- Home
- Lifestyle
- அபார்ட்மெண்ட் வாசிகள் கவனத்திற்கு... பால்கனியில் தொல்லை பண்ணும் புறாக்களை விரட்டியடிக்க சூப்பர் டெக்னிக்!
அபார்ட்மெண்ட் வாசிகள் கவனத்திற்கு... பால்கனியில் தொல்லை பண்ணும் புறாக்களை விரட்டியடிக்க சூப்பர் டெக்னிக்!
பால்கனியில் புறா தொல்லை தாங்க முடியலையா? பழைய சிடி, புதினா ஆயில் போதும். கெமிக்கல் இல்லாமல் இயற்கை முறையில் விரட்ட 5 எளிய வழிகள்! உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்க இதோ டிப்ஸ்.

பால்கனியில் புறாக்கள் தொல்லையா?
நகர்ப்புறங்களில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் புறாக்களின் நடமாட்டம் தற்போது பெரும் சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கட்டிடங்களில் அழைக்கப்படாத விருந்தாளிகளாக தஞ்சமடையும் இந்த பறவைகளின் எச்சங்கள், உதிரும் இறகுகள் சுகாதாரமற்ற சூழலை உருவாக்குவதுடன் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், அவற்றின் தொடர்ச்சியான சத்தமும் கடுமையான எரிச்சலை உண்டாக்குகிறது.
புறாக்களை விரட்டுவதற்காகப் பலர் ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர்; இது அவற்றின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. ஆனால், அவற்றுக்கு எவ்விதத் தீங்கும் செய்யாமல், முற்றிலும் இயற்கை வழிகளிலேயே பால்கனி மற்றும் ஜன்னல் பகுதிகளில் இருந்து புறாக்களை அப்புறப்படுத்த முடியும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
1. பால்கனியைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரித்தல்
தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்கள் மற்றும் அமர்வதற்கு வசதியான பால்கனிகளையே புறாக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றன. எனவே, பால்கனித் தரையைத் தவறாமல் பெருக்கிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர்க் கசிவுகளை உடனடியாகச் சரிசெய்து, மூலைகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும், பால்கனி மூலைகளில் வெள்ளை வினிகர் நிரப்பிய சிறிய கொள்கலன்களை வைப்பதன் மூலம் புறாக்கள் வருவதைத் தடுக்கலாம்.
2. ஒளிப் பிரதிபலிக்கும் அசைவுப் பொருட்களைத் தொங்கவிடுதல்
தொடர்ச்சியான ஒளிப் பிரதிபலிப்புகளும், திடீர் அசைவுகளும் புறாக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே, பழைய சிடிக்கள் (CDs), அலுமினியத் தகடுகள், பளபளக்கும் ரிப்பன்கள் அல்லது காற்று மணிகளைப் (Wind Chimes) பால்கனியில் தொங்கவிடலாம். இவற்றின் அசைவும், ஒளியின் பிரதிபலிப்பும் புறாக்களை அந்தப் பக்கமே நெருங்கவிடாமல் தடுக்கும்.
3. கடுமையான வாசனைப் பொருட்களைத் தெளித்தல்
புதினா எண்ணெய், கிராம்பு எண்ணெய், மிளகாய்த்தூள், வினிகர் அல்லது பூண்டுத் தண்ணீர் போன்றவற்றின் தீவிர வாசனை புறாக்களுக்குப் பிடிக்காது. இந்தப் பொருட்களைத் தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து, பால்கனி மற்றும் புறாக்கள் அமரும் பகுதிகளில் தினமும் தெளித்து வரலாம்.
4. பாதுகாப்பு வலைகள் அமைத்தல்
கட்டிடங்களின் விளிம்புகள், ஏசி துவாரங்கள் மற்றும் நிழலான பால்கனி மூலைகளையே புறாக்கள் கூடு கட்டுவதற்குப் பயன்படுத்துகின்றன. குறிப்பாக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில், இந்த இடைவெளிகளில் மெல்லிய நைலான் அல்லது கம்பி வலைகளைப் பொருத்துவது சிறந்த தீர்வாகும். இது பறவைகளுக்கு எந்தவிதக் காயமும் ஏற்படுத்தாமல் அவை உள்ளே நுழைவதைத் தடுக்கும்.
5. நறுமணச் செடிகளை வளர்த்தல்
வீட்டு பால்கனி தொட்டிகள் அல்லது கைப்பிடிச் சுவர்களில் கற்றாழை, துளசி, எலுமிச்சைப்புல் (Lemongrass) மற்றும் லாவெண்டர் போன்ற தாவரங்களை வளர்க்கலாம். இவை வீட்டிற்கு அழகையும் நறுமணத்தையும் தருவதோடு, இதன் வாசனை பிடிக்காமல் புறாக்கள் பால்கனியை விட்டு விலகிச் சென்றுவிடும். இத்தகைய எளிய, பாதுகாப்பான இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வீட்டின் சுகாதாரத்தைப் பேணுவதோடு, பறவைகளின் உயிருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

