Parenting Tips : பெற்றோரே! உங்க குழந்தை புத்திசாலியா வளரனுமா? வொர்த்தான 5 டிப்ஸ் இதோ!!
குழந்தைகளின் அறிவுக் கூர்மையை வளர்க்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் 5 டிப்ஸ்களை இங்கு காணலாம்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு சில நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்தால் அவர்களுடைய அறிவாற்றல், உணர்ச்சி இரண்டும் சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் மூளை ஆரோக்கியம், படைப்பாற்றல், உணர்ச்சிகளை கையாளும் திறன் ஆகியவற்றை ஆதரிக்கும் ஐந்து விஷயங்களை இங்கே காணலாம்.
தொழில்நுட்பம் வளர்வதற்கு முன்பாக பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளை உறங்க வைக்க இரவில் கதை சொல்வார்கள். இன்றும் சிலர் இதை பின்பற்றுகிறார்கள். இது குழந்தைகளின் கற்பனை, மொழித்திறனை வளர்க்கிறது. குழந்தைகளுடன் அமர்ந்து கதைகள் படிப்பது, அதில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து பேசுவது, கதை சொல்லும்போது அவர்களின் ஆர்வத்தைக் கிளறி கற்பனையைத் தூண்ட வேண்டும். அவர்கள் வளர்ந்து என்னாவாக போகிறார்கள் போன்ற கேள்விகளைக் கேட்டு பேசத் தூண்டுங்கள். இது அவர்களுடைய புரிதலையும், புரிந்து கொள்ளும் திறனையும் மேம்படுத்தும்.
குழந்தைகளை சுதந்திரமாக வளர்க்க வேண்டும். அவர்கள் சொந்தமாக பேசும் சூழலை உருவாக்கித் தரவேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை தீர்க்கும் தைரியமும், சுயமாக முடிவெடுக்கும் மனப்போக்கும் அவர்களுக்கு ஏற்படும். பிடித்த ஆடைகளை தேர்வு செய்வது, பிடிக்காத உணவை நிராகரிப்பது என அவர்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்கும் இடம் அளிக்க வேண்டும். மற்ற குழந்தைகளுடன் அவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். இதனால் அவர்களுடைய தன்னம்பிக்கையும் தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும்.
குழந்தையின் அறிவாற்றலை மேம்படுத்த, நினைவாற்றலை அதிகரிக்க, கவனச் சிதறலைக் குறைக்க சில செயல்பாடுகளை பழக்க வேண்டும். களிமண்ணில் கை வேலைகள், மணிகளை வரிசைப்படுத்துதல், ஓவியம் வரைதல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம். இது கவனத்தை மேம்படுத்தும். சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
உணர்ச்சிகளை புரிந்து கொண்டு பேச கற்றுக் கொடுக்க வேண்டும். இது அவர்களுடைய மூளை வளர்ச்சியின் ஒரு பகுதிதான். குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்போது அதை காது கொடுத்து கேளுங்கள். நீங்கள் அவர்களை புரிந்துகொள்வதாகவும், அவர்கள் உங்களை அறிந்து கொள்வதாகவும் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். இது நாளடைவில் சவால்களை கையாள, வலுவான உறவுகளை உருவாக்க அவர்களைத் தயாராக்கும்.
குழந்தைகளுக்கு மன அமைதியை வழங்கும் தியானம் போன்ற எளிய மன உறுதிப் பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கலாம். எந்த அழுத்தமும் இன்றி அமைதியாக இருக்க அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படி மன உறுதியை தொடர்ந்து பயிற்சி செய்தால் அவர்களின் கவனம் மேம்படும். இது அவர்களுடைய பதட்டத்தைக் குறைக்கும்; உணர்ச்சி மேலாண்மைக்கு உதவும். சுயக் கட்டுப்பாடு, மன உறுதி போன்றவை வாழ்வில் அவர்களுக்கு சிறந்த அடித்தளமாக இருக்கும்.
மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பெற்றோர் சரியாக பின்பற்றினால், அவர்களின் குழந்தைகள் புத்திசாலியாகவும், உணர்வுகளை கையாள தெரிந்தவர்களாகவும் வளருவார்கள்