- Home
- Lifestyle
- Kids Sleep : தூங்குற குழந்தையை எழுப்பாதீங்க!! அதுக்கு பின்னால இப்படி ஒரு காரணம் இருக்கு
Kids Sleep : தூங்குற குழந்தையை எழுப்பாதீங்க!! அதுக்கு பின்னால இப்படி ஒரு காரணம் இருக்கு
குழந்தைகளுக்கு 1 மணி நேர தூக்கம் இழப்பு என்பது எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை பெற்றோர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தூக்கம் அனைவருக்குமே முக்கியமான விஷயமாகும். அதிலும் குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று என்றால் மிகையல்ல. குழந்தைகள் ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தாலும், அவர்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும். குழந்தைகளுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் ஜமா நெட்வொர்க் (JAMA Network Open) இதழில் வெளியான ஓர் ஆய்வில் குறைவான தூக்கம் குழந்தைகளை பாதிக்கும் எனவும், பள்ளியில் அவர்களின் கவனம் சிதறும் எனவும், வாழ்க்கைத் தரத்தைக் குறைத்ததாகக் கூட கண்டறியப்பட்டது. ஆரோக்கியமான குழந்தைகள் சரியாக தூங்காவிட்டால் என்ன ஆகும் என்பதை இந்த ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் குழந்தைகளின் தினசரி ஓய்வு நேரம், உணவு, செயல்பாடுகள் போன்றவை கண்காணிக்கப்பட்டன. ஆய்வின் உற்பத்தியாக குழந்தைகளின் தூக்க சுழற்சி மாற்றப்பட்டது. ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட தூக்கம் மற்றும் நீண்ட நேரம் தூக்கம் என மாறி மாறி குழந்தைகள் தூங்க வைக்கப்பட்டார்கள். இதில் ஏற்கனவே தூக்கக் கோளாறுகள் இல்லாத 8 முதல் 12 வயது வரையுள்ள ஆரோக்கியமான குழந்தைகள் 100 பேர் பங்கேற்றனர்.
இந்த ஆய்வில் குழந்தைகள் வழக்கமாக தூங்கும் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்பாக அல்லது ஒரு மணி நேரம் தாமதமாக தூங்க வைக்கப்பட்டனர். எப்படி தூங்க வைக்கும்போதும் வழக்கமான நேரத்தில் குழந்தைகள் காலையில் எழுந்து கொண்டனர். இதன் பின்னர் குழந்தைகளின் உடல்நலம், வாழ்க்கை தரம் ஆகியவை குறித்து பெற்றோரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. குழந்தைகளிடமும் அவர்களுடைய அன்றாட நாளை குறித்து கேட்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் ஒரு வாரம் அல்லது கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கூட தூக்கம் இல்லாமல் இருப்பது குழந்தைகளுடைய வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் குறைகிறது என ஆய்வு முடிவுகள் கூறின. குழந்தைகளின் உடல் நலம் மட்டுமல்லாமல் பள்ளியில் அவர்களுடைய கல்வியின் தரமும் எதிர்மறையாக பாதிக்கப்பட்டதாகத் தெரிய வந்தது.
குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால் அவர்களுடைய தூக்கத்தின் தரத்தில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். குழந்தையை சரியாக தூங்க வைக்க வேண்டும். அவர்கள் தாமதமாக தூங்கச் செல்வது ஏற்றதல்ல. குழந்தைகள் சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது அவர்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். குழந்தைகள் சரியான அளவில் சாப்பிடுகிறார்களா? சுறுசுறுப்பாக ஓடி விளையாடுகிறார்களா? வகுப்பில் கவனத்துடன் இருக்கிறார்களா? என்பது குறித்து பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையும் அவர்களுடைய வயதுக்கு ஏற்ப போதுமான அளவு தூக்கத்தை பெறுவது அவசியம். இரவில் அதிக நேரம் டிவி பார்ப்பது, செல்போன்கள் பயன்படுத்துவது அவர்களுடைய தூக்க சுழற்சியைப் பாதிக்கலாம். இரவில் திரைகளில் இருந்து வெளிப்படும் அதிகமான வெளிச்சம் அவர்களுடைய கண்களை ஓய்வில் இருந்து தள்ளி வைக்கிறது. இதனால் அவர்கள் கூடுதல் நேரம் விழித்திருக்க வேண்டிய சிக்னல்கள் மூளைக்கு அனுப்பப்படுகிறது. ஆகவே இரவில் அவர்கள் தூங்கும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக எந்த டிஜிட்டல் சாதனங்களையும் குழந்தைகள் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.