Dress Selection : ஆரோக்கியமாக வாழணுமா? இந்த 6 ஆடைகளை மட்டும் வாங்காதீங்க.!
ஆரோக்கியமாக வாழ நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சி ஆகியவை எந்த அளவு முக்கியமோ அதேபோல ஆடைகளும் மிக முக்கியமானது. சில வகையான ஆடைகள் அலர்ஜி, சரும பிரச்சனைகள், தொற்றுகள் மற்றும் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தலாம். அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாலிஸ்டர் (Polyester)
அதில் அவர் முதலாவதாக குறிப்பிட்டு இருப்பது பாலிஸ்டர். இது பரவலாக கிடைக்கும் ஒரு மலிவான துணிவகை. விலை குறைவாக இருப்பதால் பலரும் இந்த வகை துணியை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் இது பிளாஸ்டிக் மெட்டீரியல் ஆகும். இது வெப்பத்தை வெளியேற விடாமல் உடலுக்கு உள்ளேயே தேக்கி வைக்கிறது. இதனால் வியர்வை ஆவியாகாமல் உடலுக்குள்ளேயே தேங்க ஆரம்பிக்கும். இதனால் ஈரப்பதமும் வெப்பமும் சேர்ந்து பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் வேகமாக வளர்ந்து, பெருகி துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது பலருக்கும் ஒவ்வாமை, அரிப்பு, சரும அலர்ஜி ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.
நைலான் (Nylon)
நைலான் துணிகள் பாலிஸ்டர் துணிகளின் சகோதரன் என்று அழைக்கப்படுகிறது. பாலிஸ்டர் போலவே நைலான் உடைகளும் காற்று புகாத தன்மை கொண்டவை. சிறு துளைகள் கூட கிடையாது என்பதால் காற்றோட்டம் சிறிதும் நடைபெறாது. வியர்வை அதிகமாக வெளியேறுபவர்கள் இந்த மெட்டீரியலால் ஆன உடைகளை பயன்படுத்தக் கூடாது. சென்சிட்டிவ் ஸ்கின் கொண்ட நபர்களுக்கு நைலான் துணிகள் அலர்ஜியையும் ஏற்படுத்தும். இந்த வகை துணிகளில் சில சமயம் ஸ்டேட்டிக் எலக்ட்ரிசிட்டி (Static Current) உருவாகி ஷாக் அடிப்பது போன்ற லேசான அதிர்வை உணர வைக்கும்.
அக்ரிலிக் (Acrylic)
பஞ்சு போலவே இருக்கும் அக்ரிலிக் ஒரு செயற்கை இழை ஆகும். இது உடல் நிலையின் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவாது. மேலும் அக்ரிலிக் துணிகள் விரைவாக பழையதாகிவிடும். அதனுடைய தன்மை விரைவில் கேட்டு சீக்கிரமே துணி வீணாகிவிடும். சலவை செய்யும் பொழுது மைக்ரோ பிளாஸ்டிக் வெளியிடும் தன்மையும் கொண்டது. இது நமக்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகுந்த கேடை தரும்.
வினைல்/பிவிசி கிளாத்திங் (Vinyl/PVC Clothing)
இந்த வகை துணிகள் சருமத்தை அதிக அளவில் பாதிக்கும் தன்மை கொண்டவை. உடைக்குப் பதிலாக பிளாஸ்டிக் கவரை போர்த்திக் கொண்ட உணர்வைத் தரும். அதிக வெப்பத்தை உருவாக்குவதோடு சருமத்தில் அதிக அலர்ஜிகளை ஏற்படுத்தும். சருமத்தை அதிக சேதப்படுத்தி விடும். இவற்றை நீண்ட நேரம் அணியக்கூடாது. குறுகிய நேரம் பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்றது. நாள் முழுவதும் பயன்படுத்த இது ஏதுவானது அல்ல. பயன்படுத்தவும் கூடாது.
