சொல்லப்படாத தியாகம்!!அப்பாவுக்காக 'தந்தையர் தினம்' கொண்டு வந்த மகள்!! உண்மைக் கதை!!
தந்தைகளின் தியாகத்தை பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தந்தையர் தினம் கொண்டாடுகிறோம்.

தந்தையர் தினம்
தந்தைகள் இல்லாத உலகத்தை கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு குழந்தைக்கு தாய் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தந்தையும். வளரும் குழந்தைகளின் முன்மாதிரியாக, முதல் நண்பனாக, வழிகாட்டியாக பல விஷயங்கள் தந்தையால் குழந்தைகளுக்கு கிடைக்கப் பெறுகின்றன. பாசம் என்றால் தாயை நினைவு கூறுவதுபோல, தியாகம் என்றால் தந்தை முகம் நினைவுக்கு வரும். அவர்களின் தியாகத்தையும், அர்பணிப்பையும், சொல்லப்படாத பல வலிகளையும் நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தந்தையர் தினமும் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 3ஆவது ஞாயிற்றுக்கிழமை
ஒவ்வொரு ஜூன் மாதமும் 3ஆவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டில் தந்தையர் தினம் ஜூன் 15ஆம் தேதி வருகிறது.
தந்தையர் தினம் வந்தது எப்படி?
தந்தையர் தினத்தை கொண்டாடும் கலாச்சாரம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தது. இந்த தினம் கொண்டாட வாஷிங்டனை சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டாட் தான் காரணம். இவர் தன் தந்தையை கௌரவிக்கும் விதமாக 1910 ஆம் ஆண்டில் தந்தையர் தினத்தை நிறுவினார். தன்னுடைய தந்தையின் தியாகம் உலகம் அறிந்து கொள்ள வேண்டியது என நினைத்த இவர், உலகில் உள்ள எல்லா தந்தைகளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று கருதியன் விளைவுதான் தந்தையர் தினமாகும். சோனாராவின் தந்தை வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட், ஒரு உள்நாட்டுப் போர் வீரர். இவர் தன் மனைவி இறந்த பின் தன்னுடைய ஆறு குழந்தைகளையும் தனியாளாக வளர்தெடுத்துள்ளார். குழந்தைகளுக்கு தாயில்லா சோகம் துளியும் தாக்காமல் அன்பு மழையை பொழிந்துள்ளார். அவரின் அன்பும் அக்கறையுமே அவரது மகளை சிந்திக்க வைத்துள்ளாது. தன் தந்தையை கௌரவிக்க தந்தையர் தினம் கொண்டாட முன்னெடுப்பை செய்தார், சோனாரா.
ஏன் ஜூன் மாதம்?
சோனோரா ஸ்மார்ட் டாட் தந்தையர் தினத்தை கொண்டு வரும்போது அதனை தன்னுடைய தந்தையின் பிறந்தநாளான ஜூன் 5இல் கொண்டாடக் கோரினார். இதுவே ஜூன் மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதனால் தேவாலயங்கள் இதற்காக பிரசங்கங்களைத் தயாரிக்க அதிக நேரம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
சிறப்பு நாள்
தாயின் நேசத்தை கௌரவிக்க அன்னையர் தினம் கொண்டாடப்படுவது போல தந்தையர் தினமும் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை 1914 இல் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தனர். இது தந்தையர்களுக்கான சிறப்புநாள். முதல் முதலாக தந்தையர் தினம் ஜூன் 19ஆம் தேதி 1910இல் ஸ்போகேனில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்வது அமெரிக்காவில் இருந்து வந்த மரபாகும்.
அதிகாரப்பூர்வ அங்கீகாரம் எப்போது?
அமெரிக்காவே ஜூன் மாதம் தந்தையர் தினத்தை கொண்டாடும் மரபை பின்பற்றியது. இதையொட்டி பல நாடுகள் ஒரே தேதியில் கொண்டாடுவதை ஏற்றுக்கொண்டன. சில நாடுகள் தங்கள் சொந்த மரபுகளை பின்பற்றி வெவ்வேறு நாட்களில் கொண்டாடுகின்றன.
அமெரிக்காவில் 1966ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த லிண்டன் பி. ஜான்சன் தந்தையர்களை கௌரவிக்கும் விதமாக முதல் ஜனாதிபதி பிரகடனத்தை வெளியிட்டார். தந்தையர் தினத்தை ஜூன் மாத 3ஆவது ஞாயிற்றுக்கிழமையாக நிர்ணயித்தார். இதை பின்தொடர்ந்து 1972இல் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் அதிகாரப்பூர்வமாக பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இதன் காரணமாக அமெரிக்காவில் தந்தையர் தினம் நிரந்தர தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.