- Home
- Lifestyle
- Parenting Tips : பெற்றோரே! குழந்தைங்க சோர்வாகவே இருக்க என்ன காரணம் தெரியுமா? சாதாரணமாக விடக் கூடிய விஷயமல்ல!!
Parenting Tips : பெற்றோரே! குழந்தைங்க சோர்வாகவே இருக்க என்ன காரணம் தெரியுமா? சாதாரணமாக விடக் கூடிய விஷயமல்ல!!
குழந்தைகள் எப்போதும் சோர்வாக காணப்படுவது சில பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். பெற்றோர் எதை கவனிக்க வேண்டும் என இங்கு காணலாம்.

Child Fatigue Causes
குழந்தைகள் அடிக்கடி சோர்வாக காணப்பட ஊட்டச்சத்து குறைபாடுகள், போதுமான தூக்கமின்மை, வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்படி அடிக்கடி சோர்வாக இருப்பது குழந்தையின் ஒட்டுமொத்த உடல், உள்ள ஆரோக்கியம், வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். உங்களுடைய குழந்தைக்கு இரும்புச்சத்து, வைட்டமின் டி அல்லது பி12 ஆகிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காத போது உடல்களால் போதுமான ஆற்றலை உற்பத்தி செய்ய முடியாது. இதனால் சோர்வாக இருப்பார்கள். அதிலும் இரும்புச்சத்து குறைபாடு, வளரும் குழந்தைகளில் சோர்வு வர முக்கிய காரணமாகும்.
என்ன உணவுகள் கொடுக்கலாம்?
இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை, பருப்பு, முட்டை, தானியங்களை நாள்தோறும் உணவில் சேர்க்க வேண்டும். இந்த உணவுகளுடன் வைட்டமின் 'சி' காணப்படும் பழங்களையும் கொடுக்க வேண்டும். இது இரும்புச்சத்து உறிஞ்சுதலுக்கு அவசியம்.
அறிகுறிகள்
குழந்தைகளின் தோற்றம் வெளிர் நிறமாக இருந்தால், விரைவில் சோர்வடைந்தால், அடிக்கடி தலைச்சுற்றல் இருப்பதாகச் சொன்னால் அவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். சிவப்பு இறைச்சி, பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற இலை கீரைகள் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும்.
நல்ல தூக்கம்
தூங்க செல்லும் முன் செல்போன், கணினி, டிவி பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் திரை நேரம் மெலடோனின் உற்பத்தியை சீர்குலைக்கும். இதனால் தூக்கம் பாதிப்படையும். ஒரு 6 வயது குழந்தை 9–12 மணிநேரம் தூங்க வேண்டும். குழந்தைகளின் 12 வயது வரைக்கும் 9 முதல் 12 மணி நேர தூக்கம் அவசியம்.
நீரிழப்பு
குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது அவர்களை சோம்பலாகவும், சோர்வாகவும் உணர செய்யும். நீரிழப்பு குழந்தைகளை ஆக்டிவாக இருப்பதிலிருந்து விலக்கிவிடுகிறது. குழந்தைகள் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதால் தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறார்கள். ஏற்கனவே அவர்கள் உடம்பில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியேறுவதால் விரைவில் நீரிழப்பு ஏற்பட்டு சோர்வடைகிறார்கள். நாள்தோறும் உங்கள் குழந்தை குறைந்தபட்சம் 6 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பதை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். குழந்தைளுக்கு கூல்ட்ரிங்ஸ் மாதிரியான சர்க்கரை பானங்களைத் தவிர்த்து, இளநீர் கொடுத்து பழக்கலாம்.
சாப்பிடும் முறை
அளவுக்கு அதிகமான உணவை உண்பது அல்லது சாப்பிடாமல் இருப்பது ஆகிய இரண்டு பழக்கங்களும் குழந்தைகளை பலவீனமடையச் செய்யும். இதனால் அவர்கள் சோர்வாக காணப்படுவார்கள். காலை உணவை தவிர்த்தால் இரத்த சர்க்கரை அளவு குறைந்து, சோர்வாக காணப்படுவார்கள்.
மன அழுத்தம்
குழந்தைகளுடைய மனதில் சொல்ல முடியாத உணர்வுகள் பொதிந்து கிடக்கும் போது அவர்கள் சோர்வாக காணப்படுவார்கள். பள்ளிகளில் ஏதேனும் அழுத்தம், நண்பர்களுக்குள் சச்சரவு என உணர்ச்சிரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சோர்வாக இருப்பார்கள். குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை பெற்றோருடன் வெளிப்படுத்தும் அளவிற்கு உறவை மேம்படுத்துவது பெற்றோரின் கடமையாகும். தங்களுடைய மனதில் இருப்பதை நண்பரிடம் பகிர்வது போல பெற்றோருடன் குழந்தைகள் பகிர வேண்டும். இது அவர்களுடைய மனச்சோர்விலிருந்து விடுவிக்கும்.
சரிவிகித உணவு, நல்ல தூக்கம், மன ஆரோக்கியம் உள்ள குழந்தைகள் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை சரியாக பின்பற்றிய பிறகும் உங்களுடைய குழந்தை அடிக்கடி சோர்வடைந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.