திருமணம் ஆனதும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்க இப்படியும் ஒரு காரணமா?
Hindu Marriage Rituals : புதியதாக திருமணமான மணமக்களுக்கு அன்றைய தினம் வீட்டுக்கு வந்ததும் முதலாவதாக பாலும், பழமும் தான் உண்ண கொடுப்பார்கள். இதற்கு பின்னணியில் உள்ள காரணத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Hindu Wedding Traditions In Tamil
பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர் பல விஷயங்களை பழக்கப்படுத்தியுள்ளனர். அதை பாரம்பரியமாக நாமும் பின்பற்றுகிறோம். ஆனால் நிறைய விஷயத்திற்கு பின்னிருக்கும் உண்மை நமக்கு தெரிவதில்லை. உதாரணமாக பெண்கள் சாயங்காலம் தலையை விரித்து போடக்கூடாது என சொல்வார்கள்.
ஏனென்றால் அந்த காலத்தில் பெரும்பாலானோர் வீட்டில் சமையல் மாலை நேரத்தில் தன செய்வார்கள். மின்சாரமும் கிடையாது. இந்த நேரத்தில் தலையை பின்னாமல் விரித்து போட்டிருந்தால் தலையில் உள்ள முடி சோற்றில் விழக் கூடும். இதை தவிர்க்கவே தலையை விரித்து போட வேண்டாம் என்பார்கள்.
இப்படி நாம் பின்பற்றும் ஒவ்வொரு மரபுக்கு பின்னும் ஒரு உண்மை உள்ளது. திருமணத்திலும் இப்படி பல விஷயங்களை பின்பற்றுவார்கள். தமிழ்நாட்டில் திருமணம் திருவிழா போல நடத்தப்படும் நிகழ்ச்சி. உற்றார் உறவினர் சூழ அன்றைய தினமே கொண்டாட்டமாக இருக்கும்.
Hindu Wedding Traditions In Tamil
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி திருமண சடங்குகள் மாறுபடும். பெண் அழைப்பு, திருமணம் நடைபெறும் விதம் உள்ளிட்ட விஷயங்கள் எல்லா மதத்திலும் வெவ்வேறானவை. ஆனால் எல்லோருக்கும் பொதுவாக பால், பழம் கொடுக்கும் சடங்கு உள்ளது.
இந்த சடங்கின் மதம், சாதி பாகுபாடில்லாமல் எல்லோரும் பின்பற்றும் விஷயம். ஏன் திருமணமான அன்று பாலும் பழமும் கொடுக்கிறார்கள், பாலுக்கு பதில் தேநீர் கொடுத்தால் என்ன? என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? இங்கு அதற்கான உண்மை காரணத்தை அறிந்துகொள்ளலாம்.
திருமணத்திற்கு பிறகு மணப்பெண் தான் பிறந்த வீட்டை விட்டுவிட்டு, அவள் திருமணம் செய்து கொண்ட ஆணின் வீட்டிற்கு செல்வது இந்தியா முழுக்க வழக்கமாக இருக்கிறது. இந்த சூழல் அவளுக்கு புதியதாக இருக்கும். இவ்வளவு நாள் தான் வளர்ந்த, வாழ்ந்த வீட்டை விட்டுவிட்டு இன்னொரு வீட்டில் சென்று வாழ்வது கொஞ்சம் புதிய அனுபவம் தான். இந்த சூழலில் கணவன் வீட்டில் பேசும் வார்த்தைகள் அவளுக்கு கொஞ்சம் தவறான புரிதலை கூட ஏற்படுத்தலாம்.
Hindu Wedding Traditions In Tamil
இந்த சுழலை சமாளிக்க தான் பாலும் பழமும் கொடுக்கிறார்கள். ஏனென்றால் பசுவானது நாம் விஷமே கொடுத்தாலும் அதை உண்ணும். அதனுடைய பாலில் ஒரு துளியேனும் விஷம் இருக்காது. அதைப் போல கணவன் வீட்டில் இருப்பவர்களால் கெட்ட விஷயங்களே நடந்தாலும், மோசமான வார்த்தைகளை மணம் முடித்து வந்த பெண் சொல்லக் கூடாது என்பதற்காகத் தான் பால் வழங்குகிறார்கள்.
பாலுக்கு எப்படி ஒரு காரணமோ அதைப் போல வாழைப்பழத்திற்கும் ஒரு காரணம் உண்டு. பொதுவாக வாழைப்பழம் பல ஆரோக்கிய நன்மைகள் உடையது. வாழைமரம் அடுத்த தலைமுறை வாழைக் கன்றுகளை உருவாக்கும். வாழையடி வாழையாக வாழ வேண்டும் என அதற்காக தான் வாழ்த்துவார்கள். அது போல கணவனுடன் இணைந்து வம்ச விருத்தியடைய செய்ய வேண்டும் என்றுதான் மணமகளுக்கு வாழைப்பழம் கொடுக்கிறார்கள்.
இதையும் படிங்க: கோயிலில் திருமணம் செய்தால் இப்படியெல்லாம் நன்மைகள் நடக்குமா?
Hindu Wedding Traditions In Tamil
மேலே சொன்னவை மணமகளுக்கு ஏன் பாலும் பழமும் கொடுக்கிறார்கள் என்பதற்கான காரணம். அதைப் போலவே மணமகனுக்கு ஏன் பாலும், பழமும் கொடுக்கிறார்கள் என்ற காரணம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
பாலில் தயிரும், நெய்யும் இருப்பது போல பெண்ணுக்குள் அறிவும், ஆற்றலும் இருப்பதை உணர்த்துவதற்காகவே மணமகனுக்கு பால் கொடுக்கப்படுகிறது. பாலை உறையிட்டு தயிரும், அதை பக்குவமாக கடைந்தெடுத்து நெய்யுமாக தயார் செய்ய வேண்டுமே தவிர அதை வீணாக்கக் கூடாது. அப்படி தான் மணப்பெண்ணின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டுமே தவிர அதை மூடர் போல வீணடிக்கக் கூடாது.
வாழை மரத்தின் அடியில் வாழை கன்றுகள் முளைத்திருக்கும். அவற்றை தாய் மரத்தின் வேரிலிருந்து எடுத்து மற்றொரு இடத்தில் வளர்ப்பது போல அந்த பெண்ணை பிறந்த வீட்டில் இருந்து பிரித்து மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவளிடமிருந்து தன்னுடைய சந்ததிகளை மணமகன் நல்லபடியாக விருத்தி செய்ய வேண்டுமே தவிர அவளை ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதை உணர்த்த தான் மணமகனுக்கு வாழைப்பழம் கொடுக்கிறார்கள்.
Hindu Wedding Traditions In Tamil
முன்னோர் செய்யும் மரபுகளுக்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். எந்த விஷயத்தையும் அவர்கள் பொதுவாக செய்வது கிடையாது. அது போல தான் திருமணம் ஆனதும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கிறார்கள். இனிமேல் ஏதேனும் திருமண நிகழ்வில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுப்பதை நீங்கள் கண்டால், அவர்களுக்கு அதை ஏன் கொடுக்கிறார்கள் என்ற காரணத்தை சொல்லிக் கொடுங்கள். இந்த தலைமுறையும் அதை தெரிந்து கொள்ளட்டும்.
இதையும் படிங்க: நெற்றியில் பொட்டு வைப்பதால் சுகப்பிரசவம் ஆகுமா? குங்குமம் வைப்பதன் உண்மையான பின்னணி என்ன தெரியுமா?