Chapati Dough: சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜ்ல வைக்கலாமா? எத்தனை நாள் கெடாமல் இருக்கும்?
Chapati Dough: தினமும் சப்பாத்தி செய்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் மாவு பிசைவது கடினமாக இருக்கும். அதனால் பலர் ஒட்டுமொத்தமாக மாவு பிசைந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவார்கள். ஆனால் இவ்வாறு செய்வது நல்லதா? என்பதை பற்றி பார்ப்போம்.

சப்பாத்தி மாவை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
வீட்டில் தினமும் சப்பாத்தி செய்பவர்கள், நேரத்தைச் சேமிக்க மொத்தமாக மாவு பிசைந்து ஃப்ரிட்ஜில் வைத்துவிடுவார்கள். இவ்வாறு செய்வதால் தினமும் மாவு பிசையும் வேலை மிச்சமாகும். ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்த மாவைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? ஒருவேளை வைத்தாலும் எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்? மாவு கெட்டுப்போய்விட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? இவை அனைத்தையும் இங்கே பார்க்கலாம்.
சப்பாத்தி மாவை எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும்?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அவ்வப்போது புதிதாக மாவு பிசைந்து சப்பாத்தி செய்வதே நல்லது. ஒருவேளை மாவினைச் சேமிக்க வேண்டும் என்றால், நன்றாகப் பிசைந்து, அதன் மீது எண்ணெய் தடவி, காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வைக்க வேண்டும். அந்தப் பாத்திரத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் மாவு காயாமல் இருக்கும். ஃப்ரிட்ஜின் வெப்பநிலை சுமார் 4°C அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். மாவினைப் பிசைந்தவுடன் அதிக நேரம் வெளியே வைக்காமல் உடனடியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும்.
எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்?
பிசைந்த சப்பாத்தி மாவை முடிந்தவரை 1-2 நாட்களுக்குள் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மூன்று, நான்கு நாட்கள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவார்கள். ஆனால், நாட்கள் ஆக ஆக மாவின் சுவை, வாசனை, நிறம், தரம் அனைத்துமே மாறிவிடும். அதனால் நீண்ட நாட்கள் சேமித்து வைப்பது நல்லது அல்ல. குறிப்பாக, மாவில் தயிர், பால் போன்ற வேறு பொருட்கள் சேர்த்திருந்தால் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
மாவு இப்படி மாறினால் பயன்படுத்த வேண்டாம்
ஃப்ரிட்ஜில் மாவினை எடுக்கும்பொழுது, அது நல்ல முறையில் உள்ளதா என்பதைத் தவறாமல் பரிசோதிக்க வேண்டும். மாவிலிருந்து புளிப்பு வாசனையோ அல்லது ஏதேனும் மாறுபட்ட வாசனையோ வீசினால் அதைப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல், மாவின் மீது கருப்பு, பச்சை அல்லது வெள்ளை நிறத்தில் புள்ளிகளாகப் பூஞ்சை தென்பட்டாலோ, மாவின் நிறம் மாறினாலோ அல்லது அது அதிகப் பிசுபிசுப்புத் தன்மையை அடைந்தாலோ உடனே அதை அகற்றிவிட வேண்டும். தேவைப்படும் அளவிற்கு மட்டும் மாவினை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள மாவினை உடனடியாக ஃப்ரிட்ஜில் மீண்டும் வைத்துவிட வேண்டும்.
சப்பாத்தி செய்வதற்கு முன்...
ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த மாவு சற்று குளிர்ந்தும், இறுக்கமாகவும் இருக்கும். சப்பாத்தி செய்வதற்கு சுமார் 15–20 நிமிடங்களுக்கு முன்பாகவே மாவை வெளியே எடுத்து வைத்தால், சப்பாத்தி திரட்டுவதற்கு எளிதாக இருக்கும். மாவை ஒருமுறை நன்றாகப் பிசைந்து, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் அல்லது எண்ணெய் சேர்த்து மென்மையாக்கிக் கொள்ளலாம். நீண்ட நாட்கள் மாவைச் சேமிக்க வேண்டும் என்றால், ஃப்ரிட்ஜை விட ஃபிரீஸர் ஒரு சிறந்த தேர்வாகும். ஆனால், ஃபிரீஸ் செய்வதால் மாவின் தரத்தில் சிறிதளவு மாற்றம் ஏற்படக்கூடும். எனவே, தேவைக்கு ஏற்ப மட்டும் மாவு பிசைந்து உடனுக்குடன் பயன்படுத்துவதே சிறந்தது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