ரேயான் (Rayon)
குறைந்த தர ரேயான் துணிகளில் அதிக அளவு ரசாயன கலவை கலக்கப்பட்டு இருக்கும். இதன் காரணமாகவே அது சீக்கிரம் சுருங்கும். துவைத்த உடனேயே சுருங்கிப் போகும். ஒருமுறை பயன்படுத்திய உடனேயே தன்மையை எளிதில் இழந்துவிடும். இந்த வகை துணிகளை ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அணிய முடியும். மலிவான விலையில் கிடைக்கும் துணிகள் ரேயான் வகையைச் சேர்ந்தது. இவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன் தரத்திலும் மிகக் குறைவானது.
ஸ்பான்டெக்ஸ்/லைக்ரா
இந்த வகை துணிகள் இறுக்கமாக இருப்பதால் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இது சுவாசிக்க முடியாத (Non Breathable) மெட்டீரியல் என்பதால் உடலுக்கும் ஏற்றதல்ல.
உடலுக்கு ஏற்ற துணிகள் என்ன?
பட்டு: உடலுக்கு ஏற்ற வகையில் சில ஆடைகள் இருக்கின்றன. அதில் முதலிடம் பிடிப்பது பட்டு. இவை விலையுயர்ந்த போதிலும் மென்மையாகவும், சருமத்திற்கு இதமாகவும் இருக்கிறது. இது உடல் நிலையின் இயற்கையாகவே வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது. தூங்குவதற்கு பயன்படுத்தப்படும் பைஜாமாக்களுக்கு பாலிஸ்டர் போன்ற மெட்டீரியல்களை பயன்படுத்தாமல் பட்டுத்துணியை பயன்படுத்தலாம். அது மிகவும் ஏற்றதாகும்.
மெரினோ உள்: இது மிகவுப் மென்மையானது. இது அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்றது. குறிப்பாக கெட்ட வாடைகளை ஏற்படுத்தாத ஒரு மெட்டீரியலாகும். ஈரப்பதத்தை குறைக்கும் தன்மை இருப்பதால் வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
மூங்கில்: மூங்கில் செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மெட்டீரியல் இவை. இது சுற்றுச்சூழலுக்கும், சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் இருப்பதால் பாக்டீரியா மற்றும் கிருமிகளை எதிர்த்து போராடும். கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பத்தையும் கொடுக்கும். இது இயற்கையாகவே புற தன்மைகளிலிருந்து (UV Rays) பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதனால் சூரிய வெப்பத்திலிருந்து நம்மை பாதுகாக்கவும் செய்கிறது.
லினன்: இந்த துணிகள் வெப்பமான கால சூழலுக்கு ஏற்றது. இது கிருமித் தொற்றை தடுக்கும் தன்மை கொண்டது. பயன்படுத்த பயன்படுத்த தரம் இன்னும் மேம்படும். விலை அதிகம் என்றாலும் பலராலும் கோடைக் காலத்தில் விரும்பி வாங்கப்படும் ஒரு துணி வகை. குறிப்பாக வெயில் காலங்களில் வெள்ளை லினன் ஆடைகள் அணிவதை பலரும் விரும்புகின்றனர்.
காட்டன்: காட்டன் ஆடைகள் நம் உற்ற தோழன். இயற்கையாகவே சுவாசிக்கும் தன்மை கொண்டவை. சலவை செய்ய செய்ய மேலும் மென்மையாக மாறும். ஆனால் துவைத்த உடன் சுரங்கும் தன்மை இருக்கும். சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கும் அலர்ஜி சருமம் உள்ளவர்களுக்கும் காட்டன் துணிகளே சிறந்தது. கடைகளில் 100% காட்டன் துணிகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். கலப்பட காட்டன் அல்லது பிளாஸ்டிக் கலந்திருக்கும் காட்டன் ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடுத்த முறை ஆடை செல்ல வாங்கும் பொழுது மெட்டீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாங்குங்கள்.