- Home
- Lifestyle
- மீன் குழம்பை எத்தனை நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்? ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறுமா?
மீன் குழம்பை எத்தனை நாள் வரை வைத்து பயன்படுத்தலாம்? ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறுமா?
Meen Kulambu Ethanai Naal Vaithu Sapidalam : மீன் குழம்பை பலரும் 2-3 நாட்கள் வரை வைத்து சூடாக்கி சாப்பிடுவார்கள். இது சரியான முறையா? மீன் குழம்பை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாமா? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மீன் குழம்பு (Fish Gravy)
அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் கடல் உணவுகளும் ஒன்றாகும். கடல் உணவிலும் குறிப்பாக மீன் பலருக்கும் விருப்பமான தேர்வாக இருக்கிறது. நமது இல்லங்களில் முதல் நாள் வைத்த மீன் குழம்பை அடுத்த நாள் வைத்து சாப்பிடுவது வழக்கம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, அதன் சுவையும் அபாரமாக இருக்கும். சிலர் மீன் குழம்பை ஒருநாள் சமைத்துவிட்டு அடுத்த 4-5 நாட்களுக்கு அதையே வைத்து சாப்பிடுகின்றனர். இது சரியான முறையா? அவ்வாறு சாப்பிடலாமா? அதனால் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து பார்க்கலாம்.
மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
மீன் குழம்பை தாராளமாக ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். மீன் போன்ற உணவுகள் அறை வெப்ப நிலையில் விரைவில் கெட்டுவிடும் என்பதால் சமைத்த பிறகு ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. இது குழம்பை பாதுகாப்பதுடன் மீனில் அழுகிய துர்நாற்றம் வீசுவதையும் தடுக்கும். ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன்பு குழம்பு சூடாக இருக்கக் கூடாது. நன்கு ஆற வைக்க வேண்டும். பின்னர் ஒரு காற்றுப் புகாத பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். சூடான குழம்பை நேரடியாக வைத்தல் கூடாது. அது மற்ற உணவுகளையும் பாதித்து ஃபிரிட்ஜின் செயல் திறனையும் குறைக்கும்.
எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?
ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட மீன் குழம்பை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை பாதுகாப்பாக வைத்து சாப்பிடலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் பிரிட்ஜில் எடுத்த பின்னர் குழம்பை அறை வெப்ப நிலைக்கு கொண்டு வந்த பிறகு மீண்டும் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இரண்டாவது நாள் சாப்பிடுவதற்கு முன்னர் குழம்பை நன்றாக சூடு படுத்தி மீன் கெட்டுப் போகவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு சாப்பிடலாம். மூன்றாவது நாள் சாப்பிடுவதற்கு முன்னர் குழம்பில் ஏதேனும் கெட்ட வாடை வருகிறதா? அல்லது புளித்து விட்டதா? அல்லது மீன் துண்டுகளில் ஏதேனும் மாற்றங்கள் வித்தியாசமான நிறமாற்றம் இருக்கிறதா என்பதை கவனித்து அதன் பின்னர் சாப்பிட வேண்டும்.
மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது
ஃபிரிட்ஜில் இருந்து எடுத்த பின்னர் ஒருமுறை சூடு படுத்தினால் போதுமானது. சூடுபடுத்திய குழம்பை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துதல் கூடாது. அவ்வாறு செய்தால் அதன் சுவை, சத்துக்கள் குறையக்கூடும். குழம்பை கரண்டியால் எடுக்கும் பொழுது ஈரம் இல்லாத கரண்டியை பயன்படுத்த வேண்டும். ஈரமான கரண்டியை பயன்படுத்தும் பொழுது குழம்பு சீக்கிரம் கெட்டுப் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. மீன் குழம்பை சேமிப்பதற்கு ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம். காற்று மற்றும் ஈரப்பதத்தை உள்ளே அனுமதிக்க கூடாது. ஃபிரிட்ஜ் 4 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குழம்பை முறையாக சேமிக்கும் முறை
மீன் குழம்பில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள், புளி, எண்ணெய் உப்பு ஆகியவை இயற்கையாகவே பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். தமிழ்நாட்டு பாணியில் வைக்கப்படும் மீன் குழம்பில் மசாலாக்கள் அதிகம் இருப்பதால் குழம்பு அவ்வளவு விரைவில் கெட்டுப்போகாது. ஃபிரிட்ஜில் வைப்பதற்கு முன்னர் மீன் துண்டுகளை தனியாக வைத்து விட்டு குழம்பை. மட்டும் சேமித்தால் மீன் துண்டுகள் நீண்ட நேரம் குழம்பில் ஊறுவதால் ஏற்படும் அமைப்பு மாற்றத்தை தவிர்க்கலாம். மீன் குழம்புகளை அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பாதுகாப்பாக சேமித்து உண்ணலாம். மூன்று நாட்களுக்குள் குழம்பில் நிற மாற்றங்கள் அல்லது துர்நாற்றம் வந்தால் சாப்பிடக்கூடாது. குழம்பின் வாசனை, நிறம் மற்றும் அமைப்பை சரிபார்த்து பாதுகாப்பான முறைகளை பின்பற்றி சாப்பிடலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

