் என வலியுறுத்தி வைக்கப்பட்ட பேனரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் அதிகார மோதல்
ஜெயலலிதா இருந்தவரை இந்தியாவில் மிகப்பெரிய 3வது கட்சியாக அதிமுக திகழ்ந்தது. நாடே அதிமுகவை திரும்பி பார்த்தது. தமிழகத்தில் அதிக வாக்குகளை கொண்ட கட்சியாகவும் உயர்ந்து இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக பல பிளவுகளாக பிரிந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என பிரிந்த கிடக்கும் அதிமுகவில் தற்போது மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
தனி தனி அணியாக அதிமுக
இதன் காரணமாக கடந்த 10 தேர்தல்களில் அதிமுகவிற்கு தோல்வி மேல் தோல்வி கிடைத்து வருகிறது. எனவே பிரிந்து சென்ற தலைவர்கள் இணைய வேண்டும் என தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. இதற்கு ஏற்றார் போல ஓ.பன்னீர் செல்வமும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் என கூறி வருகிறார். ஆனால் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் மற்றும் டிடிவியை இணைக்க வாய்ப்பே இல்லையென கூறி வருகிறார்.
தேனியில் விளம்பர பலகை
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இன்று ஓபிஎஸ் இபிஎஸ் கைகோர்த்து நின்றபடி வைக்கப்பட்ட விளம்பரபதாகையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளம் மூன்றாந்தல் காந்தி சிலை அருகில் அதிமுக இணைப்பு வேண்டி ஒன்றிணைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விளம்பர பதாகை வைத்துள்ளதால் பெரியகுளம் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பு- பேனர்
மேலும் அந்த பதாகையில் ஒருபுறம் அறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றும் நடுவில் கைகுலுக்கியபடி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருப்பது போல படம் வைக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஆகியோர்களது படங்களும் இடம்பெற்றுள்ளது. அந்த பதாகையில் தமிழகத்தை காப்போம்! கழகத்தை ஒன்றிணைப்போம்! பிரிந்துள்ள தொண்டர்களை தலைவர்களே ஒன்று சேருங்கள்! 2026 ல் வென்றிடுவோம்.. எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.