Sleeping Disorder: 9 மணி நேரத்துக்கு மேல தூங்குற ஆளா நீங்க? இதை படியுங்க முதல்ல..!
9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நீண்ட நேரம் தூங்குவது ஆபத்தானது
தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் அவசியமானது. தூக்கமின்மை பிரச்சனையால் பல நோய்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே சமயம் அதிக நேரம் தூங்குவதும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஒரு சில நாட்கள் தூங்காமல் இருந்துவிட்டு ஒரு நாள் 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது என்பது இயல்பானது. ஆனால் தினமும் 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது என்பது தொடர்ச்சியான பழக்கமாக இருந்தால், அது சில கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அது குறித்து இங்கு காணலாம்.
நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு ஏற்படும் அபாயங்கள்
நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான தூக்கம் இன்சுலின் எதிர்ப்பு நிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு பக்கவாதம், கரோனரி தமனி நோய்கள் போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தூக்கமின்மை போலவே அதிகப்படியான தூக்கமும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. தூக்கத்திற்கும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது. மனச்சோர்வு உள்ள பலர் தூக்க கலக்கம் அல்லது தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டாலும் சிலருக்கு அதிகப்படியான தூக்கமும் மனச்சோர்வை ஏற்படுத்தலாம் அல்லது மனச்சோர்வை அதிகரிக்கலாம்.
அதிகப்படியான தூக்கம் ஒரு நோயின் அறிகுறியாகும்
வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேலை செய்துவிட்டு வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குபவர்களுக்கு தூக்கத்தால் ஏற்படும் தலைவலியை அனுபவிக்கலாம். இது மூளையில் உள்ள நரம்பியல் கடத்தியலின் சமநிலையின்மைக்கு காரணமாக அமைகிறது. நீண்ட நேரம் தூங்குபவர்கள் ஒரே நிலையில் படுத்து இருக்கும் பொழுது முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலியை சந்திக்கலாம். குறிப்பாக போதுமான ஆதரவு இல்லாத படுக்கையில் தூங்கும் பொழுது இந்த பிரச்சனைகள் அதிகமாகலாம். சில ஆய்வுகளில் நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன்கள் குறைவதாக கூறப்படுகிறது. மேலும் நீண்ட நேரம் தூங்குபவர்களுக்கு அகால மரணம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதிகப்படியான தூக்கம் ஒரு அடிப்படை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
நோயின் பிரதிபலிப்பே அதிகப்படியான தூக்கம்
ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்குவது ஒரு அடிப்படை மருத்துவ நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது ஒருவர் தொடர்ந்து ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் அது ஸ்லீப் அப்னியா போன்ற தூக்கக் கோளாறுகள், தைராய்டு கோளாறுகள், இதய நோய், நீரிழிவு, மன நோய் உள்ளிட்ட பிரச்சனையின் அறிகுறிகளாக இருக்கலாம். தூக்கத்தின் அளவைவிட தரம் முக்கியம். 10 மணி நேரம் ஒருவர் தூங்கினாலும் அவர் ஆழமற்றதாகவும், தூக்கத்தில் குறிக்கீடும் இருந்தால் அது போதுமான ஓய்வை தராது. பெரும்பாலான பெரியவர்களுக்கு ஏழு முதல் ஒன்பது மணி நேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வரம்பிற்குள் தூங்குபவர்களுக்கு ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
மருத்துவ ஆலோசனை அவசியம்
ஒன்பது மணி நேரத்திற்கு மேல் ஒருவர் தூங்கி பழக்கமாகி விட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவர் தூக்கத்திற்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முயற்சி செய்வார். அதிக நேரம் தூங்குவதற்கு சிலருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. குழந்தைகள், பதின்ம வயதினர், கடுமையான உடல் உழைப்பு செய்தவர்கள், சளி காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கு ஆளானவர்கள், ஒரு வாரம் முழுவதும் குறைவாக தூங்கியவர்கள் இதுபோல ஒரு நாளில் அதிகப்படியான நேரம் தூங்கலாம். தொடர்ச்சியாக நீண்ட நேரத்திற்கு மேல் தூங்குவது நல்ல அறிகுறி அல்ல. இது பெரும்பாலும் அடிப்படை உடல்நல பிரச்சனையின் பிரதிபலிப்பாகும். இது உங்களுக்கு வழக்கமான பழக்கமாக மாறி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்.