வீட்டில் ஒட்டடை வராமல் இருக்கணுமா? தண்ணீருடன் இதை கலந்து ஒரு முறை பயன்படுத்தினால் போதும்!!
House Cleaning Tips : வீட்டின் அழகே அதன் தோற்றம் தான். அந்த தோற்றத்தை வீட்டில் ஆங்காங்கே காணப்படும் ஒட்டடை தான் கேவலமாக மாற்றும். அதை தவிர்க்க என்னென்ன செய்யலாம் என இந்தப் பதிவில் காணலாம்.
நமது வீடு வெறும் சுவர்கள் அல்ல. அதுவே நம் அடையாளம். ஓடியாடி உழைக்கும் நம் உடல், ஓயாமல் சிந்திக்கும் மனம் அமைதியடையும் இடம் வீடுதான். வீட்டை நன்றாக பராமரிப்பது அழகுக்காக மட்டுமின்றி சுகாதாரமானதும் கூட. வீடு சுத்தமாக இருப்பது உடல்நலத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதை போல மனதில் நேர்மறை ஆற்றல் உருவாகவும் உதவும். ஆனால் வீட்டை சுத்தமாக வைப்பது சவாலான காரியம்.
வீட்டை சுத்தம் செய்யும்போது அதிக சவாலாக மாறுவது ஒட்டடை தான். ஜன்னல்கள், கதவுகள், வீட்டின் இடுக்குகள், வீட்டின் மூலைகள், ஃபேன் என வீட்டின் பல பகுதியில் ஓட்டடை வரும். அதனை தவிர்க்க நினைத்தாலும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். வீட்டை கீழே சுத்தம் செய்துவிட்டு மேலே படர்ந்துள்ள ஒட்டடையை சுத்தம் செய்யாமல் விட்டால் வீடு அலங்கோலமாக தான் இருக்கும். ஒட்டடை வராமல் எப்படி தடுக்கலாம்? என்ன செய்தால் அது திரும்ப வராது என்ற தகவல்களை இங்கு காணலாம்.
சிலந்திகள் இருட்டான, இரைச்சல் இல்லாத இடங்களை அதிகம் விரும்பும். ஆகவே நீங்கள் வீட்டை சுத்தமாகவும் வெளிச்சமாகவும் வையுங்கள். குடோன், ஷெட் போன்றவைகளை அழுக்கடையாமல் சுத்தமாக வையுங்கள்.
வினிகர்:
வீட்டில் ஒட்டடை வராமல் தடுக்க முதலில் அதனை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த இடத்தில் வினிகர் பயன்படுத்த வேண்டும். வினிகர் ஒட்டடையை வராமல் தடுக்கும். 1:1 விகிதம் என்ற அளவில் தண்ணீர் மற்றும் வினிகர் கலந்து கொள்ளுங்கள். இதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஒட்டடை வரக்கூடிய இடத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இதனால் சில நாள்கள் வரை ஒட்டடை வராமல் இருக்கும். மீண்டும் சில நாள்கள் கழித்து வீட்டை சுத்தம் செய்து மீண்டும் ஸ்ப்ரே செய்தால் சிலந்தி வலை உருவாகாது.
யூகலிப்டஸ்:
தைல மரம் என சொல்லப்படும் யூகலிப்டஸ் வீட்டில் பூச்சிகளை அனுமதிக்காது. ஏனெனில் அதன் வாசனை பூச்சிக்களுக்கு பிடிக்காது.
இதையும் படிங்க: வீட்டை சுத்தமா வச்சிக்க இல்லத்தரசிகளுக்கான சூப்பர் டிப்ஸ்!!
பெப்பர்மின்ட்:
ஒட்டடைக்கு காரணமான சிலந்திகளை ஒழித்து கட்ட பெப்பர்மின்ட் ஆயில் பயன்படுத்தலாம். இதன் வீரியமான வாசனை சிலந்தி போன்ற பூச்சிகளை வீட்டில் இருந்து நீக்க உதவும். இதனை வீடு வாசனையாக இருக்கவும் பயன்படுத்தலாம். இது தவிர டீ ட்ரீ, லாவண்டர், ரோஸ், பட்டை போன்றவற்றின் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சிட்ரஸ்:
சிட்ரஸ் பழங்களில் இருந்து எழும் வாசனையை சிலந்திகள் விரும்பாது. அதனால் சிட்ரஸ் பழங்களின் தோலை ஜன்னல்கள், கதவுகள், புத்தக அலமாரிகளில் நன்கு தேய்த்துவிடுங்கள். வீட்டை சுத்தம் செய்யும் போது எலுமிச்சை வாசனையுள்ள பொருள்களால் சுத்தம் செய்யுங்கள். சிட்ரோனெல்லா மெழுகுவர்த்திகளை வீட்டுக்குள்ளும் வெளியிலும் எரியவிடுங்கள்.
பூண்டு
பூண்டு வாசனைக்கு பூச்சிகள் வராது என்பார்கள். ஏனெனில் அதன் வாசனை வீரியமானது. கிராம்புக்கும் பூச்சிகளை விரட்டும் திறனுண்டு. முழு கிராம்பு அல்லது நொறுக்கிய கிராம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி கொள்ளுங்கள். இதனை வீட்டின் மூலைகளில், ஜன்னல்களில் ஸ்ப்ரே செய்யுங்கள். இதனால் பூச்சிகள் ஒழியும்.
விளக்குகளை அணையுங்கள்:
விளக்குகள் சிலந்திகளை ஈர்க்காது. ஆனால் சிலந்திகள் உண்ணும் பூச்சிகளை கவர்வது விளக்குகள் தான். எவ்வளவு பூச்சிகள் வீட்டில் இருக்கிறதோ அவ்வளவு சிலந்திகளை நீங்கள் வளர்ப்பதாக அர்த்தம். ஏனெனில் உணவு இருக்கும் இடத்தில் தான் சிலந்திகள் இருக்கும். அதனால் அநாவசியமான நேரங்களில் விளக்குகளை அணைத்துவிடுங்கள். பூச்சிகள் ஒழிந்தால் சிலந்திகளும் ஒழிந்துவிடும். ஒட்டடையும் அடையாது.
வீட்டு சுத்தம்:
நீங்கள் 4 ஸ்ப்ரே செய்தாலும் வீட்டை சுத்தமாக பராமரித்தால் தான் ஒட்டடை வராமல் தடுக்க முடியும். அப்படி செய்யாவிட்டால் மீண்டும் மீண்டும் ஒட்டடை வர வாய்ப்புள்ளது. மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றுவதுடன் மாதத்தில் ஒருமுறை வீட்டை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். வீடு சுத்தமாக இருந்தால் வாழ்வில் பாதி பிரச்சனைகள் அதுவே தீர்ந்துவிடும். ஏனெனில் மன நிம்மதியை ஏற்படுத்துவது நாம் வாழும் இடம் தான். அது சரியாக இருந்தால் எல்லாமே சுபம் தான்.
இதையும் படிங்க: வீட்டில் எலிகள் அட்டூழியம் பண்ணுதா? உங்களுக்காக நச்சுனு நாலு டிப்ஸ் இதோ!